சென்னை: தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்தம் “SIR” குறித்தும், போலி வாக்காளர்களை நீக்கி வாக்களிக்க தகுந்தவர்களின் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டும் தேர்தல் கமிஷனின் செயல்பாட்டுக்கும், களங்கம் கற்பிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் இது குறித்து கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, அவதூறு பிரச்சாரம் செய்து மக்களை குழப்பம் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் தேர்தலின் முடிவுகளுக்கு பிறகாவது இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்காமல், தேர்தல் ஜனநாயகத்தை சிதைக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் கூறும் தொடர் பொய்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுக அரசின் தவறுகளுக்கு முடிவுரை எழுதும்.
இறந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள், சட்ட விரோதமாக ஊடுருவி வந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதும், தகுதி உள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும் தான் எஸ்ஐஆரின் அடிப்படை நோக்கம்.
தமிழகத்தில் திமுக., தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்களை சேர்த்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக செய்த திருட்டுத்தனங்கள் வீணாகி விடுமே என்பதால்தான் எஸ்ஐஆரை திமுக எதிர்கிறது.
ஒருபக்கம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்த்து திமுக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால், மறுபக்கம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை அதற்கென தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு பதிலாக, திமுகவினரே மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலான இடங்களில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் எஸ்ஐஆர் படிவங்களை வீடு வீடாகச் சென்று கொடுக்கின்றனர். பல இடங்களில் திமுக.வினர், அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வந்து படிவங்களை பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர்.
எஸ்ஐஆர் படிவங்களை திமுகவினர் அவர்களின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்குகின்றனர். திமுக எதிர்ப்பு வாக்காளர்களுக்கு படிவங்கள் கிடைப்பதில் பெரும் சிரமங்கள் உள்ளன.வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை எஸ்.ஐ.ஆர். நடக்க உள்ள நிலையில், 90 சதவீதத்தினருக்கும் மேல் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இனி படிவங்களை திரும்ப பெற வேண்டும்.
இந்தச் சூழலில் வருவாய்த்துறை ஊழியர் சங்கங்கள் இன்று (18.11.2025) முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. ஏற்கெனவே, மாநில அரசு ஊழியர்களுக்கு பதிலாக திமுகவினரே எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் அதிலிருந்து விலகினால் முழுக்க முழுக்க திமுகவினரே அந்தப் பணிகளில் ஈடுபடுவர்.
இதனால் திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்ற மோசமான நிலை உருவாகும். இதற்காகவே வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களை தூண்டிவிட்டு திமுக அரசு சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
முதலமைச்சர் முகஸ்டாலினுக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை. திமுக எதிர்ப்பு வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவும், போலி வாக்காளர்களை சேர்க்கவும் திமுக மேற்கொண்டு வரும் சதி திட்டத்தின் ஒரு பகுதியே வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களின் இந்த மிரட்டல் அறிவிப்பு.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மாநில அரசு ஊழியர்களால் மீற முடியாது. அப்படி மீறினால் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். அரசின் முக்கியத் துறையான வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இது நன்கு தெரியும். ஆனாலும் திமுக கொடுக்கும் தைரியத்தில் அரசியலமைப்பு சட்டத்தையே மீற துணிந்துள்ளனர். இதை தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது.
அரசு ஊழியர்கள் எப்போதும் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறக் கூடாது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வருவாய்த்துறை ஊழியர் சங்கங்கள் உணர வேண்டும்.
தனது அரசியல் சதிகளுக்கு வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களை பயன்படுத்தும் திமுக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையத்துக்கு மிரட்டல் விடுக்கும் திமுக அரசின் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி வாக்காளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக அரசு நிர்வாகத்தை தமிழக தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயல்படுவதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் நோக்கத்துடன் தேர்தல் கமிஷன், பிரதமர் மோடி மீது தொடர்ந்து ஆதாரம் இல்லாத கற்பனைக் கதைகளை சொல்லி அவதூறு பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.