1
லாந்தர் ஆர்ட் எண்டர்டெயின்மென்ட் நடத்திய “எழுத்தாளரைக் கொண்டாடுவோம் நிகழ்வில்” ஈழ எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் படைப்புகள் குறித்து எழுத்தாளர் சவீதா, எழுத்தாளர் அனுராதா ஆனந்த் மற்றும் எழுத்தாளர்/இயக்குநர் Bhaskar Sakthi ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியின் பெயருக்கேற்ப மூவரும் தமிழ்நதியின் படைப்புகளை கொண்டாடினார்கள். சிறுகதைகள் குறித்து மிக ஆழமான பார்வையை முன் வைத்தார் பாஸ்கர் சக்தி. “தங்கமயில்வாகனம்” மற்றும் “மாயக்குதிரை” தொகுப்புகளில் இடம்பெற்ற பல சிறுகதைகளை மேற்கோள் காட்டி தனக்கேயுரிய பாணியில் மிக அழகான உரையை நிகழ்த்தினார். தமிழ்நதியின் சிறுகதைகளில் இழையோடும் பல விஷயங்களையும் முன்வைத்து மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
கட்டுரைகள் குறித்து எழுத்தாளர் அனுராதா ஆனந்த் மிக உணர்வுப்பூர்வமான உரையை நிகழ்த்தினார் – “நாடு கடத்தப்பட்ட சொற்கள்” நூலை வைத்து. இனவழிப்பு, புலம்பெயர்தல், போர்ச்சூழல், சாதலின் அழகியல் போன்ற அம்சங்களைக் குறித்துத் துல்லியமாக பேசினார்.
எழுத்தாளர் சவீதா “பார்த்தீனியம்’ நாவல் குறித்து மிக ஆழமாக உரையாற்றினார். நாவலில் இடம்பெற்ற பல கதாபாத்திரங்கள்/நிகழ்வுகள்/வர்ணனைகள் குறித்து அழகாக பேசினார். நாவலை மிக ஆழமாக வாசித்து தனது உரையினை வழங்கினார். நிகழ்வின் நிறைவாக தமிழ்நதி ஏற்புரை வழங்கினார்.
இதேபோன்று தமிழ்நாட்டுக் கவிஞரான வேல் கண்ணன் அவர்களின் படைப்புக்கள் குறித்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன.






