• Thu. Mar 12th, 2026

24×7 Live News

Apdin News

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு 14 கோடி ரூபா, இந்தியாவுக்கு 82 கோடி ரூபா

Byadmin

Mar 12, 2026


இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்ட பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு 14 கோடியே 79 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைத்துள்ளது.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான பணப்பரிசை ஐசிசி புதன்கிழமை (11) பிற்பகல் அறிவித்தது.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை பங்குபற்றியமைக்காகவும் 3 வெற்றிகளை ஈட்டியமைக்காகவும் இந்தப் பணப்பரிசு கிடைத்துள்ளது.

இம்முறை ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் 349 கோடியே 76 இலட்சம் ரூபா மொத்த பணப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரி20 உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவுக்கு 82 கோடி ரூபா  பணப்பரிசு  கிடைத்துள்ளது.

இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்துக்கு 44 கோடியே 23 இலட்சம் ரூபாவும் அரை இறுதிகளில் தோல்வி அடைந்த தென் அபிரிக்காவுக்கு 31 கோடியே 26 இலட்சம் ரூபாவும் இங்கிலாந்துக்கு 30 கோடியே 29 இலட்சம் ரூபாவும் கிடைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 16 கோடியே 73 இலட்சம் ரூபாவும் பாகிஸ்தானுக்கு 16 கோடியே 25 இலட்சம் ரூபாவும் ஸிம்பாப்வேக்கு 15 கோடியே 28 இலட்சம் ரூபாவும்  பணப்பரிசு   கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க ஆகிய அணிகளுக்கு தலா 9 கோடியே 63 இலட்சம் ரூபாவும் ஸ்கொட்லாந்துக்கு 8 கோடியே 63 இலட்சம் ரூபாவும் அயர்லாந்துக்கு 8 கோடியே 44 இலட்சம் ரூபாவும் இத்தாலி, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம் ஆகிய அணிகளுக்கு தலா 7 கோடியே 96 இலட்சம் ரூபாவும் குழுநிலைப் போட்டிகளில் ஒரு வெற்றியையும் ஈட்டாத கனடா, நமிபியா, ஓமான் ஆகிய அணிகளுக்கு தலா 6 கோடியே 99 இலட்சம் ரூபாவும்  பணப்பரிசு   வழங்கப்பட்டது.

இந்தப் பணப்பரிசுகள் யாவும் பொருந்தக்கூடிய வரி இணக்கம் மற்றும் விலக்குகளுக்கு முன்னர் கணக்கிடப்பட்டவை என ஐசிசி அறிவித்துள்ளது.

By admin