ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ படம் வெளியான பின்பு தொடர்ச்சியாக அவருடைய இசையில் பல படங்கள் ஹிட் அடித்தன.
ஆனால் கிராமத்து பாணி இசை அவருக்கு வராது என்ற கருத்தும் அப்போது உருவாகியிருந்த நிலையில் தன்னால் கிராம பின்னணி பாடல்களையும் உருவாக்க முடியும் என ஏ.ஆர் ரஹ்மான் நிரூபித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலே அது மேற்கத்திய பாணி இசை, கணினிமயமாக்கப்பட்ட இசை, நகரவாசிகளுக்கான மெட்டு என்ற கருத்து இருந்ததை, கிராமியப் பின்னணியில் ரஹ்மான் – வைரமுத்து கூட்டணி உருவாக்கிய பல பாடல்கள் மாற்றியதுடன் அவை பெரும் வெற்றியும் பெற்றன என்கிறார் எழுத்தாளரும் இசை விமர்சகருமான அவை நாயகன்.
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளான இன்று அவர் இசையில் உருவான 5 பிரபல கிராம பின்னணி பாடல்கள் இவை.
1. போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா)
பட மூலாதாரம், Pyramid Music
1994 ஆம் ஆண்டில் முழுக்க முழுக்க கிராமத்து பின்புலத்தில் பாரதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
மேற்கத்திய பாணி இசையில் மட்டுமே ரஹ்மானால் ஜெயிக்க முடியுமென்ற கருத்தை உடைத்தெறியும் வகையில் இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அமைந்திருந்தன.
குறிப்பாக, அதில் இடம் பெற்ற ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற சோகப்பாடல், தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பண்டிகை, திருமணம், கொண்டாட்டம் என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலித்தது.
இந்த பாடலை கச்சேரிகளில் ரசிகர்கள் கேட்டுப்பாடுமளவுக்கு ஹிட் அடித்தது. வயலின் போன்று ஒலித்த ஸ்வர்ணலதாவின் மென்மைக்குரலும், ‘பால் பீச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்துக்கோழிய விட்டு’ என்ற கிராமத்து வாசனையுள்ள வைரமுத்துவின் வரிகளும் பாடலை வேறு ஓர் உயரத்துக்குக் கொண்டு சென்றிருந்தன.
இந்த பாடல் பாடியதற்காக ஸ்வர்ணலதாவுக்கு தேசிய விருதும், தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருதும் கிடைத்தன.
2. தென் கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில (கிழக்கு சீமையிலே)
பட மூலாதாரம், Kalaippuli S Thanu
இதுவும் பாரதிராஜா இயக்கிய முழுமையான கிராமத்துப் பின்னணி படம் என்பதுடன், இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் கிராமத்து வாசனையுடன் கூடிய இசையாக ரஹ்மான் வெளிப்படுத்தியிருப்பார்.
அதிலும் மலேசியா வாசுதேவனின் கம்பீரக்குரலுடன் இணைந்து, சித்ராவின் மென்மையான குரலும், ரஹ்மானின் துளித்துளியாய் வந்து விழும் மெல்லிய இசையும், ‘அணில் வால் மீசை கொண்ட அண்ணன் உன்னை விட்டு புலி வால் மீசை கொண்ட புருஷனோடு போய் வரவா’ என்ற வைரமுத்துவின் வரிகளும் அந்தப் பாடலுக்கு தனியான ஈர்ப்பைக் கொடுத்தன.
இதே படத்தில் மனோ, சுஜாதா மோகன் இணைந்து பாடிய ‘ஆத்தங்கரை மரமே’ பாடலும் கிராமத்து உறவையும், கேலி கிண்டலையும் வெளிப்படுத்தும் பாடலாக இருக்கும்.
அதேபோன்று ‘கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி’, ‘மானுாத்து மந்தையிலே’ பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டன
3. மாரி மழை பெய்யாதோ (உழவன்)
பட மூலாதாரம், PS Tamil Song
காதல் தேசம், காதலர் தினம் என சிட்டி சப்ஜெக்ட் படங்களில் ரஹ்மானுடன் சேர்ந்து மெகா ஹிட் அடித்த இயக்குநர் கதிர் இயக்கிய கிராமத்துப் பின்னணி படமான உழவன் படத்துக்கும் ரஹ்மான்தான் இசை. அதிலும் தனது கைவண்ணத்தைக் காண்பித்து பாடல்களை தமிழகமெங்கும் தெறிக்கவிட்டார் ரஹ்மான். முக்கியமாக ‘மாரி மழை பெய்யாதோ’ பாடல், எல்லோரையும் துள்ளாட்டம் போட வைக்கிற நாட்டுப்புறப் பாட்டாக வென்றது.
அந்தப் பாடலை மறைந்த பாடகர் சாகுல் ஹமீதுடன் ஜி.வி.பிரகாஷ்குமாரும், சுஜாதா மோகனும் இணைந்து பாடியிருந்தனர்.
”வடக்கே மழை பெய்ய வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்
கிழக்கே மழை பெய்ய கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்”
வாலியின் வரிகள் படத்தின் தலைப்புக்கேற்ப பச்சை வயலை இதயத்திற்குள் கொண்டு வந்தன.
ஷங்கர் ரஹ்மான் கூட்டணியில் காதலன் படத்திலும், ஜென்டில்மேன் படத்திலும் அனைத்துப் பாடல்களும் வெஸ்டர்னும், மெலடியுமாக வெளுத்து வாங்கியது என்றால், அவற்றில் தனித்துவமான கிராமத்துப் பின்னணிப் பாடலாக ஹிட் அடித்தது ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ பாடல்தான்.
மறைந்த பின்னணிப் பாடகர்கள் சாகுல் ஹமீதும் ஸ்வர்ணலதாவும் இணைந்து பாடிய இந்தப் பாடலும் பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் உள்ளங்களில் உயிர்ப்புடன் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அதற்கேற்ப இந்தப் பாடலின் வரிகளும் இசையும் இருவரின் உச்சரிப்பும் அத்தனை கச்சிதமாய் இந்தப் பாட்டில் பொருந்தியிருக்கும்.
5. உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு (முதல்வன்)
பட மூலாதாரம், Ayngaran Music
இதுவும் ஷங்கர் இயக்கிய சிட்டி சப்ஜெக்ட் படம் என்றாலும் படத்தில் ஒரு பகுதியில் மட்டும் வரும் கிராமத்துப் பின்னணிக்காக எடுக்கப்பட்ட பாடல் ‘உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு’ பாடல்.
சங்கர் மகாதேவன், கவிதா கிருஷ்ணமூர்த்தி இணைந்து பாடிய இந்தப் பாடலின் வரிகளில் வைரமுத்து எல்லோருக்கும் எச்சில் ஊறவைத்திருப்பார்.
இன்றைக்கு திருமண விழாக்களில் கலக்கல் ஆட்டம் போடும் போதெல்லாம் இடையில் இந்தப் பாட்டு வராமலிருக்க வாய்ப்பேயில்லை என்கிற அளவிற்கு எல்லோரையும் ஆட வைக்கின்ற, அதே நேரத்தில் கிராமத்து பின்னணி கொண்ட பாடலாக இந்தப் பாடல் இருந்தது.