படக்குறிப்பு, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் எஸ்யூவி வாகனங்கள் கட்டுரை தகவல்
உலகம் முழுவதிலும் உள்ள முக்கியமான, வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வாகனங்கள் (எஸ்யூவி வாகனங்கள்) அதிகளவில் தென்படுகின்றன.
பூமி வேகமாக வெப்பமாதல், காலநிலை நெருக்கடி அவசரநிலை, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் ஆகிய பிரச்னைகள் காரணமாக, சிறிய மற்றும் சூழலுக்கு உகந்த வாகனங்களை முதன்மைப்படுத்துவது மிக முக்கியம் என ஐ.நா கூறியுள்ள நிலையிலும், எஸ்யூவிக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
உலகளவில் 2024ல் விற்பனையான கார்களில் 54% எஸ்யூவிக்களாகும் (பெட்ரோல், டீசல், ஹைப்ரிட், எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட). இது 2023-ஐ விட மூன்று சதவிகிதம் அதிகம், அதற்கு முந்தைய ஆண்டைவிட 5% அதிகம் என, குளோபல்டேட்டா அமைப்பு கூறுகிறது. உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சந்தை தரவுகளை இந்த அமைப்பு வழங்குகின்றது.
“2014ல் விற்பனையில் ஐந்தில் ஒன்று எஸ்யூவியாக இருந்த நிலையில், 2024ல் இரண்டில் ஒன்று என்ற நிலை கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ளது,” என, டிரான்ஸ்போர்ட் அண்ட் என்விரான்மெண்ட் எனும் அமைப்பின் ஜேம்ஸ் நிக்ஸ் கூறுகிறார். இந்த அமைப்பு, ஐரோப்பாவில் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் பணியாற்றும் அரசு-சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு இது.
தற்போது சாலைகளில் பயணிக்கும் புதிய மற்றும் பழைய ரக எஸ்யூவி கார்களில் 95% கார்கள் டீசல், பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிபொருட்களை சார்ந்தது என, சர்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) கூறுகிறது. தங்களின் புதிய ரக எஸ்யூவி வாகனங்கள் பெரும்பாலும் மின்சார வாகனங்கள்தான் என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
எஸ்யூவிக்கள் எளிதில் கவனத்தை ஈர்க்கும் வாகனங்களாக திகழ்கின்றன. கனமான, அளவில் மிகப்பெரிய, நல்ல இடவசதி, கிரௌண்ட் கிளியரன்ஸ் (வாகனத்தின் அடிப்பகுதிக்கும் தரைப்பகுதிக்கும் இடையேயான செங்குத்து அளவு), சாலையை சிறந்த முறையில் பார்க்கக்கூடிய வகையில் உயர்த்தப்பட்ட ஓட்டுநர் இருக்கை ஆகியவை இக்கார்களில் உள்ளன, மேலும் சந்தையில் சிறிய ரக எஸ்யூவிக்களும் உள்ளன.
எஸ்யூவி வாகனங்கள் அதிகளவு கார்பனை வெளியிடுவதால், க்ரீன்பீஸ் மற்றும் எக்ஸ்டிங்ஷன் ரெபெல்லியன் ஆகிய சூழலியல் அமைப்புகள் அவற்றை காலநிலை நெருக்கடியின் எதிரியாக பார்க்கின்றனர்.
சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஆதரிக்கும் இண்டர்நேஷனல் கவுன்சில் ஆன் க்ளீன் டிரான்ஸ்போர்ட்டேஷன் போன்ற அமைப்புகள், அந்த வாகனங்களின் அளவை பொறுத்து, அவற்றை தயாரிக்க அதிகளவிலான வளங்கள் பயன்படுத்தப்படுவதாக வாதிடுகின்றனர். மேலும், அவை சாலைகளில் அதிகளவிலான இடத்தை ஆக்கிரமிப்பதாகவும் இது ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஓர் அங்கமாக உள்ள, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாகும்.
அதனால்தான், சிறிய, சூழலுக்கு உகந்த வாகனங்கள் பிரபலமாகும் என நம்பப்பட்டது.
எனினும், தீவிரமாகிவரும் காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், உலக வெப்பமயமாதலை குறைக்க, போக்குவரத்து துறை உட்பட அனைத்து மட்டத்திலுன் கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ள சூழலில், அதற்கு எதிரான விஷயங்கள் நடைபெறுகின்றன. சொல்லப் போனால், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மின்சார வாகனங்களின் விற்பனை ஜப்பான், ஜெர்மனி மற்றும் இந்தியா போன்ற முக்கிய சந்தைகளில் குறைந்துள்ளன.
மேலும், ஐந்தாண்டுகளுக்கு முன்பான கணிப்புக்கு மாறாக, ஐரோப்பாவில் மின்சார வாகனங்களை விட எஸ்யூவிக்கள் அதிகளவில் விற்பனையாகியது. ஐரோப்பாவில் 2018-ல் புதைபடிவ எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் சிறிய ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை 32.7 லட்சமாக இருந்தது, அந்த எண்ணிக்கை 2024ல் 21.3 லட்சமாக உள்ளதாக குளோபல்டேட்டா கூறுகிறது.
அதன் எதிர்கால விற்பனை போக்கை கணிக்கும் மேலாளர் சம்மி சான் கூறுகையில், “பெரிய எஸ்யூவிகளுடன், சிறிய ரக எஸ்யூவிகளும் வந்துள்ளது இந்த நிலைக்குக் காரணம். ஐரோப்பாவில் அதன் விற்பனை, 2018-ல் 15 லட்சத்தில் இருந்து 2024-ல் 25 லட்சமாக அதிகரித்துள்ளது.
2024ல் சீனாவில் அதிகபட்சமாக 1.16 கோடி எஸ்யூவிக்கள் விற்பனையாகியுள்ளதாகவும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளதாகவும், குளோபல்டேட்டா கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
இந்த வளர்ச்சி உணர்த்துவது என்ன?
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் மக்களின் வாங்கும் சக்தி மேம்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களின் விருப்ப காராக எஸ்யூவிக்கள் மாறியுள்ளதாகவும் தொழில் நிபுணர்கள் கூறுகின்றனர்.
“வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் மாறுகின்றனர், வசதி, அதன் திறன் மற்றும் சாலையை சிறந்த முறையில் பார்க்க முடிவது போன்ற பலவித பயன்பாடு கொண்ட கார்கள் மீது மக்கள் விருப்பம் கொள்கின்றனர்,” என சொசைட்டி ஆஃப் மோட்டார் மேனுஃபேக்ச்சரர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் (எஸ்எம்எம்டி)-இன் தலைமை செயல் அலுவலர் மைக் ஹாவ்ஸ் கூறுகிறார்.
ஆனால், எஸ்யூவிக்களின் தயாரிப்பு செலவைவிட கிடைக்கும் அதிகளவிலான லாபத்தால் (profit margins) உற்பத்தியாளர்கள் ஈர்க்கப்படுவதாக ஆட்டோமொபைல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, குறைந்தளவில் வாகனங்களை தயாரித்தாலும் அதிகளவிலான லாபம் அதிலிருந்து கிடைப்பது.
“சமீப ஆண்டுகளில் அதிகளவிலான சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பர பிரசாரங்கள் மூலம் அதற்கான தேவை உருவாக்கப்பட்டது,” என ஐரோப்பிய போக்குவரத்து பாதுகாப்பு கவுன்சிலின் தொடர்பு மேலாளர் டுட்லி கர்ட்டிஸ் கூறுகிறார்.
”மற்ற ரக கார்கள் செய்யும் அதே வேலையை எஸ்யூவிக்களும் செய்யும் நிலையில், கார் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிப்பதற்கான எளிய வழியாக எஸ்யூவிக்கள் உள்ளன.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த ஐந்தாண்டுகளில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என்ற கணிப்பு நடக்கவில்லை
எஸ்யூவி வாகனங்களில் என்ன பிரச்னை?
சாலைகளில் பயணிக்கும் 95% புதிய மற்றும் பழைய வாகனங்கள் இன்னும் புதைபடிவ எரிபொருட்களிலேயே இயங்குகின்றன என சர்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) கூறுகிறது.
எஸ்யூவிக்களின் விற்பனையின் அபரிமித வளர்ச்சியால், அதன் எண்ணெய் நுகர்வு 2022-2023ல் உலகளவில் 6,00,000 பேரல்களாக அதிகரித்துள்ளது என்றும் இது உலகளவிலான எண்ணெய் தேவை அதிகரிப்பில் கால்பங்குக்கு அதிகமாகும் எனவும் ஐஇஏ கூறுகிறது,
“கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வில் எஸ்யூவிக்கள் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது, ஜப்பான் மற்றும் மற்ற முக்கிய பொருளாதார நாடுகளை விஞ்சும் வகையில் உள்ளதாக உள்ளது,” என சர்வதேச எரிசக்தி முகமையின் எரிசக்தி குறித்த ஆலோசனை வழங்கும் அபோஸ்டோலஸ் பெட்ரோபோலஸ் கூறுகிறார்.
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் நடுத்தர அளவுடைய கார்களுடன் ஒப்பிடுகையில், எஸ்யூவிக்கள் சராசரி அளவை விட 300 கிலோகிராம் எடையில் இருப்பதால், 20% அதிகமாக எரிபொருளை எரிப்பதாகவும் அந்த முகமை கூறுகிறது.
உலகளவில் சாலை போக்குவரத்தால் நிகழும் கார்பன் உமிழ்வு 12% ஆக உள்ளது, இது உலக வெப்பமயமாதலின் முக்கிய காரணிகளுள் ஒன்றாக உள்ளது. காலநிலை பேரழிவை தடுக்க அனைத்து துறைகளும் விரைவில் கார்பன் உமிழ்வு அற்றதாக மாற வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால், தற்போது விற்கப்படும் எஸ்யூவிக்கள் அனைத்தும் கார்பன் உமிழ்வை அதிகரிப்பதில்லை என, தொழில் துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Reuters
“ஐந்தில் இரண்டு புதிய ரக வாகனங்கள் கார்பனை வெளியிடாது, நீண்ட நேரம் பேட்டரி நீடிக்கும் வகையில், அவை தயாரிக்கப்பட்டுள்ளன, இதனால் அவற்றை சார்ஜ் செய்வது குறித்து வாடிக்கையாளர்கள் கவலையுற தேவையில்லை,” என்கிறார் ஹாவ்ஸ்.
“இது, புதிய பலவித பயன்பாடுகளை கொண்ட கார்களின் கார்பன் உமிழ்வு 2000ம் ஆண்டிலிருந்து பாதிக்கும் மேல் குறைந்தது, இதனால் பிரிட்டன் சாலைகளை கார்பன் உமிழ்வற்றதாக மாறுவதற்கு உதவுகிறது.”
பெரும்பாலான புதிய எஸ்யூவிக்கள் பலவும் இன்னும் புதைபடிவ எரிபொருட்களை எரிக்கின்றன என்றாலும், 2023ல் விற்கப்பட்ட எஸ்யூவிக்களில் 20% முழுதும் மின்சார வாகனங்கள் என்றும் இந்த எண்ணிக்கை 2018ல் 2% ஆக இருந்ததாகவும் ஐஇஏ அதிகாரிகள் கூறுகின்றனர்.
மின்சாரம் மற்றும்எண்ணெய் என இரண்டிலும் இயங்கும் ஹைப்ரிட் வாகனங்கள் பயணிக்கும் மொத்த தொலைவில் 30% தான் மின்சாரத்தில் இயங்குவதாக (எஸ்யூவிக்கள் உட்பட அனைத்து ரக கார்களும்), ஐரோப்பாவில் இண்டர்நேஷனல் கவுன்சில் ஆன் க்ளீன் டிரான்ஸ்பொர்ட்டேஷன் 2022ல் மேற்கொண்ட ஆய்வில் கூறுகிறது.
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற மற்ற முக்கிய பொருளாதார நாடுகளிலும் இதேமாதிரியான முடிவுகள் கிடைக்க பெற்றுள்ளன.
கார்பன் உமிழ்வை தவிர்த்து, மற்ற சூழலியல் பிரச்னைகளும் எஸ்யூவிக்களிடம் உள்ளதாக, நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
எஸ்யூவிக்கள் போன்ற பெரிய வாகனங்களை தயாரிக்க தேவைப்படும் வளங்களுடன் அதன் மின்சார வாகனங்களுக்கு பெரியளவிலான பேட்டரிகள் தேவைப்படுவதாகவும் இதற்கு முக்கியமான கனிமங்கள் தேவைப்படுவதாகவும் கூறும் அவர்கள், இது பூமியின் வளங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, நைஜீரியாவின் அபுஜாவில் செப்டம்பர் 2023ல் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
எஸ்யூவிக்களின் பயன்பாடு அதிகரித்திருப்பது போக்குவரத்து துறையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள்.
“கனமான, குறைந்த செயல்திறன் கொண்ட எஸ்யூவிக்கள் போன்ற வாகனங்கள் எரிசக்தி பயன்பாடு மற்றும் கார்பன் உமிழ்வு தடுப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பெருமளவில் மட்டுப்படுத்திவிட்டது.” என ஐஇஏ கூறுகிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் காலநிலை மாற்ற குழு 2024ல் தங்கள் நாட்டின் கார்பன் உமிழ்வு குறைப்பு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலும் இதே மாதிரியான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.