ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் ‘உறுதுணை’ என்ற குறு மற்றும் நுண் கடன் மானிய நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அத்துறையின் அமைச்சர் மதிவேந்தன் பதிலளித்து பேசியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதிசெய்யும் வகையில் அரசு மானியத்துடன் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.25 கோடி செலவில் உறுதுணை என்ற பெயரில் குறு மற்றும் நுண்கடன் திட்டம் செயல்படுத்தப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் பொது கொள்முதல் செயல்பாட்டில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் 500 தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் செய்வதை உறுதிசெய்யும் வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தாட்கோ வணிக வளாக திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் வணிக வளாகங்களில் தொழில் தொடங்க வணிகர்களுக்கு தாட்கோ உதவிசெய்யும்.
பழங்குடியினர் உழவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14 கோடி செலவில் ஐந்திணை பசுமை பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும். திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம், ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் அமைந்துள்ள தாட்கோ தொழிற்பேட்டைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனைவோர் நவீன தொழில்கள் தொடங்க ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடய ஆயத்த தொழிற்கூடங்கள் ரூ.115 கோடி செலவில் அமைக்கப்படும்.
பழங்குடியின மக்களுக்கு தேவையான உயர்தர மருத்துவ சேவைகள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே கிடைக்க வசதியாக ரூ.10 கோடி செலவில் தொல்குடி நல்வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும். பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் நவீன வசதிகளுடன் முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். ஆதி திராவிடர், பழங்குடியினர் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின்கீழ் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 40 அறிவுச்சுடர் மையங்கள் கட்டப்படும். உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மற்றும் கோவையில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் முன்மாதிரி விடுதிகள் கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.