• Mon. Sep 22nd, 2025

24×7 Live News

Apdin News

ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு | internal reservation is making the ‘doctor’ dream of the poor come true

Byadmin

Sep 22, 2025


சென்னை: ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை 6-வது ஆண்டாக நனவாக்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 632 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். குறிப்பாக, 2014-15-ம் ஆண்டில் 38 பேரும், 2015-16-ம் ஆண்டில் 36 பேரும், 2016-17-ம் ஆண்டில் 34 அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை இலக்கமாக குறைந்தது: நீட் தேர்வுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. 2017-18-ம் ஆண்டில் 3 பேரும், 2018-19-ம் ஆண்டில் 5 பேரும், 2019-20-ம் ஆண்டில் 6 பேரும், 2020-21-ம் ஆண்டில் 11 அரசு பள்ளி மாணவர்களால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து, படிப்புக்கான முழு செலவையும் அரசு ஏற்பதாக அறிவித்தது.

ஏழை மக்களிடம் வரவேற்பு: இத்திட்டம் ஏழை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பொறியியல், கால்நடை, ஆயுஷ், சட்டம், வேளாண் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வுக்கு முன்பு இருந்ததைவிட, அரசுப் பள்ளிகளில் படிக்கும் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்து டாக்டராகி வருகின்றனர். 2020-21-ம் ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 435 பேரும், 2021-22-ம் ஆண்டில் 555 பேரும், 2022-23-ம்ஆண்டில் 584 பேரும், 2023-24-ம் ஆண்டில் 625 பேரும், 2024-25-ம் ஆண்டில் 625 பேரும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

நடப்பாண்டில் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மேலும் 19 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறவுள்ளனர்.

இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டில் மொத்தம் 632 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவுள்ளனர். 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம் 6-வது ஆண்டாக கூலித்தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், ஏழை விவசாயி போன்ற அடித்தட்டு சாமானியர்களின் பிள்ளைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாகி வருகிறது.



By admin