சென்னை: சென்னை மாவட்டத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணிக்கு, அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான பணிகள் (எஸ்ஐஆர்) இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், ரிப்பன் மாளிகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், அதிமுக, பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வீடு வீடாக தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள இருக்கும் பணிகள், தொடர்பாக விளக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன், இந்த எஸ்ஐஆர் பணிக்கு அரசியல்கள் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
பின்னர், அரசியல் கட்சிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, ஒவ்வொரு கட்சி சார்பில், 2 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக சார்பில் 4 பிரதிநிதிகள் வந்திருந்தனர். அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதிமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ். ராஜேஷ், விருகை ரவி ஆகியோர் வெளியேறினர். தி.நகர் சத்யா, பாலகங்கா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநில சட்டத்துறை துணை செயலாளர் கே.சந்துரு, “எந்த ஒரு புரிதலும் இல்லாமல் தமிழகத்தில் நுழைய வேண்டும் என்பதற்காக, பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி உள்ளது” என தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா பேசும் போது, ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை பறிக்கக் கூடிய வேலையில் பாஜக அரசு செயல்படுகிறது. எஸ்ஐஆர்-ஐ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக எதிர்க்கிறது. மிகப்பெரிய சிக்கலை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது” என்றார். அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நவாஸ் பேசும்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்ஐஆர்-க்கு எங்கள் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டோம்.
நடைமுறை சாத்தியமில்லாத வேலையை பாஜகவும், தேர்தல் ஆணையமும், தமிழகத்தில் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது என்றார். அதிமுக மாவட்ட செயலாளர் விருகை ரவி பேசும்போது, எஸ்ஐஆர்-ஐ அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது. வாழ்வாதாரத்துக்காக தமிழகம் வந்துள்ள வடமாநில தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதை அதிமுக ஏற்றுக் கொள்கிறது என்றார்.