படக்குறிப்பு, தொடரின் அமைப்பாளர்கள் போட்டியை பாதியில் கைவிட்டுவிட்டு, ஊதியத்தையும், ஹோட்டல் பில்களையும் கட்டாமல் ஓடிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கட்டுரை தகவல்
ஒரு தனியார் கிரிக்கெட் லீக் காஷ்மீரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடரின் அமைப்பாளர்கள் போட்டியை பாதியில் கைவிட்டுவிட்டு, ஊதியத்தையும், ஹோட்டல் பில்களையும் கட்டாமல் ஓடிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியன் ஹெவன் பிரீமியர் லீக் ( Indian Heaven Premier League – IHPL) தொடர் பஞ்சாப் இளைஞர் சங்கம் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கிரிக்கெட் தொடருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. கிறிஸ் கெய்ல், டெவோன் ஸ்மித் போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் தொடக்க போட்டிகளில் விளையாட, அவர்களோடு உரையாடும் வாய்ப்பு உள்ளூர் வீரர்களுக்குக் கிடைத்தது.
ஆனால் ஒரு சில போட்டிகளுக்குப் பிறகு இந்தத் தொடர் நிறுத்தப்பட்டது. ஹோட்டல் உரிமையாளர்களும் வீரர்களும் பணத்தைப் பெற திணறியதாக சொல்லப்படுகிறது.
இந்தத் தொடரின் அமைப்பாளர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி காஷ்மீரை விட்டு வெளியேறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதுவரை மொத்தம் 12 போட்டிகளே நடந்திருந்தன. அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் நவம்பர் 8-ஆம் தேதி வரை நடப்பதாக இருந்தது.
அமைப்பாளர்கள் வெளியேறியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், ஆரம்பக்கட்ட போட்டிகளுக்கு எதிர்பார்த்த ஆரவு கிடைக்கவில்லை. 25,000 முதல் 30,000 ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அது நடக்கவில்லை. இதுபற்றி ஐ.எச்.பி.எல் தலைவர் ஆஷு தானியை பிபிசி தொடர்புகொண்டு கேட்ட போது அவர் பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில், மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீரர்கள் மத்தியில் கோபமும் ஏமாற்றமும்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செய்ல்
இதுபற்று பிபிசி-யிடம் பேசிய உள்ளூர் கிரிக்கெட்டர்கள், கிறிஸ் கெய்ல் விளையாடிய போட்டியைக் காண 400-500 பேர் வந்ததாகக் கூறினார். டிக்கெட் தொகையை போட்டி அமைப்பாளர்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைத்தும் கூட கூட்டம் வரவில்லை என்றும் அவர்கள் கூறீனார்கள்.
இந்தத் தொடர் நிறுதப்பட்டிருப்பது உள்ளூர் வீரர்களுக்குக் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் இந்த சம்பவத்தை துரதிர்ஷ்டவசமானது என கூறி, இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் மன உறுதியை பாதித்துள்ளது என்றார். மேலாண்மைக் குறைபாடே இந்த நிலைக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டி, தனக்கும் ஊதியம் இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
உள்ளூர் வேகப்பந்துவீச்சாளரான அபித் நபி இதுபற்றி பிபிசி-யிடம் பேசுகையில், “இந்த லீக், உள்ளூர் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொள்ளவும், அனுபவம் பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால், ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை. வீரர்கள் இப்போது இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியைச் சேர்ந்த 8 அணிகள் இதில் இருந்தன. இந்தத் தொடர் பற்றிய பேனர்கள் மற்றும் போஸ்டர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள்.
தீவிரமாக எழுப்பப்படும் கேள்விகள்
எந்தவொரு கண்காணிப்பும் இல்லாமல் இப்படியான நிகழ்ச்சி நடைபெற அனுமதிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வியை இந்த விவகாரம் தீவிரமாக எழுப்பியுள்ளது.
இதன் ஏற்பாட்டாளர்கள் ஹோட்டல் அறையில் இருந்து நள்ளிரவு நேரம் ஓடுவதை சிசிடிவி காட்சிகளில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறுகிறார் ஶ்ரீ நகரில் உள்ள ரேடிஸ் கலெக்ஷன் ஹோட்டலின் பெயர் சொல்ல விரும்பாத ஊழியர் ஒருவர்.
ஹோட்டல் கட்டணமும் பாதியே செலுத்தப்பட்டிருப்பதாகவும், பலமுறை ஐ.எச்.பி.எல் தரப்பை தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டெவோன் ஸ்மித் இந்தத் தொடரில் பங்கேற்றிருந்தார் (கோப்புப் படம்)
சிக்கிய வீரர்கள்
போட்டி ஏற்பாட்டாளர்கள் தப்பிச் சென்றபிறகு பல வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் ஹோட்டலில் சிக்கியிருந்ததாக இங்கிலாந்து நடுவர் மெலிசா ஜுனிபர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் தலையிட்ட பிறகே வீரர்களை வெளியேற ஹோட்டல் நிர்வாகம் அனுமதித்ததாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசி-யிடம் தெரிவினர். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்தது.
“வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்க ஹோட்டல் நிர்வாகத்துடன் நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்தோம்” என்கிறார் ஜுனிபர்.
சுமார் 40 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களின் ஊதியமான 50 லட்ச ரூபாயைப் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், இந்த லீக்கை நடத்துவதில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று காஷ்மீர் நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சி மற்றும் இடத்திற்கான அனுமதியை வழங்குவதே நிர்வாகத்தின் பங்கு என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்திய ஆணையர் அஞ்சுல் கார்க் பிபிசி-யிடம் கூறினார்.
“இந்த விஷயத்தை நாங்கள் நிச்சயம் விசாரிப்போம். அதேபோல் இதுபோன்ற நிகழ்வு மறுபடியும் நடக்காமலும் பார்த்துக்கொள்வோம்” என்று அவர் கூறினார்.
ஆனால், உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்நிகழ்வு தகர்த்திருக்கிறது.
வடக்கு காஷ்மீரில் வசிக்கும் தாஹித் ஹுசைன், “கிறிஸ் கெய்ல் போன்ற நட்சத்திரங்களை அழைத்துவிட்டு நீங்கள் தலைமறைவாகக் கூடாது” என்று கூறினார். இது, வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.