• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

ஏவுகணைகளின் இலக்காகும் சொகுசு தேசங்கள் – வளைகுடா நாடுகள் பிளவுகளை மறந்து இரானுக்கு எதிராக ஒன்றிணையுமா?

Byadmin

Apr 3, 2026


இரான் போர், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானியத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில், ட்ரோன் மூலம் தாக்கப்பட்ட கட்டடம்.

நீண்ட காலமாக வளைகுடா நாடுகள் அமைதி மற்றும் லட்சியங்களின் சோலைகளாகக் கருதப்படுகின்றன. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் முதலீட்டாளர்களையும், முன்னணி நிறுவனங்களையும், திறமையான தொழிலாளர்களையும் பெருமளவில் ஈர்த்துள்ளன. அங்குள்ள விமான நிலையங்கள் உலகளாவிய மையங்களாகவும், நகரங்கள் நிதி மற்றும் சுற்றுலா மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

ஆனால், இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் இந்தப் பிம்பத்தை உலுக்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவப்படும் இரானிய ஏவுகணைகளும் ட்ரோன்களும் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் தாக்கியுள்ளன.

இந்த நாடுகள் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க முயன்று வருகின்றன. உதாரணமாக, கத்தார் அரசாங்கம் ‘வீட்டிலிருந்து பணி’ முறையை முடிவுக்குக் கொண்டுவந்து, பல்கலைக்கழக வகுப்பறைகளை மீண்டும் திறந்துள்ளது. ஆனால், வளைகுடா நாடுகள் அதிர்ச்சிகளைத் தாங்கும் திறன் கொண்டவை என்றாலும், இந்தப் போர் ஒரு மூலோபாய மாற்றத்தை கட்டாயமாக்கியுள்ளதாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

வாஷிங்டனைச் சேர்ந்த ‘மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிடியூட்’ ஆய்வுக் குழுவின் அலெக்ஸ் வதன்கா, “இரானிடமிருந்து வரும் தாக்குதல்களை உங்களால் நிறுத்த முடியாது, ஏனெனில் அது புவியியல் ரீதியாக மிக அருகில் உள்ளது. இந்த நாடுகள் ஒரு போரின் இடுக்கில் சிக்கிக்கொண்டன. தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு போரில் அவை முன்வரிசை நாடுகளாக மாறிவிட்டன, அதற்காக அவை மிகப்பெரிய பொருளாதார விலையைக் கொடுத்து வருகின்றன” என்கிறார்.

“அவர்கள் தங்கள் பணம் முழுவதையும் பாதுகாப்பிற்காகச் செலவழித்தாலும், நாம் பார்ப்பது என்னவென்றால், இரானுக்கு இந்த நாடுகள் மிகவும் எளிதான இலக்குகள் – இவர்களின் பில்லியன் டாலர் முதலீடுகள், சில ஆயிரம் டாலர் மதிப்புள்ள இரானிய ட்ரோன்களால் ஆபத்தில் உள்ளன” என்கிறார் அவர்.

By admin