பட மூலாதாரம், Getty Images
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டிற்காக தலைவர்கள் சீனாவின் தியான்ஜினில் சந்தித்தபோது புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டது. சீனா நீண்ட காலமாக இதனை முன்னிறுத்தி வருகிறது.
எஸ்சிஓவின் இந்த வளர்ச்சி வங்கிக்கான சாத்தியங்களை சீன ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. இந்த வங்கி இயற்கை வளம் மிக்க எஸ்சிஓ உறுப்புநாடுகளில் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த வங்கி சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்குமான பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி, யூரேசியாவில் (ஆசியா மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்கிய பகுதி) சீனாவின் பட்டுப்பாதையின் இருப்பை வலுப்படுத்தும்.
ரஷ்யாவின் கடந்தகால ஆட்சேபனைகளை மேற்கொள் காட்டும் செய்திக் குறிப்புகள், யுக்ரேன் போரைத் தொடர்ந்த மேற்கத்திய பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் நிலைப்பாடு மாறியிருப்பதாக தெரிவிக்கின்றன.
மேற்கத்திய நாடுகளால் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்கிற நிலையில் இருக்கும் இரானும் இந்த வங்கியை நிறுவுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது, மேற்கத்திய பொருளாதார தடைகளைத் தவிர்ப்பதற்கான சாத்தியமான வழி என்றும் இதனை இரான் கூறியுள்ளது.
சில ஊடகச் செய்திகள் இந்தப் புதிய வங்கியை “நிதி விவகாரங்களில் மேற்கத்திய ஆதிக்கத்தை” எதிர்கொண்டு சீன நாணயமான யுவானின் சர்வதேச செல்வாக்கை அதிகரித்து உலகளாவிய நிதியமைப்பில் பல்முனைப் போட்டியை ஊக்குவிப்பதற்கான வழியாகப் பார்க்கின்றன.
அதே சமயம் இந்தச் செய்திகளில் இந்தியா தயக்கம் காட்டுவதும் அமெரிக்காவிடமிருந்து அச்சுறுத்தல் வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்சிஓ வங்கி என்றால் என்ன? அது என்ன செய்யும்?
பட மூலாதாரம், Getty Images
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “வங்கி நிறுவுவதற்கான அரசியல் ஒப்புதல்” தான் எஸ்சிஓ உச்சிமாநாட்டின் முக்கிய முடிவாகும் என்றும் சீனாவின் முன்மொழிவு இறுதியாக நிஜமாகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த வங்கி யூரேசியாவில் பல்தரப்பு ஒத்துழைப்புக்கு புதிய தளம் அமைத்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார். “இது உறுப்பு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியமும் கொண்டாடுவதற்கான காரணம்” என்றும் குறிப்பிட்டார்.
சீன அரசு ஊடகமான சீனா நியூஸ் சர்வீஸ் (சிஎன்எஸ்) தனது செய்தியில், எஸ்சிஓ வங்கி முதலில் சீனாவால் 2010-இல் முன்மொழியப்பட்டது என்றும் 2025-இல் தான் அதனை நிறுவுவதற்கான பணி வேகம் எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் 2025-இல் எஸ்சிஓ நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் சந்திப்பில் ஏற்பட்ட “குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்” மற்றும் ஜூலையில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் ஏற்பட்ட “கொள்கையளவு ஒப்புதல்” உள்ளிட்டவை அடங்கும்.
இயற்கை வளங்கள் நிறைந்துள்ள எஸ்சிஓ நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் உள்ள கஷ்டங்களே இந்த வங்கிக்கான தேவையை உணர்த்துவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வங்கி உறுப்பு நாடுகளிடையே பிராந்திய அளவில் பொருளாதார ஒத்துழைப்பையும் வேகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு செய்தித்தாளான தி பேப்பர், எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் இரும்பு தூது நிறைந்திருக்கும் ரஷ்யா மற்றும் கசகஸ்தானில் “ஒளிமயமான வளர்ச்சி வாய்ப்புகளை” வழங்குகிறது. ஆனால் இந்த நாடுகளிள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த போதிய நிதி ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது
இத்தகைய நிதி நெருக்கடி தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் உள்ளது. இந்த நாடுகளில் நீர்மின் திட்டம், கனிம வளங்கள் மற்றும் எரிபொருள் உற்பத்தி போன்ற துறைகளில் வளர்ச்சி இலக்குகளை அடைய பெரிய அளவிலான நிதியுதவி தேவைப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த நாளிதழான பெய்ஜிங் நியூஸ் செப்டம்பர் 2-ஆம் தேதியன்று வெளியான தலையங்கத்தில், புதிய வங்கி உறுப்பு நாடுகளுக்கு இடையேயான எல்லை கடந்த உள்கட்டமைப்பு திட்டங்களான எரிபொருள், போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பிராந்திய வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும். அதே வேளையில் எஸ்சிஓ நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்புக்கான நடைமுறையும் துரிதப்படுத்தப்படும்.
அதே தலையங்கத்தில், இந்த வங்கி சீனா மற்றும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும், இதன்மூலம் யூரேசியாவில் சீனப் பட்டுப்பாதையின் இருப்பை வலுப்படுத்தும்.
பிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கியிலிருந்து வேறுபடுத்தி பார்ப்பதற்கு ஏதுவாக இந்த வங்கி மத்திய ஆசியாவில் இடம்பெற வேண்டும் என்றும் பெரிய அளவிலான எரிபொருள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மூலதனம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மீது தற்போது கவனம் ஏன்?
பட மூலாதாரம், Getty Images
சீன அரசின் நிதிசார் செய்தித்தாளான செக்யூரிடீஸ் டைம்ஸ், எஸ்சிஓ வளர்ச்சி வங்கி திட்டத்தை சீனா 2010-இல் முன்மொழிந்திருந்தாலும் அப்போதே சில உறுப்பு நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஏனென்றால் அப்போதைக்கு அமைப்பின் முக்கியத்துவமானது பிராந்திய பாதுகாப்பை ஊக்குவிப்பதிலே இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் நாளிதழான சௌத் சீனா மார்னிங் போஸ்டை மேற்கோள் காட்டி குவான்சாவில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரஷ்யா முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு மாறாக தனது யூரேசியன் வளர்ச்சி வங்கியை விரிவுபடுத்த விரும்பியது.
எஸ்சிஓ-வுக்கு உள்ளுமே சீனா மற்றும் ரஷ்யாவின் நலன்களில் வேறுபாடு உள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது. சீனா மத்திய ஆசியாவில் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவித்து எரிபொருள் இறக்குமதியைப் பன்மைப்படுத்த விரும்புகிறது, ஆனால் ரஷ்யா இந்தப் பிராந்தியத்தில் தனது பொருளாதாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்த விரும்புகிறது.
ஆனால் யுக்ரேன் போரால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் ரஷ்யாவை ‘கிழக்கு நோக்கி சாயும் (leaning towards the east)’ கொள்கையை ஏற்றுக்கொள்ள நிர்பந்தித்துள்ளது. இதனால் தான் ரஷ்யா எஸ்சிஓ வங்கி மீதான தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக ஒரு சீன வல்லுநரை மேற்கோள்காட்டி சௌத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதார தடைகள் ‘நிதி ஆயுதங்களின்’ வலிமையை உலகுக்குக் காட்டியுள்ளது. அதோடு மேற்கத்திய நிதியமைப்பை அதிகம் சார்ந்திருப்பதன் ஆபத்தையும் உலகிற்கு உணர்த்தியுள்ளது என பெய்ஜிங் நியூஸ் தலையங்கம் தெரிவித்துள்ளது.
“நிதியமைப்பில் மேற்கத்திய ஆதிக்கத்தைக்” கட்டுப்படுத்த தேவையான புதிய நிதி கட்டமைப்பிற்கான தேவையும் மேற்கத்திய தடைகளை தவிர்ப்பதற்கான அவசியமும் அந்த தலையங்கத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதிசார் பல்முனைப் போட்டியை ஊக்குவிப்பதற்கு ஒரு வழியாக எஸ்சிஓ வங்கியை வளர்க்க வேண்டும் எனவும் அதில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்சிஓ அமைப்பு இந்த வங்கி மூலம் பாதுகாப்பு என்பதோடு மட்டும் தங்களை நிறுத்திக் கொள்ளாது பொருளாதார ஒத்துழைப்பு என்கிற களத்தில் வளரலாம் என பெய்ஜிங் நியூஸ் தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் எஸ்சிஓவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும்.
இந்த வங்கி மேற்கத்திய நாணயமான டாலர் மற்றும் யூரோ மீதான சார்பைக் குறைக்கும் எனவும் அந்த தலையங்கத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் யுவானின் செல்வாக்கு அதிகரிக்கவும் உலகளாவிய அமைப்பை பல்முனை திசையை நோக்கி நகர்த்தவும் உதவும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
சீன அரசு சார் நிறுவனமான சைனீஸ் அகாடமி ஆஃப் சோசியல் சயின்ஸைச் சேர்ந்த லீ ரூய்க்ஸி தற்போதைய சர்வதேச சூழல் புதிய பல்தரப்பு வங்கியை உருவாக்குவதற்கு முன்பு எப்போதையும்விட சாதகமான நேரமாக இருப்பதாகக் கூறுகிறார் என குவான்சா செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மற்ற உறுப்பு நாடுகளின் நிலை என்ன?
இரான் பல மேற்கத்திய பொருளாதார தடைகளைச் சந்தித்து வருகிறது. எஸ்சிஓ வளர்ச்சி வங்கியின் உருவாக்கத்தை ஆதரிக்கும் நாடாக இரானின் பெயரை சீன ஊடகங்கள் பரவலாகப் பதிவு செய்துள்ளன.
ஜூன் மாதம் சீனாவில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட இரானின் மத்திய வங்கி ஆளுநர் முகமது-ரேசா ஃபர்சின், எஸ்சிஓ வங்கி மற்றும் அது சார்ந்த நாணய முறை என்பது நீண்டகாலமாக உள்ள ஒருசார் அமைப்பிலிருந்து வெளி வர உதவும் எனத் தெரிவித்ததாக குவான்சா செய்தி குறிப்பிடுகிறது.
இரானிய அரசியல் ஆய்வாளரான பேமன் சலேஹி சௌத் சீனா மார்னிங் போஸ்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், எஸ்சிஓவின் நிதியமைப்பில் இரான் சேர்க்கப்பட்டது புதிய பொருளாதார தடைகளைச் சமாளிக்க அந்நாட்டிற்கு அவசியமாகிறது என்றுள்ளார். எஸ்சிஓ வங்கி இரானுக்கு ஒரு ‘அரசியல் கவசமாக’ மாறலாம், பொருளாதார தடைகள் என்பது ஒருநாட்டை பணியச் செய்வதற்கான உத்தரவாதம் கிடையாது என்பதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆசிய எஸ்சிஓ உறுப்பு நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் யுஸ்பெகிஸ்தானும் புதிய வங்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குவான்சா செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அரசு ஊடகமான ஸ்புட்னிக்கின் சீனப் பிரிவுக்கு மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மஸ்லோவ் அலெக்ஸி அலெக்ஸாண்டோவிச் அளித்த நேர்காணலில், எஸ்சிஓ வங்கி என்பது முதலீட்டு திட்டங்களுக்காகவும் பாதுகாப்பான நாணய வர்த்தக முறைக்கும் அவசியமாகிறது எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்சிஓ வங்கி பல்வேறு நாடுகளுக்கு இந்த அமைப்பை கவர்ச்சிகரமானதாக்கும் என்கிறார். இனி வரக்கூடிய நாட்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கூட இந்த அமைப்பில் சேர்க்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
“பெரிய உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் அதிக செலவுகளால் திணறி வரும் ஆப்ரிக்காவிற்கு எஸ்சிஓ வங்கி, மற்ற வங்கிகளின் விதிகளுக்குக் கட்டுப்படாத புதிய நிதிமாடலை வழங்குகிறது” என நெய்ரோபியைச் சேர்ந்த சௌத்-சௌத் டயலாக் அமைப்பின் இணை இயக்குநரான ஸ்டீபன் எண்டேக்வா சீனா டெய்லியிடம் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
அதே போல் இந்தியாவின் சாத்தியமான ஆட்சேபனை பற்றியும் சௌத் சீனா மார்னிங் போஸ்டை மேற்கோள்காட்டி குவான்சா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் ஒன்று, இந்தியாவின் பல அணிசார் ராஜதந்திரம் என்பது ‘சீனாவின் பிராந்திய நோக்கங்களைச் சமாளிக்கும் அதே வேளையில், அந்நாட்டை ஒரு முக்கியமான வர்த்தக கூட்டாளியாக வைத்திருப்பது என்பதை நோக்கியது எனத் தெரிவிப்பதாக குவான்சா செய்தி கூறுகிறது.
அதே போல், அமெரிக்க அதிபர் டிரம்பின் எதிர்வினையையும் புறந்தள்ளிவிட முடியாது என குவான்சா செய்தி கூறுகிறது. முன்னதாக பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கும் திட்டங்களை கைவிடவில்லை என்றால் 100 சதவிகிதம் வரிகள் விதிக்கப்படும் என அவர் எச்சரித்ததும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு