பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், தோனி, பதிராணா, துபே, ஜடேஜா ஆகியோர் மட்டுமே ஏலத்தில் தக்கவைக்கப்பட்டனர். மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் புதிதாக வாங்கப்பட்டுள்ளனர்.
ஏலத்தில் எடுக்கப்பட்ட புதிய வீரர்கள், அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என்ற கலவையுடன் களமிறங்குவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அணியில் யாருக்கு முக்கியத்துவம், ப்ளேயிங் லெவனில் எந்த வீரர்கள் இடம் பெறுவார்கள், யாரை விளையாட வைக்கலாம் என்று ரசிகர்கள் ஆலோசிப்பதும், சமூக வலைத்தளத்தில் தங்களின் ஆலோசனைகளை பதிவிடுவதும் ஐபிஎல் ஜூரம் பற்றிக்கொண்டதை காண்பிக்கிறது.
சிஎஸ்கே மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஐபிஎல் சீசன் தொடங்கிவிட்டாலே குறிப்பிட்ட சில அணிகள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்துவிடும். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்று எடுத்துக் கொண்டாலே அதில் முதல் அணியாக எழுவது சிஎஸ்கேதான்.
5 முறை சாம்பியன் பட்டம், 10 முறை இறுதிப்போட்டி, 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி என சிஎஸ்கே அணி என்றாலே கெத்து என்ற ரீதியில்தான் அந்த அணியின் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
யெல்லோ ஆர்மியையும், அதன் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி மீது ரசிகர்களின் அன்பும், எதிர்பார்ப்பும் குவிந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு கேப்டன் மாற்றப்பட்டு ருதுராஜ் நியமிக்கப்பட்டாலும் தோனி களத்தில் இறங்கிவிட்டாலே “தல” என்று கோஷமிடுவது கடந்த சீசன் வரையிலும் மைதானத்தில் எதிரொலித்தது.
தோனி தலைமையில்தான் சிஎஸ்கே அணி 5 சாம்பியன் பட்டங்களை வென்றது, சிஎஸ்கே அணியை ஒவ்வொரு சீசனிலும் உச்சத்துக்கு கொண்டு சென்று தொடரை பரபரப்பாக்கி வைத்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
மீண்டும் அஸ்வின், கரண், விஜய்சங்கர்
ஐபிஎல் ஏலத்தில் சில வீரர்களை சிஎஸ்கே அணி மீண்டும் அணிக்குள் புதிதாக சேர்த்துள்ளது. ஆனால் இவர்கள் இந்த சீசனுக்கு புதியவர்கள், ஆனால் முன்னாள் தளபதிகளாக இருந்தவர்கள். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கரண், விஜய் சங்கர் ஆகியோர் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறி மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர். 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனை காயம் காரணமாக பங்கேற்காத டேவன் கான்வேயை சிஎஸ்கே வாங்கியுள்ளது.
மேலும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் சேர்ப்பு
சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சுக்கு வலிமை சேர்க்க ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் இருக்கையில் ரூ.10 கோடியில் ஆப்கானிஸ்தான் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் நூர் அகமது வாங்கப்பட்டுள்ளார். லெக் ஸ்பின்னர் ஸ்ரேயாஸ் கோபால், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் தீபக் ஹூடா, ரச்சின் ரவீந்திரா என சுழற்பந்துவீச்சுப் படையை சிஎஸ்கே வைத்துள்ளது.
ஆனால், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமா என்பதுதான் இப்போது கேள்வி. ஏனென்றால், கடந்த ஐபிஎல் சீசனில் சுழற்பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தில் 24 விக்கெட்டுகள்தான் வீழ்த்தினர், ஆனால், வேகப்பந்துவீச்சாளர்கள் 75 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆதலால், இந்த முறை சேப்பாக்கம் மைதானம் எப்படி இருக்கப் போகிறது, சுழற்பந்துவீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்த ப்போகிறது சிஎஸ்கே என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வேகப்பந்துவீச்சு வலுவாக இருக்கிறதா?
சிஎஸ்கே அணியில் வேகப்பந்துவீச்சுக்கு மதிஷா பதீரணா, ஜேமி ஓவர்டன், சாம் கரண், கலீல் அகமது, நேதன் எல்லீஸ், கமலேஷ் நாகர்கோட்டி, முகேஷ் சவுத்ரி, அன்சுல் கம்போஜ், குர்ஜப்நீத் சிங் ஆகியோர் உள்ளனர். இதில் காயம் காரணமாக குர்ஜப்நீத் சிங் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை. வேகப் பந்துவீச்சாளர்களில் சர்வதேச அனுபவம் அதிகம் இருக்கும் பந்துவீச்சாளர் ஒருவர் கூட இல்லை என்பது சற்று கவலைக்குரியதுதான்.
கம்போஜ் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். கலீல் அகமது, சாம் கரண் இருவரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதால் யாரேனும் ஒருவருக்குதான் அணியில் இடம் கொடுக்க முடியும். ஓவர்டன், நாதன் எல்லீஸ் ஆகிய வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள், டி20 ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள்தான் என்றாலும் இருவரில் ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைக்கும்.
சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சில் இருக்கும் ஆழம், மிரட்டும் தொனி, வேரியேஷன்கள் எதுவுமே வேகப்பந்துவீச்சில் இல்லை.
பட மூலாதாரம், Getty Images
நடுவரிசையில் இடம் பிடிக்க கடும் போட்டி
பேட்டிங்கில் 3வது முதல் 6-வது இடம் வரை களமிறங்க பல வீரர்கள் சிஎஸ்கே அணியில் வரிசை கட்டி நிற்பது ஒரு வகையில் அசுர பலம் என்றாலும், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதும், நிலையான அணியை உருவாக்கவும் சில ஆட்டங்களைக் கடக்க வேண்டும்.
3வது வீரருக்காக ராகுல் திரிபாதி வாங்கப்பட்டுள்ளார், அடுத்த இடத்தில் தீபக் ஹூடாவா அல்லது விஜய் சங்கரா என்ற கேள்வி எழுகிறது. கடந்த சீசனில் தீபக் ஹூடா 11 போட்டிகளில் ஆடி 145 ரன்கள்தான் சேர்த்துள்ளார், விஜய் சங்கர் 7 போட்டிகளில் 83 ரன்கள் சேர்த்துள்ளார். ஆக இருவரின் சராசரியும் 15 ரன்களைக் கட கடக்கவில்லை. இதில் யாரை களமிறக்குவது என்பது அணி நிர்வாகத்துக்கு பெரிய தலைவலியாக இருக்கும்.
சாம் கரண் யுஏஇ டி20 லீக்கில் 4வது வீரராக சிறப்பாக ஆடியுள்ளார் என்பதால், அவரின் பெயரும் பரிசீலிக்கப்படலாம்.
9-வது இடம் வரை சிஎஸ்கே அணி பேட்டர்களை கொண்டிருப்பது எதிரணிக்கு சவாலாக இருந்தாலும், நடுவரிசைக்கு யாரை தேர்வு செய்வது என்பது குழப்பமாக இருக்கிறது.
ஆனால் 8-வது இடத்தில் களமிறங்கும் தோனி அல்லது 7-வது இடத்தில் வரும் ஜடேஜா இருவரில் ஒருவர் நடுவரிசையில் களமிறங்கினால் ஆட்டத்தில் அனல் பறக்கும், எதிர்பாரா முடிவுகளை சிஎஸ்கே பெற முடியும்.
பட மூலாதாரம், Getty Images
கவலை தரும் டாப் ஆர்டர்
சிஎஸ்கே அணி கடந்த 2024 சீசனில் 5வது இடத்தைப் பிடிக்கவும், பல தோல்விகளைச் சந்திக்கவும் முக்கியக் காரணமாக இருந்தது தோல்வி அடைந்த தொடக்கவரிசைதான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த சீசனில் சிஎஸ்கே தொடக்க வரிசை வீரர்களின் சராசரி 21.42, ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இது ஐபிஎல் டி20 போட்டியில் அதிலும் பவர்ப்ளேயில் மிகக்குறைவாகும்.
கடந்த காலங்களில் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தொடக்க வீரர்களே 50 சதவீதம் தேடித் தந்துவிடும் அளவுக்கு வலுவாக இருந்தனர். டூபிளெளசிஸ், ஷேன் வாட்ஸன், கான்வே என வலுவான தொடக்க பேட்டர்கள் இருந்தனர்.
இந்தக் குறையைக் களைய இந்த சீசனுக்கு ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, கெய்க்வாட் ஆகிய 3 பேர் தொடக்க வரிசைக்கு இருக்கிறார்கள். இதில் கான்வே, கெய்க்வாட் கூட்டணி கடந்த 2023 சீசனில் வெற்றிகரமாக செயல்பட்டது. இருவரும் 500 ரன்களுக்கு மேல் குவித்தனர். மீண்டும் இப்போது இணைகிறார்கள்.
கான்வேயைவிட, சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து ரவீந்திரா அருமையான ஃபார்மில் இருப்தால் அவரை ப்ளேயிங் லெவனில் விளையாட முன்னுரிமை அளிப்பது சிறப்பாகும். கடந்த சீசனைவிட இந்த சீசனில் சிஎஸ்கே தொடக்க வரிசைக்கு வீரர்கள் இருப்பது வலுவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
கவனம் ஈர்க்கும் 43 வயது ‘தல’
சிஎஸ்கே அணியில் சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, தோனி, அஸ்வின் என 9வது பேட்டர் வரை பேட்டர்கள் இருக்கிறார்கள். அதிலும் பினிஷிங் இடத்தில் தோனி இருப்பது ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றியை இன்னும் மெருகேற்றும்.
கடந்த சீசனில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 220 ஆக இருந்தது. இது மற்ற எந்த சீசன்களை விடவும் அதிகமாகும். கடந்த சீசனில் தோனி 73 பந்துகளில் 161 ரன்கள் சேர்த்தார். இதில் 14 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் அடங்கும். இந்த முறையும் 43 வயதான தோனியின் அனல்பறக்கும் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனி எந்த வரிசையில் களமிறங்குவார் என்பதைப் பொருத்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் சமநிலை இருக்கும்.
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அம்சங்கள்
சிஎஸ்கே அணியில் அஸ்வின் மீண்டும் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜா, அஸ்வின் இருவரோடு சேர்ந்து நூர் அகமது அல்லது கோபால் கலக்குவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நடுப்பகுதி ஓவர்களில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு மிகப்பெரிய துருப்புச்சீட்டாக சிஎஸ்கேவுக்கு அமையும்
சிஎஸ்கே அணியில் தொடக்க வரிசை பேட்டர்களைத் தவிர்த்துப் பார்த்தால் கடைசி வரிசை பேட்டிங்தான் வலுவாக இருக்கிறது. நடுவரிசை நம்பிக்கையளி்க்கும் வகையில் இல்லை. அதேபோல சுழற்பந்துவீச்சில் இருக்கும் அனுபவம், வல்லமை, நேர்த்தி ஆகியவை வேகப்பந்துவீச்சு வரிசையில் இல்லை.
கடந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று செயல்பட்டார். அதில் பல தோல்விகள், வெற்றிகள் என கலந்து இருந்தது. ஆனால், ஓர் ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் 2வது சீசனை கெய்க்வாட் எதிர்கொள்கிறார். இவரின் கேப்டன்சி இந்த சீசனில் எப்படி இருக்கும் தோனி எவ்வாறு செதுக்கி இருக்கிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணி விவரம்:
ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), மகேந்திர சிங் தோனி, மதீஷா பதிரணா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரசீத், அன்சுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, தீபக் ஹூடா, குர்ஜப்நீத் சிங், நாதன் எல்லீஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி, அந்த்ரே சித்தார்த்.
சிஎஸ்கே கடந்து வந்த பாதை
2008-ஆம் ஆண்டு அறிமுக ஐபிஎல் சீசனில் 2வது இடம் பிடித்த சிஎஸ்கே அணி, 2009-இல் அரையிறுதிவரை சென்றது. 2010, 2011 என அடுத்தடுத்த ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே வென்றது.
2012, 2013-ஆம் ஆண்டுகளில் பைனல் வரை சென்ற சிஎஸ்கே, கொல்கத்தா, மும்பையிடம் கோப்பையை இழந்தது. 2014-ஆம் ஆண்டில் குவாலிஃபயர்-2 போட்டியில் பஞ்சாபிடம் தோற்றது சிஎஸ்கே.
2015-ஆம் ஆண்டு பைனல் சென்ற சிஎஸ்கே, இரு ஆண்டுகள் சஸ்பெண்ட்டுக்கு பின் 2018-ஆம் ஆண்டு களத்துக்கு வந்தது. உற்சாகத்தையும், கோப்பை மீதான தாகத்தையும் குறைக்காமல் 2018ம் ஆண்டு அதே உத்வேகத்தோடு கோப்பையை சிஎஸ்கே தட்டிச் சென்றது.
பட மூலாதாரம், Getty Images
2019-ஆம் ஆண்டு மும்பையிடம் கோப்பையை இழந்தது சிஎஸ்கே. 2020-ஆம் ஆண்டு முதல்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் திரும்பியது சிஎஸ்கே.
ஆனால், 2021-ஆம் ஆண்டில் 4வது சாம்பியன் பட்டத்தையும், 2022-ஆம் ஆண்டில் மீண்டும் ப்ளே ஆஃப் செல்லாமல் திரும்பிய நிலையில் 2023ம் ஆண்டில் சிஎஸ்கே 5வது பட்டத்தைக் கைப்பற்றியது. 2024ம் ஆண்டில் கேப்டன்ஷிப்பை ருதுராஜ் கெய்வாட்டிடம் தோனி வழங்கினார். ஆனால், எதிர்பார்த்த பலனை போட்டி முடிவுகள் தரவில்லை,7 வெற்றி, 7 தோல்விகளுடன் 5-வது இடத்தை சிஎஸ்கே பிடித்தது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட புதிய வீரர்களுடன் களத்துக்கு வரும் சிஎஸ்கே அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.