
-
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
திருச்சியில் எஸ்.ஐ.ஆர் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆசிரியர்கள் பணியில் இல்லாத நிலையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தங்களது மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி இன்று (நவம்பர் 18) முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை வருவாய் துறை அலுவலர்கள் முழுமையாக புறக்கணித்திருப்பதாக வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. அவற்றில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
நவம்பர் 16-ஆம் தேதி மதியம் 3 மணி நிலவரப்படி எஸ்.ஐ.ஆர் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 கோடிக்கும் அதிகமான வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் (அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி) உள்ள நிலையில் 6,00,54,300 (93.6%) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளில் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில் எத்தனை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிட்டுள்ளது. ஆனால், பூர்த்தி செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் தரவு அதில் கொடுக்கப்படவில்லை.
வருவாய் அலுவலர்கள் போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் பணிகளை முடிக்க ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் மாவட்ட அளவில் விரைவாக முடிக்குமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் பணியின் தரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.” என்றார்
அதிகாரிகள் தினசரி பல கூட்டங்களை நடத்துவதாகக் கூறும் அவர், “பணியாளர்கள் இரவு 12, 1 மணி வரை வேலை செய்கின்றனர். இதனால் பலரும் அழுத்தத்தில் உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி சரிவர வழங்கப்படவில்லை என முருகையன் குற்றம்சாட்டுகிறார். “எங்களுக்கு முழுமையான, முறையான பயிற்சி வழங்கப்படவில்லை. கணக்கீட்டுப் படிவங்கள் நிரப்புவதில் வாக்காளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. அவர்கள் எங்களைத் தான் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் எங்களுக்கும் போதிய தெளிவு இல்லை” என்றார் அவர்.
“பொதுவாக இந்த மாதிரி மாநில அளவிலான பணிகள் நடைபெறுகின்ற போது கூடுதல் பணியாளர்களும் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இம்முறை அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. வருவாய்த் துறை ஏற்கெனவே கூடுதல் பணிச்சுமையில் உள்ளது. கிட்டத்தட்ட 68,000 வாக்குச்சாவடி அலுவலர்களில் சுமார் 42,000 பேர் வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள்.” என்று அவர் தெரிவித்தார்.
வருவாய்த்துறையினர் முன்வைக்கும் கோரிக்கைகள்:
- தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி
- கூடுதல் பணியாளர்கள்
- காலக்கெடு நீட்டிப்பு (டிசம்பர் 4-க்குப் பிறகும்)

எஸ்.ஐ.ஆர் பணியிலிருந்து விடுவிக்க கோரும் ஆசிரியர்கள்
திருச்சியில் பள்ளியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
“ஆசிரியர்களின் கல்வித்துறை பணிகள் அதிகமாக உள்ள நிலையில் பள்ளி நேரம் முடிந்தும் ஆசிரியர்கள் கல்விப்பணிகளை செய்து வருகின்றனர். (SLAS) மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்தல், NMMS தேர்வுக்கு தயார் செய்தல் போன்ற கூடுதல் பணிகளை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலரின் பணிகள் முழு நேரப்பணியாளர்கள் செய்யும் அளவுக்கு அதிகமாகி விட்டது.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

கணக்கீட்டு படிவங்கள் 90 சதவிகிதத்துக்கும் மேல் விநியோகம் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை நிரப்புவதில் சிக்கல்கள் தொடர்வதாக பிபிசி தமிழிடம் பேசிய வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
“முந்தைய எஸ்.ஐ.ஆர் பட்டியலில் உள்ள முகவரியிலிருந்து மாறாத வாக்காளர்களின் விவரங்களை எடுப்பதில் பெரும்பாலும் சிக்கல்கள் இருப்பதில்லை. முகவரி மற்றும் தொகுதி மாறிய வாக்காளர்கள் தான் முந்தைய எஸ்.ஐ.ஆர் விவரங்களை எடுப்பதில் சவால்களைச் சந்திக்கின்றனர்.” அவர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் விவரங்களை இணையத்தின் மூலம் எடுக்கலாம் என்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அதற்கு உதவுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது முந்தைய எஸ்.ஐ.ஆர் விவரங்களைப் பெற முடியவில்லை என்கிறார். “நான் 2005-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூரில் தான் இருக்கிறேன். என்னுடைய பழைய வாக்காளர் பட்டியல் விவரங்கள் எனக்கு தெரியவில்லை.” என்கிறார்.
அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடி முகவரை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியபோது பெயர் குறிப்பிட விரும்பாத அவர், “முந்தைய எஸ்.ஐ.ஆரில் நான் கவனித்து வரும் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தியவர்களின் விவரம் மட்டுமே என்னிடம் உள்ளது. வேறு தொகுதிகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை இணையத்திலிருந்து எடுப்பது பற்றி எங்களுக்கு எந்த பயிற்சியும் வழங்கப்படவில்லை.” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஆதார் கட்டாயமா?
அதே போல கணக்கீட்டுப் படிவத்தில் ஆதார் விருப்பத்தேர்வு எனக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் அதனை கட்டாயம் நிரப்ப வேண்டும் என அலுவலர்கள் கூறுவதாக பிபிசி தமிழிடம் பேசிய வாக்காளர்கள் தெரிவித்தனர்.
கணக்கீட்டுப் படிவத்துடன் எந்த ஆவணமும் வழங்க வேண்டியதில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் ஆதார் நகலை சமர்ப்பிக்குமாறு வாக்காளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆதார் எண்ணை குறிப்பிடுவதோடு ஆதார் அட்டை நகலையும் உடன் இணைத்து சமர்ப்பிக்குமாறு வாக்குச்சாவடி முகவர் எங்களிடம் கூறினார். அது கட்டாயமில்லையே எனக் கூறியபோது தங்களிடம் அவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.” என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அகமது அலி.
“பயிற்சியே வழங்கப்படவில்லை”
இந்த நிலையில் தங்களுக்கு முதல்கட்ட பயிற்சியும் கூட வழங்கப்படவில்லை என்கிறார் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த டெய்ஸி. வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அங்கன்வாடி ஊழியர்களும் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
“கணக்கீட்டுப் படிவத்தை விநியோகிக்க தொடங்கிய பிறகே ஒவ்வொரு தகவலாக எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தற்போது நிரப்பப்பட்ட படிவத்தை செயலியில் பதிவேற்றவும் கூறுகின்றனர். எங்களுக்கு அதற்கான பயிற்சியும் இல்லை. இது தொடர்பாக முறையிட்ட போது இந்தப் பணியில் எங்களுக்கு உதவ கூடுதல் மேற்பார்வையாளர்களை நியமிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.” என்றார்.
எஸ்.ஐ.ஆர் பணியை புறக்கணிப்பது பற்றி தங்களின் சங்கத்தினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வாக்குச்சாவடி முகவர்களின் பணி என்ன?
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அலுவலர்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளன. தேர்தல் ஆணைய தரவுகளின்படி தமிழ்நாட்டில் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் அரசியல் கட்சிகள் சார்பிலும் வாக்குச்சாவடி முகவர்கள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“எஸ்.ஐ.ஆர் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கு இன்றியமையாதது.” என தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர் படிவத்தை விநியோகிப்பதிலும் வாக்குச்சாவடி முகவர்கள் பெரிதும் உதவியதாக தெரிவிக்கிறார் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
அக்டோபர் 27-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படி வாக்குச்சாவடி முகவர்கள் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 50 நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாக்குச்சாவடி முகவர்கள் தாங்கள் சமர்ப்பிக்கும் படிவங்களில் உள்ள விவரங்கள் தங்களால் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என்கிற உறுதிமொழியை வழங்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. “கணக்கீட்டுப் படிவங்களை விநியோகிப்பதில் பல அலுவலர்களும் சிரமங்களைச் சந்தித்தனர். அதனால் நாங்கள் எங்களால் முடிந்த வரை அவர்களுடன் சென்று வீடுகளை அடையாளம் காண்பதிலிருந்து விநியோகிப்பது வரை உதவி செய்தோம். ஆனால் நிரப்பப்பட்ட படிவங்களைப் பெறுவது பற்றிய அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.” என்கிறார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத வாக்குச்சாவடி முகவர் ஒருவர்.
நாங்கள் ஏன் உறுதிமொழி வழங்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் ஆணையம் தேவையான அளவு பணியாளர்களை நியமிக்காமல் தற்போது வாக்குச்சாவடி முகவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறது எனத் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டைப் போலவே கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு குறைகளை முன்வைத்து எஸ்.ஐ.ஆர் காலக்கெடுவை நீட்டிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
கணக்கீட்டுப் படிவத்தை இணையத்தில் நிரப்பும் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டுப் படிவத்தின் தகவல்களை கூடுதல் பணியாளர்களை நியமித்து இணையத்தில் பதிவேற்றுமாறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதே போல கேரளாவிலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக திங்கட்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை தள்ளி வைக்க வேண்டும் என அரசு பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
“தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவிற்குள் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பங்களை விநியோகிப்பது கடினம். ஏற்கெனவே எஸ்.ஐ.ஆர் பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் என இரட்டை கடமை உள்ளது. நாங்கள் எஸ்.ஐ.ஆர் வேண்டாம் எனச் சொல்லவில்லை. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கூடுதல் அவகாசம் தான் கேட்கிறோம்,” என அரசு பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.பி.கோபகுமார் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி மேற்கோள் காட்டுகிறது.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி (நவம்பர் 16, மாலை 3 மணி) மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் முறையே 93.67% மற்றும் 99.16% கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் போராட்டம் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள், முகவர்கள் எழுப்பும் கோரிக்கைகள் பற்றி கருத்து பெற தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-ஐ பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால் அவரின் கருத்தைப் பெற முடியவில்லை. அவரின் கருத்து கிடைத்தபின் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு