• Tue. Apr 7th, 2026

24×7 Live News

Apdin News

எரிவாயு விலை உயர்வால் மக்கள் மீண்டும் விறகு அடுப்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்

Byadmin

Apr 7, 2026


நாட்டில் சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை பாவனையாளர் முன்னணி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத், எரிவாயு விலை உயர்வால் நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எரிவாயுவைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், இனிவரும் காலங்களில் மீண்டும் விறகு அடுப்புகளையும் சிரட்டை அடுப்புகளையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

குறிப்பாக, சிரட்டைகளைப் பயன்படுத்தி எவ்வாறு அடுப்புக்களை உருவாக்குவது என்பது குறித்து தான் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விலை உயர்வால் உணவக உரிமையாளர்களும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், கொத்து மற்றும் பிரைட் ரைஸ் போன்ற உணவுகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சாதாரண மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் பராட்டா, வடை மற்றும் தேநீர் போன்ற உணவுகளின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், குறைந்த வருமானம் பெறுவோரின் போஷாக்கு மட்டம் பாதிக்கப்படும் என அவர் எச்சரித்தார். எவ்வாறாயினும், மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில், அதாவது 200 ரூபாவிற்கு சோறு மற்றும் பருப்பு போன்றவற்றை வழங்க முன்வருமாறு அவர் உணவக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான விலை உயர்வுகள் மற்றும் நீர் விநியோகக் குறைபாடுகள் குறித்து கடுமையாகச் சாடிய அசேல சம்பத், முறையான திட்டமிடல் இல்லாததால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகக்கூடப் போராட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

முந்தைய காலங்களில் எரிவாயு விலைகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய ஆட்சியாளர்கள் நிறுவனங்களின் லாபத்தையே முதன்மையாகக் கருதுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நீர் ஆதாரங்கள் நிறைந்த இலங்கையில் மக்களுக்குத் தடையற்ற நீர் விநியோகத்தை வழங்கத் தவறியுள்ள அரசாங்கம், இனியாவது கிராம மட்டங்களில் கிணறுகள் மற்றும் குழாய் கிணறு திட்டங்களை ஊக்குவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாவனையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்கத் தவறினால் மக்கள் பெரும் பட்டினிச் சாவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

By admin