சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஒருமுறை வீட்டின் ஃப்ரிட்ஜின் அடிப்பாகத்தை சுத்தம் செய்வதற்காக தனியே கழற்ற முயன்றபோது அவருக்கு சற்று அதிர்ச்சி காத்திருந்தது. அதில் எலி ஒன்று இருந்துள்ளது. வீட்டின் மற்ற பகுதிகளில் இருந்திருந்தால் கூட, அது அங்கே செல்வதற்கான வழி இருந்திருக்கும் என நினைக்கலாம். ஆனால், ஃப்ரிட்ஜின் அடியில் நன்கு மூடப்பட்ட பகுதியில் அது எப்படி சென்றது என்பது அவருக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
இப்படி, நீங்கள் நினைக்காத இடங்களிலெல்லாம் சிறு கண்களை உருட்டிக்கொண்டும், நாம் பிடிக்க எத்தனிக்கும்போது கண்ணிமைக்கும் நொடியில் ஓடிவிடும் இந்த எலிகள் சென்னை மாநகரின் பெரும்பாலான வீடுகளில் எங்கோ ஒளிந்துகொண்டுதான் இருக்கின்றன. சிலருக்கு எலிகள் என்றாலோ அல்லது அவை எங்காவது இறந்துகிடந்தால் ஏற்படும் நாற்றத்தையோ சகித்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல, எலிகளால் ஏற்படும் உடல்நல பிரச்னைகளும் அதிகமாக உள்ளன.
இந்த எலிகளால் ஏற்படும் முதன்மையான உடல்நல பிரச்னையாக ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ எனும் நோய் உள்ளது. இந்த நோய், ஆண்டுதோறும் சென்னை மாநகரில் சராசரியாக 500-660 பேர் என்றளவில் பாதிக்கப்படுவதாக, சென்னை மாநகராட்சியின் வெக்டர் கன்ட்ரோல் பிரிவு அதிகாரி செல்வகுமார் தெரிவித்தார். இப்பிரிவு, கொசுக்கள், பூச்சிகள், எலிகள் போன்றவை பரப்பும் நோய்களை கட்டுப்பத்துவதற்கான தனிப்பிரிவாகும்.
ஒரு நகரத்தில் ஆண்டுதோறும் நிலையாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் லெப்டோஸ்பைரோசிஸ் வழக்குகள் பதிவாகின்றன என்றால், அங்கு நிலவும் எலி தொல்லையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்றே அர்த்தம் என்கிறார் செல்வகுமார்.
“சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் எலிகள் அதிகமாக (Hotspots) உள்ளன என கூற முடியாது, ஆனால் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
இப்போதே இந்தாண்டு 600க்கும் குறையாமல் லெப்டோஸ்பைரோசிஸ் பாதிப்பு சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் அவர். பெரும்பாலும் எலி பொந்துகள் அமைத்து வாழ்பவை, மழைக்காலங்களில் அதற்குள் தண்ணீர் புகும் என்பதால், அக்காலத்தில் அவை வெளியே வந்து இன்னும் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரியும். “எனவே, இனிவரும் மழைக்காலத்தில் லெப்டோஸ்பைரோசிஸ் வழக்குகள் அதிகரிக்கவே செய்யும்,” என்கிறார் செல்வகுமார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்
லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள்
எலிகளுக்குள் இருக்கும் லெப்டோஸ்பைரா (Leptospira) எனும் பாக்டீரியா, அதன் சிறுநீர், மலம் ஆகிய கழிவுகள் மூலம் நாம் அருந்தும் தண்ணீர், உணவுகளில் கலந்து ஏற்படும் நோய்தான் லெப்டோஸ்பைரோசிஸ்.
இந்த நோயின் அறிகுறிகள் குறித்து பேசிய தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலஷ்மி, “லெப்டோஸ்பைரோசிஸுக்கு காய்ச்சல் தவிர பெரிதாக எந்த அறிகுறியும் இருக்காது. தீவிர நிலையில் சிறுநீரக, கல்லீரல் பிரச்னைகள், மூளை காய்ச்சல் ஏற்படும்.
சென்னையிலிருந்து லெப்டோஸ்பைரோசிஸ் பாதிப்பால் வருபவர்களுக்கு இத்தகைய தீவிர ஆபத்துகள் இருப்பதில்லை. ஏனெனில், பல ஆண்டுகளாக இந்நோய் சென்னையில் நிலையாக இருப்பதால், அதற்கான எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பார்கள் என்பதால், தீவிரமாக இருப்பதில்லை. ஆனால், வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தீவிரமான அறிகுறிகள் உள்ளன” என கூறுகிறார்.
காய்ச்சலுடன், உடல் வலி, சோர்வு ஆகியவை ஏற்படும். பின்னர், ரத்தக்கசிவு, ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைவது, குழப்பமான மனநிலை போன்றவையும் ஏற்படும். நாள்பட்ட காய்ச்சல் இருக்கும்போது லெப்டோஸ்பைரோசிஸ் பரிசோதனை செய்ய நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
“இதை காய்ச்சல் வந்த முதல் ஒருவாரத்தில் பரிசோதித்தால் தொற்று பாதிப்பு இருப்பது தெரியாது.” என்கிறார் விஜயலட்சுமி.
லெப்டோ ஸ்பைரோசிஸ் தொற்று தவிர எலிகளால், உணவு நஞ்சாதல், பாஸ்டுரெல்லா போன்ற பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுகின்றன என மருத்துவர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
சென்னையில் இந்தளவுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், தலைநகரில் எவ்வளவு எலிகள் இருக்கலாம்? எலிகள் கழிவு நீர் தொட்டிகள், கால்வாய்கள், பொந்துகளில் வாழ்பவை என்பதால் அவற்றை கணக்கிடுவது கிட்டத்தட்ட சாத்தியமில்லாதது. ஆனாலும், தோராயமாக எவ்வளவு எலிகள் இருக்கலாம் என்பதை கூறினார் வெக்டர் கன்ட்ரோல் பிரிவு அதிகாரி செல்வகுமார்.
“சென்னை பெருநகரில் எலிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை 1:6 என்றளவில் உள்ளது. அதாவது ஒரு மனிதருக்கு 6 எலிகள். சென்னையில் தோராயமாக 80 லட்சம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால், என்றால், 4.80 கோடி எலிகள் இருக்கும்.”
பட மூலாதாரம், Getty Images
எலிகள் குறித்த புகார்கள் எலிகள் உள்ளிட்டவற்றை பிடிக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வருவதாக கூறுகின்றனர்.
அத்தகைய தனியார் நிறுவனத்தை சேர்ந்த காளியம்மாள் என்பவரிடம் பேசியபோது, “சென்னையில் எலிகள் அதிகமாகியுள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதும் கடினமாகத்தான் உள்ளது. நஞ்சு கலந்த உணவை வைப்பதோ, அல்லது ரசாயனம் கலந்த ஸ்பிரே அடிப்பதோ வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்தானது. எனவே, எலிகள் எந்த இடங்களிலிருந்து வருகின்றனவோ, அதை முழுவதும் தடுத்துவிட்டு ‘கம் பேட்’ (gum pad – ஓர் அட்டையில் உள்ள பசையில் எலிகள் ஒட்டிக்கொள்வது போன்றது) வைத்துப் பிடிப்போம்.” என்றார்.
அதே நிறுவனத்தை சேர்ந்த திருமுருகன் கூறுகையில், “வீடுகளுக்கு வெளியே என்றால் ‘ரேட் கேக்’ வைப்போம். சென்னையில் எலிகள் அதிகமாகத்தான் உள்ளன. மழைக்காலத்தில் இன்னும் அதிகமாகும்.” என்றார்.
என்றாலும், இந்த தொற்று திடீரென அதிகளவில் உயரவில்லை என்கிறார், சென்னை மாநகராட்சியின் மருத்துவ அதிகாரி ஜெகதீசன்.
“சென்னையில் லெப்டோஸ்பைரோசிஸ் திடீரென அதிகளவில் உயரவில்லை. பருவகாலங்களுக்கு ஏற்ப சற்று அதிகரிக்கும். ஆனால், அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரிக்கவில்லை. நோய்களை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை வழங்குவதும் அவற்றை கட்டுப்படுத்துவதும் தான் முக்கியம், அதனை வெக்டர் கன்ட்ரோல் பிரிவு செய்து வருகிறது” என கூறுகிறார் ஜெகதீசன்.
எலி பொந்துகள், சேறு நிறைந்த பகுதிகளில் உள்ள எலிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளை இந்த பிரிவு செய்கிறது எனக்கூறிய அவர், சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகிறோம் என்றார்.
எலிகள் பெரும்பாலும் நாம் குப்பைகளில் போடும் உணவுக் கழிவுகளை குறிவைத்தே நம் சுற்றுப்புறங்களுக்கு வருகின்றன. எனவே, சுகாதாரமான சுற்றுப்புறம் என்பது எலிகளை கட்டுப்படுத்துவதில் முக்கியமான ஒன்றாக உள்ளது.
எலிகளை கட்டுப்படுத்த என்ன செய்யப்படுகிறது?
“எங்கெல்லாம் ஓரிடத்தில் எலிகள் அதிகமாக இருப்பதாக புகார்கள் வருகின்றனவோ அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மெரினா கடற்கரையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை எலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய இடங்களில் எலிகளுக்கென நஞ்சு கலந்த கேக் வைக்கப்படுகின்றன.
ஆனால் இவை போதாது. கொசு தொல்லை, அதைத்தொடர்ந்து தற்போது தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு எப்படி முக்கியத்துவம் தருகிறோமோ, அதே முக்கியத்துவத்தை எலிகளுக்கும் தரவேண்டும். ” என கூறுகிறார் செல்வகுமார்.
எலிகளுக்கென தனியாக ‘ரோடென்ட் கன்ட்ரோல் யூனிட்’ (Rodent contol unit) அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். எலிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அப்பிரிவில் இணைந்து, அதுதொடர்பாக ஏதேனும் தீர்வு வழங்க முடியுமா என ஆலோசிக்கலாம் என்கிறார்.
எலிகள் உங்கள் வீடுகளுக்கு வராமல் இருக்க என்ன செய்வது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்
உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் காலி இடங்களை குப்பை தொட்டிகளாக பயன்படுத்தக் கூடாது.
சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வீடுகளை சுற்றி எங்கும் துளைகள் இருக்கக்கூடாது. கேபிள் லைன்கள், பைப்லைன் ஆகியவற்றில் இடைவெளி இருக்கக் கூடாது. எலிகள் வீடுகளுக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடாது.
சென்னை மட்டுமல்லாமல், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களிலும் எலிகளின் தொல்லை குறித்தும் அதனால் மக்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்னைகள் எலிக்கடி தொல்லை போன்றவை குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாகிவருகின்றன.
அதுமட்டுமல்ல, பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலும் மக்கள் எலி தொல்லையால் அவதிப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் ஒரு கோடி முதல் 12 கோடி வரை எலிகள் இருக்கலாம் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 2023 முதல் இந்தாண்டின் நடுப்பகுதி வரை 5 லட்சத்துக்கும் அதிகமாக, எலிகளால் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
ஏன் அதிகரிக்கின்றன?
பட மூலாதாரம், Universal Images Group via Getty Images
அதேபோன்று, எலிகளுக்கு ஓர் ‘சூப்பர்பவர்’ இருக்கிறது. எதையாவது ஒவ்வாத ஒன்றை உண்டால் அதை உடனேயே கண்டுபிடித்து மேற்கொண்டு அதை சாப்பிடாமல் இருந்துவிடும், இதனாலும் அவற்றுக்கு வைக்கப்படும் நஞ்சை மேற்கொண்டு சாப்பிடாமல் இருந்துவிடுகின்றன.
சில நாடுகளில் அவற்றைக் கொல்வதற்காக வைக்கப்படும் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறனை வழங்கும் மரபணு பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளதாலும் எலிகளை கட்டுப்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
எலிகளின் எண்ணிக்கை அதிகமாவதற்கு அதிகரித்துவரும் வெப்பநிலையும் காரணமாக இருக்கலாம் என, எலிகள் குறித்து ஆய்வு செய்துவரும் பாபி காரிகனின் ஆய்வு பரிந்துரைக்கிறது. கிராமப்புறங்களைவிட நகரங்களில் உள்ள கட்டடங்களில் வெப்பம் அதிகரிப்பதுவும் ஓர் காரணமாக இருக்கலாம் என ஆய்வு கூறுகிறது.
தொல்லை மட்டுமல்ல
மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை, கொட்டைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம் செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக கூறுகிறார் இவர்.