30
தடுத்து வைத்து – மொழி
உணர்வுக்கு முடியுமோ
தடையிட்டு பூட்டி வைத்திட;
புதிர் மனிதர் வாழ்ந்த பூமியில்.
வழி வந்து கதை சொல்ல
பட்ட வலி ஒன்றும் சிறிதல்ல.
நெஞ்சுரம் கொண்ட தமிழ்
எழுத்தாளரின் குமுறல்.
தீபச்செல்வன் எழுத்தில்
புரட்சி இருக்கு.
விடுதலை வேள்வியின்
உயிர் இருக்கு.
நடந்த கதையை
சொல்வதில் எதற்கு தடை.
நடக்கும் போது
விட்ட தவறை மறைக்கவோ?
கவிதையும் படித்தேன்.
நாவலில் வாழ்ந்த மாந்தர்
உணர்வை உணர்ந்தேன்.
தீபச்செல்வன் எழுத்து தேவை.
நேற்று நடந்ததை
இன்று விடிந்ததும்
மறந்திடச் சொல்வதில்
இல்லை நியாயம்.
விடுதலை கேட்டு போரிட
வழிவகுத்து விட்டவர்.
நூலகம் எரித்து கொடுந்துயர்
புரிந்த பௌத்த சிங்களவர்.
வாழ்வை நூலில் நூற்கும்
கரங்கள் விலங்கணிவதோ?
பக்கம் தட்டி பாடம் சொல்லும்
ஆசிரியர் தவிப்பதோ?
எழுத்துலக மாந்தரே
எழுந்து வந்து சொல்லும்
உங்கள் பங்கிற்கு ஒன்று.
தீபச்செல்வன் எழுத்தை பற்றி.
படிக்கத் திகட்டும் தமிழ்
மறக்க நினைத்தாலும்
முடியாத நிகழ்வின் கதை.
நாவலில் வாழும் ஈழம்.
நான் படித்தளவில்
தடையிட்டு வைத்து விட
காரணம் ஒன்றில்லை.
இனியெப்போதும் இங்கே!
தீபச்செல்வன் நூல்களை
இலங்கைச் சுங்கத்துறை
விடுவிக்க வேண்டும்.
சேர்ந்து சொல்வோம் படித்தபடி.
தடுத்து விடுவதில்
நியாயம் இல்லை. – நாம்
வாழும் போது நடந்த துயரை
எழுதி வைத்தல் நம் உரிமை.
இனமுறுகலை அது
ஒருபோதும் தந்திடாது.
விளங்கி ஏற்று மாற்றம் காண
தூண்டி விடும் வகையுண்டு.
புரிந்து நடக்க வேண்டும்;
ஆயுதம் மௌனமான
ஒரு இனத்தின் குரலை
நசுக்க எண்ணுவது விடுத்து.
எழுத்துல நட்புக்களே
நாடி விரைந்து ஒரு குரல்
தீபச்செல்வன் எழுத்துக்காய்
கொடுத்து தோள் கொடுப்போம்.
நதுநசி