பட மூலாதாரம், UNHRC
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
“அறிக்கையைத் தயாரிக்கும்போது நான் ஏன் இஸ்ரேலிய படையினரிடம் பேசவில்லை என்று பலர் கேட்கிறார்கள். இஸ்ரேலிய படையினர் எங்களிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிடமும் தங்களுக்காகப் பேசினார்கள். அவர்கள் குழந்தையைக் கொன்றுவிட்டு, அதைப் பெருமையாகக் கருதி வீடியோ பதிவு செய்தார்கள்.”
இவை, இந்தியாவின் புகழ்பெற்ற சட்டத்துறை வல்லுநரும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான எஸ். முரளிதரின் வார்த்தைகள் ஆகும். இவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்து, காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்த முக்கியமான ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கையில், காஸாவில் பாலத்தீனக் குழந்தைகளை இஸ்ரேல் திட்டமிட்டும், வேண்டுமென்றே குறிவைத்தும் தாக்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காஸாவில் பாலத்தீன மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் இருத்தலையும் அழிப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
தனது நான்கு தசாப்த கால நீண்ட பணிகாலத்துக்குப் பிறகு, நீதிபதி முரளிதர் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு, அவர் மீண்டும் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார்.
உச்ச நீதிமன்றம் அவருக்கு ‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்தை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதத்தில், மனித உரிமைகள் பேரவை அவரை ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமித்தது.
இந்த விசாரணை ஆணையத்தின் பணி, கிழக்கு ஜெருசலேம் உட்பட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலத்தீனப் பகுதிகள் மற்றும் இஸ்ரேல் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதாகும்.
இந்த அறிக்கை தொடர்பான பல்வேறு அம்சங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரச்னைகள் குறித்து பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித், நீதிபதி முரளிதரிடம் கலந்துரையாடினார்.
தங்களுக்குத் துன்பம் ஏற்பட்டபோது ‘இந்த உலகம் தூங்கிக் கொண்டிருந்தது’ என பாலத்தீனக் குழந்தைகள் நினைத்துவிடக் கூடாது என நீதிபதி முரளிதர் கூறுகிறார்.

இஸ்ரேலுக்கு எதிரான சான்றுகள் இருக்கின்றனவா? இருந்தால் அவை யாவை?
பாலத்தீன அமைப்புகளை முழுமையாக அழிப்பதே இஸ்ரேலின் உத்தி என நீதிபதி எஸ். முரளிதர் நம்புகிறார். இஸ்ரேலின் தடுப்புக்காவலில் உள்ள பாலத்தீனக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையானது, அரசின் ஆதரவோடு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று அவர் கூறுகிறார்.
இந்தக் கூற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா அல்லது இது குறித்த விவரங்களை நீங்கள் இஸ்ரேலிடம் கேட்டீர்களா என்று நாங்கள் அவரிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “ஆம். இந்த முழு அறிக்கையையும் வரைவு வடிவத்தில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது என்பதை நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலத்தீனப் பகுதிகளுக்குச் செல்ல விரும்புகிறோம் என்ற எங்கள் விருப்பத்தை நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம், ஆனால் எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை” என்று அவர் பதிலளித்தார்.
தனது குழு பெற்ற தகவல்களுக்கு முரணான ஆதாரங்கள் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் இருந்தால், அதைச் சமர்ப்பிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்றும் அவர் கூறுகிறார்.
அவரது சமீபத்திய அறிக்கை, பாலத்தீனக் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறை மற்றும் குற்றங்களை ஆராய்கிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியபோது தொடங்கின. இந்தத் தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸுக்கு எதிராகத் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, அதன் பிறகு நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் 21,000 குழந்தைகள் உட்பட 73,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் வழங்கிய இந்தப் புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடுகள் சபையும் நம்பகமானவையாகக் கருதுகிறது.
குழந்தைகள் தொடர்பாக சர்வதேசச் சட்டம் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலத்தீனக் குழந்தைகளின் புகைப்படங்கள் பலமுறை வெளிவந்துள்ளன. இத்துடன், இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளும், நகரம் இடிபாடுகளாக சிதைக்கப்பட்ட காட்சியும், காஸாவின் நிலப்பரப்பு எவ்வளவு கடுமையாக மாறியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.
நீதிபதி முரளிதர் இதுபற்றி இவ்வாறு கூறுகிறார்: “குழந்தைகளின் பாதுகாப்புக்காக மூன்று சட்டங்கள் பரவலாக உள்ளன. அதில் முதலாவது சர்வதேச மனித உரிமைகள் சட்டம். இது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தையும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை உள்ளடக்கிய பிற ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளையும் உள்ளடக்கியது.
இரண்டாவது சர்வதேச மனிதாபிமானச் சட்டம், இதில் ஜெனீவா உடன்படிக்கைகள் அடங்கும். மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இது ஆணையிடுகிறது. உதாரணமாக, யாராவது வெள்ளைக்கொடி காட்டினால், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது.”
இதன் கீழ், அவசர சிகிச்சை ஊர்திகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதும் அடங்கும்.
மேலும், “இவை அனைத்தும் மனிதாபிமான சட்டத்தின் கீழ் வருகின்றன, மேலும் ஆக்கிரமிப்பு செய்பவரின் பொறுப்பு என்ன என்பதையும் இது விளக்குகிறது.”
“இந்த விவகாரத்தில் மூன்றாவதாக, சர்வதேச குற்றவியல் சட்டம். இந்த மூன்று சட்டங்களிலும், குழந்தைகளுக்கு என்று ஒரு தனித்துவமான / சிறப்பு அந்தஸ்து உள்ளது என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் ஒருபோதும் சட்டப்பூர்வமான இலக்குகள் அல்ல என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று நீதிபதி முரளிதர் கூறுகிறார்.
இந்த அறிக்கையின் அடிப்படை என்ன?
பட மூலாதாரம், Getty Images
விசாரணை ஆணையம் தனது அறிக்கையைத் தயாரிப்பதில் ஏதேனும் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றியதா என்று பிபிசி நீதிபதி முரளிதரிடம் கேட்டது.
மேலும் இதற்காக எத்தனை சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது? மேலும், அவர்களால் காஸாவுக்கு நேரடியாகச் செல்ல முடியாத பட்சத்தில், அவர்கள் யாரிடமெல்லாம் பேசினார்கள் என பல கேள்விகளைக் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த நீதிபதி முரளிதர், “உங்கள் கேள்வி சரியானதுதான், ஆனால் இந்த ஆணையம் ஒரு விசாரணை அமைப்பே தவிர, நீதித்துறை அமைப்பு அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இது தீர்ப்புகளை வழங்குவதில்லை. மேலும் எந்தவொரு நிகழ்வுக்கும் பாதிக்கப்பட்டவர் மற்றும் தாக்குதல் நடத்தியவர் என இரு தரப்புகள் இருக்கும். இதற்காக நாங்கள் பல்வேறு பொதுத் தரவு மூலங்களை பெரிதும் நம்பியிருந்தோம்,” என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்கள், நேரில் பார்த்த சாட்சிகள், குழந்தைகள் மற்றும் சிகிச்சைக்காக காஸாவிலிருந்து வெளியேற முடிந்தவர்களின் தனிப்பட்ட வாக்குமூலங்கள், தடயவியல் ஆதாரங்கள், மின்னணு சான்றுகள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் இருந்த ஆதாரங்களையும் நாங்கள் சேகரித்தோம்” என்றார்.
காஸாவில் மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் நேரடி அவதானிப்புகளும் இந்த அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தன என்று நீதிபதி முரளிதர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் விளக்குகையில், “நாங்கள் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது. எங்களின் இந்த செயல்முறையை அறிக்கையின் 8 மற்றும் 10 ஆகிய பத்திகளில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். ஒரே தகவலை நாங்கள் பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தினோம்.”
“ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒரு காலவரிசையும், அதற்கென ஒரு புவியியல் இருப்பிடமும் இருக்கும். சம்பவ நடந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டறிய செயற்கைக்கோள் படங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். சம்பவம் நடந்தபோது இஸ்ரேலிய ராணுவத்தினர் அங்கு இருந்திருக்க வாய்ப்புள்ளதா என்பதைத் தீர்மானிக்க, அவர்களின் இருப்பிடங்கள் குறித்தும் நாங்கள் ஆய்வு செய்தோம்.”
அவர் மேலும் கூறுகையில், “எங்கள் குழுவில் ஆயுதங்கள், போர்க்கருவிகள், ராணுவத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யும் ராணுவ ஆய்வாளர் ஒருவரும் உள்ளார். இந்த ஆணையத்தில் பாலின விவகார நிபுணர்கள், தடயவியல் சைபர் குற்ற நிபுணர்கள் உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.” என்றார்.
பலர் ஆணையத்துக்கு தங்களது வீடியோ, ஆடியோ கிளிப்புகள் அல்லது புகைப்படங்களை அனுப்புவதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு, நம்பகமான மற்றும் உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்களை மட்டுமே ஆணையம் தனது விசாரணை வரம்புக்குள் எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இருப்பினும், நாங்கள் இஸ்ரேலிய அரசாங்கம், இஸ்ரேலிய ராணுவம் அல்லது இஸ்ரேல் மக்களிடம் பேசவில்லை என்று ஒருவர் கூறலாம். அதற்கு எனது பதில் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அறிக்கையின் வரைவை நாங்கள் முன்கூட்டியே இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு அனுப்புகிறோம்.”
“வரைவு அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்பாக, ‘நாங்கள் குறிப்பிட்ட சில கருத்துகள் தவறானவை’ என்றோ அல்லது ‘ஆய்வு செய்யப்பட வேண்டிய வேறு தொடர்புடைய சான்றுகள் உள்ளன’ என்றோ அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை” என நீதிபதி முரளிதர் கூறுகிறார்.
‘தாங்கள் என்ன செய்தோம் என்பதை இஸ்ரேலிய ராணுவமே அனைவருக்கும் தெரிவித்தது’
பட மூலாதாரம், Getty Images
பாலத்தீன அதிகாரிகளுக்கும் தாங்கள் வரைவு அறிக்கையை அனுப்பியிருந்ததாகவும், அவர்களின் கருத்துக்களுக்குப் பிறகு அறிக்கையில் சில திருத்தங்களைச் செய்ததாகவும் நீதிபதி முரளிதர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இதுதவிர, அறிக்கை தயாராகிக் கொண்டிருந்த போதே, நான் இந்த ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், இஸ்ரேலிய அதிகாரிகளைச் சந்திக்கவும், காஸாவைப் பார்வையிடவும் விரும்புவதாகத் தெரிவித்து அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் குறிப்பு ஒன்றை அனுப்பினேன்; ஆனால் அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இஸ்ரேலிய படையினரே காணொளிகளை உருவாக்கி அவற்றைச் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள். அதில் ஒருவர், 16 வயது சிறுவர் ஒருவரைக் கொன்றதாகக் கூறினார்; அவர் அந்தக் காணொளியில் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார், அதை மக்கள் பார்க்கின்றனர்” எனக் கூறுகிறார்.
“எனவே, நாங்கள் இஸ்ரேலிய ராணுவத்திடம் பேசவில்லை என்று பலர் கூறினாலும், இஸ்ரேலிய ராணுவம் உண்மையில் ஒட்டுமொத்த உலகத்துடனும் பேசியிருக்கிறது; ஒரு குழந்தையைக் கொன்றதில் அவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.”
அக்டோபர் 7-ஆம் தேதி நிகழ்வுகளுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதி சமூக ஊடகங்களில் பதிவிட்ட இஸ்ரேலின் துணை சபாநாயகர் நிசிம் வதுரி குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நீதிபதி முரளிதர் கூறுகையில், “அவர் தனது பதிவில், ‘காஸா முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்றும்; அதற்குக் குறைவான எதுவும் தங்களுக்குத் திருப்தி அளிக்காது என்றும் ஒரு குழந்தை கூட மிஞ்சக்கூடாது என்றும் எழுதியிருந்தார்; எஞ்சியிருக்கும் மக்கள் அனைவரும் அகற்றப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் மீண்டும் ஒருபோதும் எழ முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.” என்றார்.
நீதிபதி முரளிதர் மேலும் கூறுகையில், “இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்… 2025 ஜனவரி 30 அன்று, ‘காஸா பயங்கரவாதிகளால் நிரம்பியுள்ளது, அங்கு பிறக்கும் எந்தவொரு குழந்தையும் பிறந்த கணத்திலிருந்தே ஒரு பயங்கரவாதிதான்’ என்று அவர் மீண்டும் கூறினார்.” என்றார்.
“அவர்களின் பிற அரசியல்வாதிகளின் சிந்தனைகளும் மக்களின் முன்னால் உள்ளன, அதை நீங்கள் இணையத்தில் பார்க்கலாம். அதை யாரும் மறுக்கவும் இல்லை.”
நீதிபதி முரளிதர் பிபிசியிடம் கூறுகையில், “இஸ்ரேலிய அதிகாரிகள் எங்கள் அறிக்கைக்கு எதிராக 18 பக்க மறுப்பு அறிக்கையைத் தயாரித்து, அதை மக்களிடையே பரப்பியுள்ளனர். அதை அவர்கள் எங்களுக்கு அனுப்பவில்லை, மாறாக நாங்கள் ‘பாகுபாடு மற்றும் ஒருதலைப்பட்சமாக’ செயல்படுவதாக எங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்” என்றார்.
நீதிபதி முரளிதர் மேலும் கூறுகையில், “எங்கள் அறிக்கை தவறு என்று நிரூபிக்கும் ஏதேனும் சான்றுகள் இஸ்ரேலிடம் இருந்தால், அதை அவர்கள் இப்பொழுதும் சமர்ப்பிக்கலாம்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு