18
டிஜிட்டல் ஊடகச் சூழலிலும் மகாகவி அச்சு இதழை தொடர்ந்து வெளியிடும் கவிஞரும் இதழாசிரியருமான வதிலைப் பிரபாவின் நேர்காணல் இவ்வாரம். நவீன டிஜிட்டல் ஊடகச் சூழலில் மகாகவியை இன்னமும் வெளியிட உங்களால் எப்படி முடிகிறது? என்ற வணக்கம் இலண்டனின் கேள்விக்கு இப்படிப் பதில் அளிக்கின்றார்.
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் இருந்து மகாகவி இதழ் வெளிவருகிறது. வத்தலகுண்டுக்கு என்று ஒரு பெருமை உண்டு. 930 களில் வெளிவந்த “மணிக்கொடி” இதழின் ஆசிரியர் பி.எஸ். இராமையா மற்றும் 1970 களில் வெளிவந்த “எழுத்து” இதழின் ஆசிரியர் சி.சு. செல்லப்பா இருவரும் பிறந்த மண் வத்தலகுண்டு. மணிக்கொடி சிறுகதைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. எழுத்து புதுக்கவிதைகளில் எழுச்சியை ஏற்படுத்திய இதழ் எழுத்து. மட்டுமல்ல தமிழின் இரண்டாம் நாவலான “கமலாம்பாள் சரித்திரம்” எழுதிய பி.எஸ். இராஜம் ஐயர், சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா பிறந்த மண்ணும் வத்தலகுண்டுதான். 1913 முதல் 1916 வரை சுப்பிரமணிய சிவா “ஞான பானு” எனும் இதழை நடத்தியவர். வத்தலகுண்டு நான் பிறந்த மண் அல்ல. வாழும் மண். சிற்றிதழ்களோடு தொடர்புடைய மண் என்பதாலோ என்னவோ 1996 களில் “மகாகவி” எனும் இதழினைத் தொடங்கி இன்றுவரை நடத்தி வருகிறேன்.
1197 முதல் 2005 வரை கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன். 2005 முதல் தற்போது வரை உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறேன். நீண்ட காலம் சிற்றிதழ்கள் சங்கத்தின் நிர்வாகியாகப் பணியாற்றியவர் நான் மட்டுமே. அந்த வகையில் சிற்றிதழ்களின் தொடர்பும் அதன் வளர்ச்சியும் போக்கும் அறிந்தவன் மட்டுமல்ல அதன் வீழ்ச்சியையும் அறிந்தவனாகிறேன். கோவையிலிருந்து 1970 களில் வெளிவந்த “வானம்பாடி” இதழின் பெரும் எழுச்சியை அறிந்தவர்கள் அதன் வீழ்ச்சியையும் அறிந்திருப்பர்.ஓர் இதழின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாகப் பொருளாதாரம் முக்கியக் காரணமாகிறது. பரந்துபட்ட இலக்கிய உலகில் தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி இயங்குகிற சிற்றிதழ்கள் காலப்போக்கில் நீர்த்துப் போவதுமுண்டு. இதற்குக் காரணம் படைப்புத் தேர்வு கடந்து படைப்பாளர் தேர்வு என்கிற நகர்வுதான். ஓர் சிற்றிதழாளன் இருக்கிறவரை ஒரு சிற்றிதழ் வரும்தான். அவனுக்குப் பின்னர் அந்த சிற்றிதழின் நீட்சி தடைபடும். காரணம் அந்த இதழின் நோக்கம், கொள்கை.


நவீன டிஜிட்டல் உலகத்தில் சிற்றிதழ்களின் வீழ்ச்சி என்பது மேற்கண்ட வரையறைக்குள் அடங்குமா என்பது கேள்விதான். இங்கே பொருளாதாரம் என்பது காரணமல்ல. பெரும் இதழ்கள் கூட தமது உற்பத்தியை நிறுத்தியமைக்குக் காரணம் பொருளாதாரம் அல்ல. வாசிப்புத் தன்மையை முற்றிலும் மடைமாற்றி வேறொரு உலகத்திற்கு மக்களை திசைதிருப்பிய டிஜிட்டல் சந்தையில் புத்தகங்களுக்கென்ற கடைகள் இல்லை. புத்தகச் சந்தை / திருவிழா போன்ற நவீன / புதிய மார்க்கெட்டிங் முறையில் புத்தகங்களை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்தாலும் அங்கே இதழ்களுக்கென்று ஒரு கடையும் / ஸ்டாலும் இல்லை. பேரிதழ்களுக்கே இந்த நிலைமை என்றால் சிற்றிதழ்கள் நிலைமை சொல்லவே வேண்டாம்.
இந்தச் சூழலில் மகாகவி இதழை இணையத்தில் கொண்டு வந்தோம். மின்னிதழாகக் கொண்டு வந்தோம். அச்சு மற்றும் இணைய இதழாக இணைந்து கொண்டு வந்தோம். எதுவும் இலக்கை அடையவில்லை. சிற்றிதழ்களோடு நீண்ட தொடர்பு கொண்ட நான் இதுகுறித்தும் பல மாதங்கள் யோசித்திருக்கிறேன். போகிற போக்கில் வாசிக்கிற மனநிலை கொண்ட வாசகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பேரிதழ்கள் ஏன் தன்னை நிறுத்திக் கொண்டன என்பதையும் உற்று நோக்கினேன்.
ஓர் இதழ் பரவலான அறிமுகத்தை அடைய முதலில் குழு மனப்பான்மையைத் துடைத்தெறிய வேண்டும். எந்த நோக்கிலும் வணிக நோக்கு இருக்கக் கூடாது. புரவலர்களுக்குச் சாமரம் வீசுகிற இதழாகவும் இருக்கக் கூடாது. சிற்றிதழ் என்ற தளத்திலிருந்து விலகக்கூடாது. ஆனாலும், இதழ் தொடர்ந்து வரவேண்டும், அனைவரும் வாசிக்க வேண்டும்.. இது எப்படிச் சாத்தியமாகும்? யோசித்துப் பார்த்தேன்.. நான் ஒரு வடிவமைப்பாளனும் கூட. படைப்பாளன் மற்றும் விமர்சகன் என்பதாலும் இது சாத்தியமானது என்பேன்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் சமரசம் கூடாது என்பதில் கவனம் கொண்டேன். அது படைப்புத் தேர்வு மட்டுமல்ல, உயர்தர தாள், உயர்தர அச்சும் இதைச் சாத்தியமாக்கியது. நானே இதழினை வடிவமைப்பதால் மகாகவி ஆகச் சிறந்த layout என்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. இது மகாகவி நோக்கி பலரையும் திரும்ப வைத்தது. இதுவரை எழுதாவரெல்லாம் மகாகவியில் எழுதத் தொடங்கியது ஆகச் சிறந்த நகர்வாகப் பார்க்கிறேன். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்க விருது, எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் “தமிழ்ப் பேராயம்” விருது எனப் பரவலான அங்கீகாரத்தை மகாகவி பெற்றது.


இயக்குநர் அகத்தியன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பிதழ்கள் பெரும் வரவேற்பு பெற்றன. வாழும் மூத்த படைப்பாளர்களைக் கொண்டாடுவது என்கிற மகாகவியின் வெளியீடுகள் பாதுகாக்கவேண்டிய கருத்துப் பேழைகளாயின.
எத்தனை நவீன டிஜிட்டல் யுகமாக இருந்தாலும் மகாகவி தன்னை இணைத்துத் தன் பயணத்தைத் தொடரும்தான். ஏஐ தொழில்நுட்பங்களையும் மகாகவி மிகச் சரியாகப் பயன்படுத்தி தன் பயணத்தைத் தொடர்கிறது என்பேன்.
மகாகவி எனும் ஊடகக் கட்டுமரம் கவிழாமல் பயணிக்கப் படைப்பாளர்கள், புரவலர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள் மட்டுமல்ல ஆசிரியர் குழுவும் முக்கியக் காரணம். நவீன டிஜிட்டல் எனும் கடலின் பெரும் கொந்தளிப்புக்கிடையே துடுப்புகளைக் கைவிடாமல் இயக்குகிற ஆசிரியர் குழுவினர் இதில் முக்கியமானவர்கள். ஆசிரியர் தமிழ்ச் செம்மல் வதிலைபிரபா, இணை ஆசிரியர்கள் மொழிபெயர்ப்பாளர் அமரன். முனைவர் ஜா. சலேத், முனைவர் ஜோ. பிரேமா கிறிஸ்டி, எழுத்தாளர் ம. திருவள்ளுவர், கவிஞர் சாக்லா உள்ளிட்ட இந்தக் கூட்டு முயற்சியும் மிகமுக்கியக் காரணம்.