வீடு தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் தொடங்கிய வேகத்தில் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
‘முதல்வரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தை கடந்த ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதியோர், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைப்போக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என மொத்தம் 70,311 பயனாளிகள் உள்ளனர். தற்போது 65 வயதுக்கு மேற்பட்டோரும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என அரசு அறிவித்துள்ளது. இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பணியாளர்கள் மின்னணு தராசில் எடைபோட்டுப் பொருட்களை வழங்க வேண்டும். ஆனால், திட்டம் தொடங்கிய வேகத்தில் ஏராளமான புகார்கள் வருவதாகவும், அவற்றுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மூத்த குடிமகன் ஒருவர் கூறுகையில், ‘‘எனது குடும்பத்தில் நான், எனது மனைவி மட்டுமே உள்ளோம். எனக்கு 75 வயதாகிறது. மனைவிக்கு 67 வயதாகிறது. ரேஷன் பொருட்களை வீட்டுக்கே வந்து வழங்குவதாக குறுந்தகவல் மட்டுமே வந்தது. இதுவரை பொருட்கள் வந்து சேரவில்லை. அதனால், சிரமத்துடன் நானே ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்கிறேன். இது தேர்தல் ஆதாயத்துக்காக கொண்டு வந்த திட்டமா எனத் தெரியவில்லை.
உங்கள் குடும்பத்தில் 60 வயதுக்கு கீழ் உறுப்பினர்கள் இருந்தால் அவர்கள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் வெளியூரில் வேலை செய்தால் எப்படி பொருட்கள் வாங்குவது? இதற்காக ஒவ்வொரு மாதமும் வெளியூரிலிருந்து வந்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டுப்போ என அவர்களைக் கூற முடியுமா? இதுபோன்ற நிபந்தனைகள் விதித்தால் பெரும்பாலான முதியோர், மாற்றுத் திறனாளிகள் வாழும் குடும்பங்களுக்கு இத்திட்டம் பயன்தராது. இந்தத் திட்டத்தின் நோக்கமும் நிறைவேறாது,’’ என்றார்.
இந்தப் புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து அரசின் நோக்கம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த குடிமக்கள், மற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாரும் புகார் தெரிவிக்கவில்லை: கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் சதீஷ் கூறுகையில், ‘‘ தற்போது 65 வயதுக்கு மேற்பட்ட முதியோரும் சேர்க்கப்பட்டதால் இந்த திட்டம் மூலம் மாற்றுத் திறனாளிகள், முதியோர் என மொத்தம் 86,500 பேர் பயனடைகின்றனர். மாற்றுத் திறனாளிகள், முதியோர் குறித்த தகவல்கள் அனைத்தும் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் உள்ள தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டு, தகுதியுள்ளோர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதற்காக யாரும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. அவ்வாறு புகார் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்,” என்றார்.