பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்திய அரசு 2025-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தச் சட்டம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது 64 ஆண்டுகள் பழமையான 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக அமையும்.
இந்த புதிய சட்டத்தின் அறிமுகப்படுத்தப்படுவதால், வரி விதிப்பு முறை எளிமையாகும், விதிமுறைகளுக்கு இணங்குவது மேம்படும் மற்றும் வழக்குகளும் குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வரி அடுக்குகளிலோ (ஸ்லாப்ஸ்) அல்லது வரி விகிதங்களிலோ எந்த மாற்றமும் இல்லை, ஆனால் சம்பளம் பெறுவோர், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன?
இனிமேல், ‘நிதியாண்டு’ மற்றும் ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்பதற்குப் பதிலாக, ‘வரி ஆண்டு’ மட்டுமே இருக்கும். இது குழப்பத்தைக் குறைத்து வரி கணக்கீடுகளை எளிதாக்கும்.
எளிய வருமான வரித் தாக்கல் (ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2) செய்வதற்கான காலக்கெடு இனி ஜூலை 31 ஆக இருக்கும். வணிகம்/தொழில் தொடர்பான வருமான வரித் தாக்கல் (ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4) செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆக இருக்கும்.
மேலும், தணிக்கை செய்யப்பட்ட வழக்குகள்/நிறுவனங்களுக்கான காலக்கெடு அக்டோபர் 31 ஆக இருக்கும்.
சில நேரத்தில், காலக்கெடு நவம்பர் 30 ஆக இருக்கும். திருத்தப்பட்ட வருமான அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரி ஆண்டு முடிவடைந்ததிலிருந்து 12 மாதங்கள் வரை கட்டணத்தைச் செலுத்தி திருத்தப்பட்ட படிவங்களைத் தாக்கல் செய்யலாம்.
1. வீட்டு வாடகைப்படி (ஹெச்ஆர்ஏ) தொடர்பாக என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?
பட மூலாதாரம், Getty Images
புதிய விதிகள் சம்பளம் பெறும் தனிநபர்களுக்கான வீட்டு வாடகைப்படி (ஹெச்ஆர்ஏ) மீதான வரி விலக்கை மேம்படுத்துகின்றன, அதே சமயம் விதிகளைச் சற்று கடுமையாக்கியும் உள்ளன.
இனி இந்த வரி விலக்கைப் பெற, வீட்டு உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துவது கட்டாயமாக்கப்படும்.
புதிய விதிகளின்படி, மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, ஹைதராபாத், புனே, ஆமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் வசிக்கும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 50 சதவீதம் வரை வீட்டு வாடகைப்படி (ஹெச்ஆர்ஏ) வரி விலக்கு பெறலாம். மற்ற இடங்களுக்கு இந்த வரம்பு 40 சதவீதமாகவே இருக்கும்.
இதுவரை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே 50 சதவீத வரி விலக்கு கிடைத்து வந்தது. மற்ற இடங்களில் இந்த விலக்கு 40 சதவீதமாக இருந்தது.
நீங்கள் ஒரு வருடத்தில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலுத்தினால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
2. நிறுவனத்தின் கார்கள் மற்றும் ஓட்டுநர்கள் தொடர்பான விதிமுறைகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
புதிய விதிகளின்படி, நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வீட்டின் வரி மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு, வரி விதிக்கப்பட வேண்டிய மதிப்பு இனி அவர்கள் வசிக்கும் நகரத்தின் மக்கள் தொகையைப் பொறுத்து அமையும்.
40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், இது சம்பளத்தில் 10 சதவீதமாக இருக்கும்.
15 முதல் 40 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சம்பளத்தில் 7.5 சதவீதமாகவும், இதர பகுதிகளில் 5 சதவீதமாகவும் இருக்கும்.
முன்பு இந்த விகிதங்கள் 15 சதவீதம் வரை இருந்தன. இது தனியார் நிறுவன ஊழியர்களுக்கான வரியைக் குறைக்கும்.
அதேபோல், கார் பயன்பாடு தொடர்பான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.
ஒரு ஊழியர் நிறுவனத்தின் காரைத் தனது சொந்தத் தேவைக்கும் அலுவலகத் தேவைக்கும் பயன்படுத்தினால், 1.6 லிட்டர் என்ஜின் திறன் கொண்ட காருக்கு மாதம் 5,000 ரூபாயும், அதைவிடப் பெரிய கார்களுக்கு மாதம் 7,000 ரூபாயும் வரிக்குரிய மதிப்பாகக் கணக்கிடப்படும்.
நிறுவனத்தின் மூலம் ஓட்டுநர் வழங்கப்பட்டால், இந்த மதிப்போடு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் கூடுதலாகச் சேர்க்கப்படும்.
இது தவிர, நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசுகள் அல்லது வவுச்சர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.
3. வேறு தள்ளுபடிகள்
ஊழியர்களுக்கான இலவச உணவு மற்றும் பானங்களுக்கான வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒரு வேளை உணவிற்கு ₹50 வரை மட்டுமே இருந்தது, தற்போது அது ₹200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசுகள் அல்லது வவுச்சர்கள் ₹15,000 வரை வரி விலக்கு பெறும், ஆனால் இந்தத் தொகை வரம்பை மீறினால், முழுத் தொகைக்கும் வரி விதிக்கப்படும்.
4. கல்வி உதவித்தொகைக்கு வரி விலக்கு
பட மூலாதாரம், Getty Images
குழந்தைகளின் கல்வி உதவித்தொகைக்கு மாதந்தோறும் ₹3,000 வரி விலக்கு வழங்கப்படும். இந்தியா முழுவதும் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளின் கல்விக்கு இந்த விலக்கு அளிக்கப்படும். முன்னதாக, இந்தத் தொகை ₹100 ஆக மட்டுமே இருந்தது.
விடுதிப் படிக்கான வரி விலக்கில் மாதத்திற்கு ₹9,000 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது (இதுவும் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்).
இதற்கு முன்பு இந்தச் சலுகைக்கான தொகை ₹300 ஆக இருந்தது.
5. மூலதன ஆதாயங்கள் குறித்த தெளிவுரை
சொத்துக்கள் எவ்வளவு காலம் கைவசம் வைக்கப்பட்டிருந்தன என்பது எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பதைப் புதிய அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.
இது அந்தச் சொத்தின் மூலம் கிடைக்கும் பலன் குறுகிய காலமா அல்லது நீண்ட காலமா என்பதைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமானது.
இனிமேல், ஒரு பாதுகாப்புப் பத்திரமானது (பங்குகள் அல்லது கடன்பத்திரங்கள் போன்றவை) மாற்றப்பட்டால், அந்தப் புதிய பத்திரத்தை வைத்திருக்கும் காலத்துடன், அதற்கு முன்பாக அசல் முதலீட்டை (பத்திரங்கள் அல்லது வைப்புச் சான்றிதழ்கள் போன்றவை) வைத்திருந்த காலமும் சேர்த்துக் கணக்கிடப்படும்.
கடுமையான விதிகள்
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மூலதன ஆதாய வரி, பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வரி விதிப்பு போன்ற பல துறைகளில் புதிய விதிகள் விதிமுறைகளுக்கு இணங்குவதை முறைப்படுத்துகின்றன.
கூடுதலாக, வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் தொடர்பான முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வரி தொடர்பான பணிகள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கிய 150-க்கும் மேற்பட்ட படிவங்களை புதிய விதிகள் அறிமுகப்படுத்துகின்றன.
செய்தித்தாள் தகவலின்படி, தணிக்கையாளர்களும் நிறுவனங்களும் இனி கூடுதல் பொறுப்புகளை எதிர்கொள்ள நேரிடும், ஏனெனில் அவர்கள் வெளிநாட்டு வருமானத்திற்கான வரி க்ரெடிட்ஸ்களை (tax credits) மிகவும் நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கும்.
பொருளாதார நிபுணரும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான வேத் ஜெயின் பிபிசியிடம் கூறுகையில், “அரசாங்கம் வருமான வரி தொடர்பான விதிகளில் உள்ள சொற்களை மாற்றி, அதை மறுவடிவமைப்பு செய்துள்ளது. அதாவது விதிகள் மாறியுள்ளன, எனவே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டியது அவசியமாக இருந்தது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “பான் கார்டு தயாரிப்பது தொடர்பான விதிகளில் சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளது. உண்மையில், சாமானிய மக்களுக்கு இதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களிடம் (எப்ஃபிஐ) இந்தியாவில் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட நபர் யார் என்று இப்போது கேட்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிக்கும் ஒரு நபருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது, இது பொறுப்பை மாற்றுகிறது. இது ஒரு சிக்கலாக மாறக்கூடும்” என்றார்.
இதுகுறித்து பட்டயக் கணக்காளர் அமித் பதக் கூறுகையில், “சாமானிய மக்களைப் பொறுத்தவரை, இந்த மாற்றங்களின் மூலம் அரசாங்கம் வரி செலுத்துவோர் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது,” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “புதிய சட்டம் அதன் சொற்களை மாற்றுவதன் மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பல சிக்கலான பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. ஏதேனும் கடுமையான தவறுகள் நடக்காதவரை, வருமான வரி செலுத்தும் மக்களை அரசாங்கம் நம்பும் என்பதை உணர்த்துவதற்கான ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு