2025-ஆம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத வகையில் ரூ.27 கோடிக்கு லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி வாங்கியது.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.
சிஎஸ்கே அணியில் தொடக்கத்தில் ஆடிய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்குத் திரும்பியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம்
2025 சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜத்தா நகரில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடரில் இருக்கும் 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களைத் தவிர்த்து மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளது.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மெகா ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில்தான் வீரர்கள் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு ஏலமிடப்படுகிறார்கள். இதில் 367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என 577 வீரர்கள் ஏலத்தில் கொண்டு வரப்படுகிறார்கள்.
இந்த ஏலத்தில் வீரர்களை விலைக்கு வாங்க ஒவ்வொரு அணியும் ரூ.120 கோடி செலவு செய்யலாம். இந்த தொகையில் தக்கவைப்பு வீரர்களுக்காக வழங்கப்பட்ட தொகையை கழித்தபின், மீதமுள்ள தொகைக்கு வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்க முடியும்.
அணிகளின் கையிருப்பு எவ்வளவு?
பஞ்சாப் கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்து அதிகபட்சமாக ரூ.110.50 கோடி கையிருப்பு வைத்திருந்தது. அடுத்ததாக ஆர்சிபி அணி ரூ.83 கோடி, டெல்லி கேபிடல்ஸ் ரூ.73 கோடி, குஜராத் மற்றும் லக்னௌ அணிகள் தலா ரூ.69 கோடி கையிருப்பு வைத்திருந்தன.
சிஎஸ்கே அணி ரூ.55 கோடி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ரூ.51 கோடி ரூபாயும், மும்பை, ஹைதராபாத் அணிகள் தலா ரூ.45 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 41 கோடி வைத்திருந்தன.
இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய ஏலம், இரவு வரை நீடித்தது. முதல் நாள் ஏலத்தில் விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள், அன்கேப்டு வீரர்கள், கேப்டு வீரர்கள், கேப்டு வெளிநாட்டு வீரர்கள், நட்சத்திர வீரர்கள் என பிரித்துப் பிரித்து ஏலம் விடப்பட்டனர்.முதல் நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 72 வீரர்களை அணிகள் ஏலத்தில் எடுத்தன.
ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அதிகபட்சம்
அதிகபட்சமாக இதுவரை ஐபிஎல் ஏலத்தில் இல்லாத வகையில் ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்தை லக்னெள அணி விலைக்கு வாங்கியது. கடந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் ரூ.24 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது, அதைவிட ரிஷப் பந்த் விலைக்கு வாங்கப்பட்டார்.
ரிஷப் பந்த் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும் அவரை வாங்க லக்னெள, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் கடுமையாக மோதின. முடிவில் ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்தை லக்னெள அணி வாங்கியது. இந்த சீசனுக்கு லக்னெள அணிக்கு கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஸ்ரேயாஸ் அய்யரை வாங்க கொல்கத்தா அணி போட்டியிட்டாலும் ரூ.10 கோடிக்கு அதிகமாக ஏலம் கேட்கவில்லை. ஆனால், டெல்லி, பஞ்சாப் அணிகள் கடும் போட்டியிட்டன, இறுதியாக அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
10 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கே அணியில் அஸ்வின்
முதல்நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணி 7 வீரர்களை விலைக்கு வாங்கியது. ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2015-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடிய நிலையில், 10 ஆண்டுகளுக்குப்பின் ரூ.9.75 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. அஸ்வின் ஐபிஎல் தொடரில் பெறும் அதிகபட்ச விலையாகும்.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கும், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கும், டேவான் கான்வே ரூ.6.25 கோடிக்கும் சிஎஸ்கே அணி வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது ரூ.4.80 கோடி, ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடி, தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ரூ.1.20 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.
சிஎஸ்கே அணிக்கு தற்போது வலுவான வேகப்பந்துவீச்சாளர்கள், நடுவரிசை பேட்டர்கள் இல்லை. இதனால் இந்த தேவையை தீர்க்க 2வது ஏலத்தில் வீரர்களை எடுக்க முயலும். தற்போது சிஎஸ்கே அணியிடம் ரூ.15.60 கோடி கையிருப்பு இருக்கிறது, 13 வீரர்களை வாங்க முடியும்.
மும்பை இந்தியன்சுக்கு என்ன தேவை?
மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைப்பில் பெரும்பகுதி பணத்தை செலவிட்டதால் முதல்நாள் ஏலத்தில் குறைந்த அளவே வீரர்களை வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட்டை மீண்டும் வாங்கியது மும்பை நிர்வாகம். போல்ட்டுக்கு ரூ.12.50 கோடி கொடுத்து அணிக்குள் மும்பை கொண்டு வந்தது. இது தவிர அன்கேப்டு வீரர் நமன் திர் ரூ.5.25 கோடி கொடுத்து மும்பை வாங்கியது.
மும்பை அணி தங்கள் அணியை பலப்படுத்த இன்னும் 9 வீரர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க வீரரைத் தேட வேண்டும். விக்கெட் கீப்பர், கீழ்வரிசை மிடில் ஆர்டர் பேட்டர், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது. மும்பை அணியின் கையிருப்பாக ரூ.26.10 கோடி உள்ளது, 16 வீரர்களை வாங்கலாம்.
ஆர்சிபி என்ன செய்தது?
ஆர்சிபி அணி முதல்நாள் ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர் என வகையாக வீரர்களைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டை ரூ.12.50 கோடிக்கும், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ரூ.11.50 கோடிக்கும், லிவிங்ஸ்டோன் ரூ.8.75 கோடிக்கும் ஆர்சிபி அணி வாங்கியது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது. ஆர்சிபி அணியில் தற்போது 9 வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
தொடக்க வீரர், நடுப்பகுதி பேட்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி இருக்கிறது. ஆர்சிபி அணியிடம் ரூ.30.65 கோடி கையிருப்பு இருக்கிறது, 16 வீரர்களை வாங்கலாம், ஆர்டிஎம் வாய்ப்பை இதுவரை பயன்படுத்தவில்லை.
8 வீரர்களை வாங்கிய சன்ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ் அணி முதல்நாள் ஏலத்தில் 8 வீரர்களை போட்டிபோட்டு வாங்கியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரருக்கு இஷான் கிஷனை ரூ.11.50 கோடிக்கும், வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரூ.10 கோடிக்கும் சன்ரைசர்ஸ் வாங்கியது.
ஹர்சல் படேலை ரூ.8 கோடிக்கும், சுழற்பந்துவீச்சுக்கு ராகுல் சஹரை ரூ.3.20 கோடிக்கும், ஆடம் ஜம்பாவை ரூ.2.40 கோடிக்கும் சன்ரைசர்ஸ் வாங்கியது. அன்கேப்டு வீரர் அபினவ் மனோகரை ரூ.3.20 கோடிக்கும், சிமர்சிஜ் சிங்கை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது.
முதல் நாளில் வலுவான விக்கெட் கீப்பர் பேட்டர், வேகப்பந்துவீச்சாளர்களை சன்ரைசர்ஸ் வளைத்துப் போட்டது. அந்த அணியிடம் ரூ.5.10 கோடி மட்டுமே இருப்பு உள்ளது, 12 வீரர்கள் வரை வாங்கலாம் என்பதால், உள்நாட்டு வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும்,
வெங்கடேஷுக்கு ஜாக்பாட்
கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் மீண்டும் அந்த அணியால் வாங்கப்பட்டார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரூ.23.75 கோடிக்கு வெங்கேடேஷை கொல்கத்தா அணி வாங்கியது. இது தவிர வேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியாவை ரூ.6.50 கோடிக்கும், குயின்டன் டீ காக்கை ரூ.3.60 கோடிக்கும், ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸை ரூ2 கோடிக்கும் வாங்கியது. அன்கேப்டு வீரர்கள் ரகுவன்சி(ரூ.3 கோடி), வைவப் அரோரா(ரூ.1.80கோடி), மயங்க் மார்கண்டேவை(ரூ.30லட்சம்) வாங்கியது.
கொல்கத்தா அணிக்கு தற்போது வலுவான நடுவரிசை பேட்டர்கள் தேவை. ரூ.10.05 கோடி கையிருப்பு இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் வழங்கும், 12 வீரர்களை வாங்க முடியும்.
ரிஷப் பந்தை வாங்கிய லக்னெள
லக்னெள அணிக்கு இந்த சீசனுக்கு நல்ல கேப்டன் தேவை என்பதால், ரிஷப் பந்தை அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கும், டேவிட் மில்லர் ரூ.7.50 கோடிக்கும், மிட்ஷெல் மார்ஷ் ரூ.3.40 கோடிக்கும் வாங்கியது. மார்க்ரம் ரூ.2 கோடி, அப்துல்சமது ரூ.4.20 கோடிக்கும் விலைபோகினர்.
குஜராத் அணியிடம் தற்போது ரூ.14.85 கோடி கையிருப்பு இருக்கிறது, தொடக்க வீரர், வெளிநாட்டு வேகப்பந்துவீ்ச்சாளர்கள், கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால், 2வது நாள் ஏலத்தில் இதற்கு கவனம் செலுத்தும். இன்னும் 13 வீரர்களை ஏலத்தி்ல் எடுக்க முடியும்.
கே.எல்.ராகுல், நடராஜனை வளைத்த டெல்லி
9 வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் நாள் ஏலத்தில் வாங்கியது. அதில் குறிப்பாக கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது. இது தவிர மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் ரூ.24 கோடிக்கு ஏலம் போகிய ஸ்டார்க் இந்தமுறை பாதிவிலைக்கே வாங்கப்பட்டார்.
தமிழக வீரர் டி நடராஜனை ரூ.10.75 கோடிக்கும், ஜேக்பிரேசர் மெக்ருக்கை ரூ.9 கோடிக்கும், ஹேரி ப்ரூக்கை ரூ.6.25 கோடிக்கும் வாங்கியது. சிஎஸ்கேயில் கடந்த முறை இருந்த சமீர் ரிஸ்வியை ரூ.95 லட்சத்துக்கும், மோகித் சர்மாவை ரூ.2.20 கோடிக்கும், கருண் நாயரை ரூ.50 லட்சத்துக்கும், அசுடோஷ் சர்மாவை ரூ.3.80 கோடிக்கும் வாங்கியது.
அதிரடி பேட்டர்கள், கேப்டன், நடுவரிசை பேட்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்களை நேற்று முதல்நாளில் டெல்லி அணி வாங்கியது. டெல்லி அணியிடம் தற்போது ரூ.13.80 கோடி கையிருப்பு இருக்கிறது, 12 வீரர்கள் வரை வாங்கலாம்.
குழப்பத்தில் ராஜஸ்தான் அணி
ராஜஸ்தான் அணி நேற்றைய ஏலத்தில் குறிப்பிடத்தகுந்த வீரர்களை வாங்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சரை மட்டும் ரூ.12.50 கோடிக்கு வாங்கியது. சுழற்பந்துவீச்சுக்காக தீக்சனா ரூ.4.40 கோடி, ஹசரங்கா ரூ.5.25 கோடிக்கு வாங்கியது. மும்பை அணியில் இருந்த ஆகாஷ் மத்வாலை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது.
ராஜஸ்தான் இன்றைய ஏலத்தில் டாப்ஆர்டர் பேட்டர்கள், நடுவரிசை பேட்டர்கள், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களை எடுக்க கவனம் செலுத்தும். அந்த அணியிடம் ரூ.17.35 கோடி கையிருப்பு இருக்கிறது. 14 வீரர்களை வாங்கலாம்.
பெரிய மீன்களை எடுத்த குஜராத்
குஜராத் அணி முதல்நாள் ஏலத்தில் ஜாஸ் பட்லர்(ரூ.15.75 கோடி), முகமது சிராஜ் ரூ.12.25 கோடி, காகிசோ ரபாடா ரூ.10.75 கோடி, பிரசித் கிருஷ்ணா ரூ.9.50 கோடி ஆகிய முக்கிய வீரர்களை வாங்கியது.
இது தவிர மகிபால் லாம்ரோர், அனுஜ் ராவத் ஆகியோரையும் அந்த அணி வாங்கியது. நடுவரிசை பேட்டர்கள், தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை. இன்னும் ரூ.17.50 கோடி கையிருப்பு இருக்கிறது, 11 வீரர்களை வாங்கலாம்.
சாஹலை வாங்கிய பஞ்சாப் அணி
பஞ்சாப் அணிக்கு சரியான கேப்டன் இந்த சீசனுக்குத் தேவை என்பதால் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியது. சுழற்பந்துவீச்சாளர் சஹலை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. ஐபிஎல் வாழ்க்கையில் சஹல் பெறும்அதிகபட்ச விலையாகும்.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஷை ரூ.11 கோடிக்கும், மேக்ஸ்வெலை ரூ.4.20 கோடிக்கும், அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கும் வாங்கியது. மும்பை அணியில் ஆடிய நேஹல் வதேராவை ரூ.4.20 கோடிக்கும், ஆர்சிபியில் ஆடிய விஜயகுமாரை ரூ.1.80 கோடிக்கும் வாங்கியது.
பஞ்சாப் அணிக்கு தற்போது தொடக்க ஆட்டக்காரர்கள், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு வீரர்கள் தேவை என்பதால் அதில் இன்றைய ஏலத்தில் கவனம் செலுத்தும். அந்த அணியிடம் இன்னும் ரூ.22.50 கோடி கையிருப்பு இருக்கிறது, 13 வீரர்களை வாங்கலாம்.
வார்னருக்கு இந்த நிலையா?
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பலமுறை பெற்ற டேவிட் வார்னர், தேவ்தத் படிக்கல், இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, மூத்த வீரர் பியூஷ் சாவ்லா, ஸ்ரேயாஸ் கோபால், வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி, யாஷ் துல் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
இவருடன் சேர்த்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவையைும் சிஎஸ்கே வாங்கியுள்ளது.
கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் ரூ.23.75 கோடிக்கு அந்த அணி மீண்டும் வாங்கியது. ஆல்ரவுண்டர்களில் அதிகபட்ச விலைக்கு வெங்கடேஷ் ஏலம் எடுக்கப்பட்டார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி, ஜாஸ் பட்லர், சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா, மகிபால் லாம்ரோர் ஆகிய தரமான வீரர்களை முதல்நாளில் விலைக்கு வாங்கியது.
லக்னெள அணிக்கு சரியான கேப்டன் அமையாததால், கேப்டன் பதவிக்கு ரிஷப் பந்தை அதிகபட்ச விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, டேவிட் மில்லர், ஆவேஷ் கான், மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம், அப்துல் சமது ஆகியோரை வாங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல்நாள் ஏலத்தில் பெரிதாக வீரர்களை வாங்கவில்லை. கடந்த 4 சீசன்களுக்கு முன் ஆடிய வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை வாங்கியது. சுழற்பந்துவீச்சுக்கு தீக்சனா, ஹசரங்கா, ஆல்ரவுண்டர் மத்வால் ஆகியோரை வாங்கியது.