பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.
இந்தியா, சுவிட்சர்லாந்தில் இன்னும் இனவெறி, பாகுபாடு மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான வெறுப்பு நிலவுகிறது என்பதை நினைவு கூர்ந்ததுடன், முதலில் தன் சொந்த நாட்டில் நிலவும் சவால்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்துக்கு அறிவுறுத்தியது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பல நாடுகள் தங்கள் கருத்துகளை முன்வைத்தன.
அப்போது, சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், கருத்துச் சுதந்திரத்தையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து கூறியது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தின் கருத்துக்குப் பதிலளித்த அதே வேளையில், பாகிஸ்தான் ‘தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக’ குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் பதில்
பட மூலாதாரம், AFP via Getty Images
இந்தியத் தூதர் ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தில் நிலவும் இனவெறி, பாகுபாடு, வெளிநாட்டவர் மீதான வெறுப்பு ஆகியவற்றை நினைவூட்டினார்.
சுவிஸ் தூதரின் கருத்துகளை, ‘அதிர்ச்சியூட்டும், மேலோட்டமான மற்றும் தவறான தகவல்’ என்று விவரித்த தியாகி, சுவிட்சர்லாந்து அதன் சொந்த பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் உண்மை நிலையை, சுவிட்சர்லாந்து சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
“எங்கள் நெருங்கிய நண்பரும், கூட்டாளியுமான சுவிட்சர்லாந்தின் இந்தக் கருத்துகளுக்கு நாங்கள் பதிலளிக்க விரும்புகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலுக்குத் தலைமை தாங்கும் நாடு, முற்றிலும் தவறான மற்றும் இந்தியாவின் யதார்த்தத்துடன் பொருந்தாத ஒன்றை முன்வைத்து கவுன்சிலின் நேரத்தை வீணடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று இந்திய தூதர் கூறினார்.
“இந்தியா பன்முகத்தன்மையைப் பழங்காலத்திலிருந்தே ஏற்றுக்கொண்ட, துடிப்பான ஜனநாயகம்” என்று தெரிவித்த தியாகி, “சுவிட்சர்லாந்து அதன் சவால்களுக்கு தீர்வு காண்பதில் உதவ இந்தியா தயாராக உள்ளது” என்றும் கூறினார்.
சுவிட்சர்லாந்தின் பதில் என்ன?
பட மூலாதாரம், UN
கலந்துரையாடலின் போது, இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து சுவிட்சர்லாந்து சில பரிந்துரைகளை முன்வைத்தது.
“இந்தியாவில், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பத்திரிகை மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பேணுவதற்கும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று சுவிஸ் தூதர் மைக்கேல் மில்லர் கூறினார் .
துருக்கி, சிரியா, செர்பியா ஆகிய நாடுகளில் உள்ள மனித உரிமை நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், அந்த நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானை சாடிய இந்தியா
பட மூலாதாரம், AFP via Getty Images
அதே வேளையில், இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார்.
“உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத வலையமைப்புகளுக்கு நிதியளித்து, அதற்கு அடைக்கலம் தரும், ‘பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ‘ நாட்டிடமிருந்து இந்தியா எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை,” என்றார்.
“9/11 தாக்குதல்களை நாம் மறந்துவிடக் கூடாது. தாக்குதல்களின் மூளையாக இருந்தவருக்கு அடைக்கலம் கொடுத்து, அவரைத் தியாகி என்று கூறி மகிமைப்படுத்தியவர்களின் பாசாங்குத்தனத்தை இன்று நாம் காண்கிறோம்” என்று தியாகி கூறினார்.
மேலும், ‘புல்வாமா, உரி, பதான்கோட், மும்பை ஆகியவற்றை நாம் மறந்துவிடக் கூடாது… இந்தப் பட்டியல் முடிவற்றது. உலகமும் இந்தியாவும் இந்த சம்பவங்களை மறக்காது, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் ‘அளவான மற்றும் தகுந்த பதில்’ இதை முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பயங்கரவாதத்தை ஆதரிப்பவரிடமிருந்து நாங்கள் எந்தப் பாடத்தையும் பெற விரும்பவில்லை. சிறுபான்மையினரைத் துன்புறுத்துபவர்களிடமிருந்து எந்தப் பிரசங்கத்தையும் நாங்கள் விரும்பவில்லை. நம்பகத்தன்மையை இழந்த ஒரு நாட்டிடம் இருந்து நாங்கள் எந்த ஆலோசனையையும் பெற விரும்பவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் புதன்கிழமையன்று காஷ்மீர் பிரச்னையை மீண்டும் எழுப்பியிருந்தது.
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னை அழைத்துக் கொண்டு, தன்னை விஸ்வ குரு என்று முத்திரை குத்திக் கொள்ளும் ஒரு நாட்டிலிருந்து ஒரு குழு இங்கே உள்ளது, அதாவது உலகளாவிய ஆசிரியர் அல்லது உலகளாவிய தலைவர். இந்த குரு நமக்கு என்ன கற்பிக்கிறார் என்று பார்ப்போம்” என்று பாகிஸ்தான் தூதர் டி ஹஸ்னைன் கூறினார்.
“இந்த விஸ்வகுரு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரை வெட்கமின்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். காஷ்மீரிகளின் மனித உரிமையையும் மீறி வருகிறார்.” என்று அவர் கூறினார்.
இந்தியா – சுவிட்சர்லாந்து உறவுகள்
பட மூலாதாரம், @IndiaUNGeneva
இந்தியாவுக்குத் தொடக்கம் முதலே சுவிட்சர்லாந்துடன் நல்லுறவு உள்ளது.
இந்திய அரசின் தகவல்படி, தற்போது சுவிட்சர்லாந்தில் சுமார் 28,000 இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இரு நாடுகளும் 1948ஆம் ஆண்டு முதல் ராஜ்ஜீய உறவுகளை கொண்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோதி 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்துக்குப் பயணம் செய்துள்ளார். அதேபோல், சுவிஸ் அதிபர் டோரிஸ் லூதர்ட் 2017இல் இந்தியா வந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி , 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 26.8 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளது, இதில் இந்தியா 25.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்து 1.7 பில்லியன் டாலர்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில், இந்தியாவில் சுவிட்சர்லாந்தின் அந்நிய நேரடி முதலீடு (FDI) 10.7 பில்லியன் டாலர்களாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இது 50% அதிகரித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு