5
‘ஸ்பேஸ் எக்ஸ்’ உரிமையாளர் எலொன் மஸ்க்கின் ஆளுகைக்கு உட்பட்ட அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தினால் பயனற்றதாகக் கருதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன.
அமெரிக்காவின் அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலின் பிரகாரம், பயனற்ற செயற்திட்டங்களாகக் கருதப்பட்டு 199 திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
சுமார் 35 முகவரமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கடந்த இரு தினங்களாக பரந்துபட்ட ரீதியில் ஆராயப்பட்டு இந்த 199 திட்டங்களும் நிறுத்தப்பட்டிருப்பதாக அரசாங்க செயற்திறன் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவந்த ஆசிய பசுபிக் – இலங்கை காலநிலை மாற்ற சவால்களை இழிவளவாக்கல் செயற்திட்டம் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறைகளை நடாத்தல் ஆகிய இரண்டும் நிறுத்தப்பட்டுள்ளன.