சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார்.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி என்விஎன்.சோமு, சசிகாந்த் செந்தில், கதிர் ஆனந்த், கிரிராஜன், கா.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கான தேவைகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினர். கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசினர்.
டி.ஆர்.பாலு எம்பி: வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய 6 ரயில்கள் தாம்பரம் முனையத்தில் நிறுத்தப்படுவதில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தாம்பரத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பத்தூர் ரயில் நிலையத்திலும் சில விரைவு ரயில்களும் நிறுத்தப்படுவதில்லை.
அங்கும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். ரயில் ஓட்டுநர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க கூட வசதி இல்லாமல் இருக்கிறது. பொதுவாக, அவர்களுக்கு ஒரு சிறிய அறை கொடுத்து, அதில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர், ஆளுநர், துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பாருங்கள். சுயநினைவோடு இருக்கிறவர்கள், நியாயமாக சிந்திப்பவர்கள், இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள்.
தயாநிதி மாறன் எம்.பி.: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மிக குறைவான அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. இதனால், நிலுவையில் உள்ள திட்டப்பணிளை செய்ய முடியாமல் தாமதமாகிறது. 6 வந்தே பாரத் ரயில்களை மட்டுமே தமிழகத்துக்கு கொடுத்து உள்ளார்கள். அனைத்து ரயில்களிலும் வட மாநில உணவுகளை மட்டுமே பரிமாறுகிறார்கள். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். திருவள்ளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.
கதிர்ஆனந்த்: இந்த கூட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் நடத்தாமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.