சென்னை: ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இல்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை என்று நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கூடுதல் டிஜிபி அறையில் இருந்த காப்பர் வயர்கள் மூலம் தீப்பித்துள்ளது. அறையில் பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த எரிபொருளும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இருந்ததாக கண்டறியப்படவில்லை. கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன? – தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி கல்பனா நாயக். இவர், கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐஜி-யாக பணியாற்றினார். அப்போது, ஜூலை 28-ம் தேதி அவரது அலுவலக அறையில் திடீரென்று தீப்பிடித்தது. தீயணைப்பு த்துறையினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். இவ்விபத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, கல்பனா நாயக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘எனது அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதி திட்டம் உள்ளது. எனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் சதி திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டியதால் இந்த சதி திட்டம் நடந்து இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக தெரிகிறது.
ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து, தமிழக அரசுக்கு எதிரான கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றன.
தலைவர்கள் வலியுறுத்தல்: “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னைக் கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல் துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்’ என்ற அவரின் கூற்று நெஞ்சை பதறச் செய்கிறது.
ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள். இத்தகைய ஆட்சியில் மக்கள் எப்படி தங்களது குறைகளை தைரியமாகச் சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது காவல்துறை மேல் விழுந்த பெரும் கரும்புள்ளி. இதற்கு திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
“விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. அந்தவகையில் காவல் துறை உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் சுட்டிக்காட்டியதற்கு பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மவுனமாக்கவே பயன்படுத்தப்படுகிறது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்.
“காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஒரு ஏடிஜிபியே கூறியிருப்பது ஐயத்தை அதிகரிக்கிறது. இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமை விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். படுகொலை செய்ய சதி நடந்ததாக ஏடிஜிபி கூறியது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.