பட மூலாதாரம், X/MOHSIN NAQVI
அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு தங்களுடைய அணியை அனுப்புவது தொடர்பான முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருகிற வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது.
தொடரை முழுமையாக புறக்கணிப்பது தொடங்கி இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பது வரை அனைத்து வாய்ப்புகளையும் பாகிஸ்தான் நிர்வாகிகள் பரிசீலித்து வருவதாக பிபிசி விளையாட்டு செய்தியாளர் டிமோத்தி ஆப்ரஹாம் தெரிவிக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த பிறகு பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, “பிரதமர் அனைத்து வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை தீர்க்குமாறு அறிவுறுத்தியதாக” தெரிவித்தார்.
வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்ததைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து அந்த அணியை நீக்கி அதன் இடத்தில் ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்தது.
ஐசிசியின் இந்த முடிவை ‘நியாயமற்றது’ என்றும் ‘இரட்டை நிலைப்பாடு’ கொண்டது என்றும் மொஹ்சின் நக்வி விமர்சித்திருந்தார். மற்ற அனைவருக்குமான விதிகளே வங்கதேசத்திற்கும் பொருந்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
“பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாடு இன்னொரு நாட்டில் கலந்து கொள்ள மறுத்தால், வங்கதேசத்திற்கும் அந்த உரிமை கிடைக்க வேண்டும்,” எனக் கூறினார்.
இந்தச் சூழலில் உலக கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணியை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பான முடிவை அரசு எடுக்கும் என்றும் ஐசிசி விரும்பினால் ’22வது அணியை’ சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். (பாகிஸ்தான் அதன் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடுகிறது)
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் இந்த தொடரில் விளையாடவில்லை என்றால், மாற்றுத் திட்டம் என்ன என்பது பற்றிய கேள்விக்கு, “முதலில் முடிவு வரட்டும். எங்களிடம் பிளான் ஏ,பி,சி மற்றும் டி உள்ளன.” என்று பதிலளித்தார்.
பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்புவில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியை புறக்கணிப்பது அல்லது போட்டியின்போது கருப்பு பட்டை அணிந்து விளையாடுவது ஆகியவற்றை பாகிஸ்தான் அணி பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் ஆமிர் மிர்-ஐ தொடர்பு கொண்டபோது, பிரதமரைச் சந்தித்த பிறகு மொஹ்சின் நக்வி தெரிவித்த கருத்தை மட்டுமே நம்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்தத் தொடரை புறக்கணித்தால் பாகிஸ்தான் மீது என்ன தாக்கம் இருக்கும்? பாகிஸ்தான் மற்றும் ஐசிசி மீது என்ன மாதிரியான இழப்புகளை ஏற்படுத்தும்? இந்த கேள்விகளுக்கு விடை காண பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் அலுவலர்களிடம் பிபிசி பேசியது.
இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ எதிர்வினை ஆற்றியுள்ளது.
‘வங்கதேசத்தை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது’
பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP via Getty Images
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பையில் கலந்து கொள்ள வங்கதேசத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது என பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் “தேவையில்லாமல் தலையிட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “வங்கதேசம் விளையாட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அவர்களிடம் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்தோம். ஆனால் அவர்கள் தங்கள் அணியை அனுப்ப வேண்டாம் என முடிவெடுத்தனர், அவர்களின் அரசாங்கம் தங்கள் அணியை அனுப்ப முடியாது என்றும் அவர்கள் கொழும்புவில் மட்டும் தான் விளையாடுவார்கள் என்றும் கூறுவதாக தெரிவித்தனர்.”
கடைசி நேரத்தில் முழு அட்டவணையையும் மாற்றுவது கடினம் எனக் குறிப்பிட்ட அவர், அதனால் தான் ஸ்காட்லாந்து அணியை ஐசிசி சேர்க்க வேண்டியதாயிற்று என்றார்.
“வங்கதேசம் விளையாட வேண்டும் என்பது எங்களின் விருப்பம். வங்கதேசத்தை தூண்டிவிட்டதில் பாகிஸ்தானுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. பாகிஸ்தான் இதையெல்லாம் செய்திருக்கக் கூடாது. வங்கதேசத்தவருக்கு எதிராக பாகிஸ்தான் என்ன கொடுமைகளைச் செய்துள்ளது என்பதை உலகம் அறியும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் அறிவார்கள். அப்போது தான் நாடு பிரிந்தது,” என்றார்.
பாகிஸ்தான் தற்போது வங்கதேசத்தின் அனுதாபியாக மாறி அவர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறது எனக் குறிப்பிட்ட அவர் இது சரியில்லை என்றும் தெரிவித்தார்.
உலகக்கோப்பையை புறக்கணித்தால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு?
பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஐசிசி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என கிரிக்கெட் வாரிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசியில் இருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ஆண்டு வருமானம் நிறுத்தப்படலாம் என பிசிசிஐ அலுவலர் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பேசினார்.
2023-ஆம் ஆண்டு, நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கான வருவாய் பகிர்வு முடிவு செய்யப்பட்ட போது ஐசிசியின் ஒட்டுமொத்த வருமானம் 600 மில்லியன் டாலராக இருந்தது.
டர்பனில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், 2024-2027 காலகட்டத்தில் பிசிசிஐ-க்கு 38.5% வருவாயும், இங்கிலாந்திற்கு 6.89% வருவாயும், ஆஸ்திரேலியாவிற்கு 6.25% வருவாயும் பகிர்ந்து கொடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 5.75% வருவாய் பகிர்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதன் தோராயமான மதிப்பு 34.51 மில்லியன் டாலர்.
பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை தொடரை புறக்கணித்தால் எதிர்வரும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் அவர்கள் வெளியேற்றப்படக்கூடும் என மூத்த விளையாட்டு நிபுணர் நீரு பாட்டியா தெரிவிக்கிறார்.
பாகிஸ்தான் விளையாடாவிட்டால் ஐசிசி-க்கு என்ன இழப்பு?
பட மூலாதாரம், Ryan Lim/Getty Images
பாகிஸ்தான் விளையாடாமல் போனால் அது ஐசிசி-யின் வருமானத்தில் நேரடியாக தாக்கம் செலுத்தும்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “பாகிஸ்தான் உலகக்கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால் ஒளிபரப்பு நிறுவனங்கள் நிறைய சிக்கலைச் சந்திப்பார்கள். பாகிஸ்தான் வெளியேறினால், அந்த இடத்தில் வரும் அணி இந்தியா உடன் விளையாடும் போட்டியை அதே அளவிலான மக்கள் பார்ப்பார்களா?” என்று தெரிவித்தார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின்படி (ஃபிக்கி), கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.
பாகிஸ்தான் கலந்து கொள்ளாமல் போனால் அது ஐசிசிக்கு கணிசமான இழப்புகளை ஏற்படுத்தும் என நீரு பாட்டியா தெரிவிக்கிறார்.
“இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விரைவில் விற்று தீர்கின்றன. விலையுயர்ந்த தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் பணம் சம்பாதிக்கப்படுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பங்கேற்காமல் போனால் ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடரும் ஆட்டம் காணும் என விளையாட்டு நிபுணர் முனைவர் நௌமன் நியாஸ் ஒரு சமூக ஊடக நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின்போது இந்தியாவில் விளம்பரங்களுக்கு 4,800 டாலர் வரை கட்டணம் பெறப்படுவதாக அவர் கூறுகிறார். “அதோடு கூடுதலாக மைதானத்தின் பிரான்டிங் மற்றும் ஸ்பான்சர்ஷிப் என பல ஒப்பந்தங்களில் ஐசிசி கையெழுத்திட்டுள்ளது.” என்றார்.
உலகக்கோப்பைக்கு அணியை அனுப்ப வேண்டாம் என பாகிஸ்தான் முடிவெடுத்தால் அதன் மீது தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தாலும் தடை விதிப்பது ஐசிசிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது,” என்றார்.
பாகிஸ்தான் புறக்கணிக்கக் கூடாது – முன்னாள் வீரர்கள் கருத்து
பட மூலாதாரம், SAEED KHAN/AFP via Getty Images
பாகிஸ்தான் எடுக்க சாத்தியமுள்ள முடிவு மீது முன்னாள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மாறுபட்ட கருத்து கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற லெஃப்டினன்ட் ஜெனரலுமான ஜியா, பாகிஸ்தான் இந்தத் தொடரைப் புறக்கணிக்கக் கூடாது என்றார்.
வங்கதேசம் தொடர்பான ஐசிசி-யின் முடிவுக்கு வேறு எந்த நாட்டின் கிரிக்கெட் வாரியமும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என பிபிசியிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
“இந்த விவகாரத்தை இழுத்துக் கொண்டே செல்லாமல், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். பாகிஸ்தான் கொள்கையின்படி பேசியுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முக்கியமான உறுப்பினர். இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் ஒளிபரப்பு பிரச்னையும் உள்ளது. இந்தச் சூழலில் போட்டியை புறக்கணிப்பது பாகிஸ்தானுக்கு எளிதாக இருக்காது.” என்றார்.
ஓய்வு பெற்ற லெஃப்டினன்ட் ஜெனரலான தௌகிர் ஜியா பேசுகையில், “இந்த முடிவை கிரிக்கெட் வாரியம் அரசாங்கத்திடம் விட்டுவிட்டது. இப்போது இந்தியாவுடன் உள்ள உறவுகளை கருத்தில் கொண்டு அரசு என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.” என்றார்.
ஆனால் தௌகிர் ஜியா உடன் முன்னாள் வாரியத் தலைவர் கலித் மெஹ்மூத் முரண்படுகிறார். பாகிஸ்தான் அதன் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார்.
ஐசிசியின் அவசரக் கூட்டத்தை நடத்த பாகிஸ்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இந்தியா எப்போதும் விளையாட்டிற்குள் அரசியலைக் கொண்டு வருகிறது என்பதை மற்ற ஐசிசி உறுப்பினர்களிடம் பாகிஸ்தான் விளக்க வேண்டும். இந்த போக்கு நிறுத்தப்பட வேண்டும். சில நேரங்களில் இந்திய வீரர்கள் கைகளை குலுக்குவதில்லை, கோப்பையை வாங்க மறுக்கிறார்கள், மற்ற நாடுகளுக்குச் சென்று விளையாட மறுக்கிறார்கள். அனைத்து நாடுகளுக்கும் இந்தியா உடன் மட்டுமே ஏன் தகராறு இருக்கிறது என்பதை ஐசிசியின் உறுப்பு நாடுகள் உணர வேண்டும்,” என்றார்.
கடந்த காலங்களில் பல அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்துள்ளன. அப்போதெல்லாம் எந்த அணியையும் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடச் சொல்லி ஐசிசி வற்புறுத்தவில்லை. ஆனால், இப்போது மட்டும் வங்கதேசத்தை இந்தியாவுக்குச் சென்று விளையாடுமாறு ஏன் வற்புறுத்த வேண்டும்?” என்றார்.
மேலும் பேசிய அவர், “கொள்கையில் அடிப்படையில் கோடிக்கணக்கான டாலர் வருவாயை இழக்க வேண்டுமென்றால் ஒருவர் அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகக் கூடாது. ஏனென்றால் உலகம் கொள்கையைத் தான் பார்க்கிறது, பணத்தை அல்ல.:” என்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு