ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபு தாபியில் நடந்து முடிந்தது. மொத்தம் 77 பேர் வாங்கப்பட்ட இந்த ஏலத்தில் சில வீரர்களுக்கு கோடிகளில் பணத்தை அணிகள் அள்ளிக் கொடுத்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் தவிர, சர்வதேச போட்டிகளே ஆடியிராத சில இந்திய உள்ளூர் வீரர்களும் எதிர்பாராத அளவுக்கு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்கள் யார்? அவர்களுக்கு அவ்வளவு பெரிய தொகையை அணிகள் வாரியிறைக்க என்ன காரணம்?
1. கேமரூன் கிரீன் – ரூ 25.2 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெரிய தொகையோடு ஏலத்துக்குள் நுழைந்ததால், கிரீன் பெரும் தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே அந்த இரண்டு அணிகளும் இவருக்காக கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியில் அவரை 25.2 கோடி ரூபாய்க்கு நைட் ரைடர்ஸ் வாங்கியது.
பெரிய தொகை வைத்திருந்த அணி என்றாலும், கொல்கத்தாவுக்கு கிரீன் தேவைப்பட்டதன் காரணம் அவர்கள் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்ட்ரே ரஸ்ஸலின் வெற்றிடத்தை நிரப்ப வேண்டியிருந்தது. இந்த ஏலத்தில் அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள்.
ரஸ்ஸலைப் போல் அதிரடியாக பெரிய ஷாட்கள் ஆடக்கூடியவர் கிரீன். ஒருசில ஓவர்களும் வீசக்கூடியவர் என்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நைட்ரைடர்ஸ் அணியில் அவர் முக்கிய அங்கமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் கொல்கத்தா இவ்வளவு பெரிய தொகையை அவர் மீது முதலீடு செய்திருக்கிறது.
கிரீன் 25.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருந்தாலும், அவருக்கு சம்பளமாக 18 கோடி ரூபாயே கிடைக்கும். மினி ஏலத்தில் வாங்கப்படும் வெளிநாட்டு வீரர்கள், மெகா ஏலத்தின் அதிகபட்ச ஏலத்தொகை அல்லது அதிகபட்ச ரிடன்ஷன் தொகையை விட அதிகமாக ஊதியம் பெற முடியாது என்று ஐபிஎல் புதிய விதி வகுத்திருக்கிறது.
அதன்படி கேமரூன் கிரீன், மெகா ஏலத்தின் அதிகபட்ச ரிடன்ஷன் தொகையான 18 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுவார். மீதமிருக்கும் 7.2 கோடி ரூபாய் பிசிசிஐ வீரர் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடவில்லை
2. மதீஷா பதிரனா – ரூ 18 கோடி
வழக்கமாக வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் அதிக கிராக்கி இருக்கும். அதிலும், அதிவேகமாகப் பந்துவீசக் கூடியவர்களாகவோ, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாகவோ அறியப்பட்டால் அவர்கள் மீது அணிகள் கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள். பதிரனா டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்துவீசிய அனுபவம் உடையவர் என்பதால் அவர் மீது பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
கடந்த சீசனில் அந்த இடம் நைட்ரைடர்ஸ் அணிக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. அவர்கள் 2024 சீசனில் கோப்பை வென்றபோது மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணாவுடன் இணைந்து டெத் ஓவர்களில் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அது 2025ல் கிடைக்காததால், அதை சரிசெய்ய பதிரனாவை வாங்கியிருக்கிறார்கள். அவரின் சமீபத்திய ஃபார்ம், காயமடைந்த வரலாறு பரவலாகப் பேசப்பட்டாலும், அவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் காரணமாக அவரை நம்பியிருக்கிறது நைட் ரைடர்ஸ்.
பட மூலாதாரம், Getty Images
சரியாக ஏலத்துக்கு முந்தைய நாள், ஐஎல்டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
பவர்பிளேவில் ஒரு ஓவர் வீசியவர், அதை மெய்டனாக்கி விக்கெட்டும் எடுத்தார். தொடர்ச்சியான ஏமாற்றமான செயல்பாடுகளுக்குப் பிறகு இந்த ஆட்டம் அவர் மீது அணிகளின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம்.
ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கும், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரஷாந்த் வீருக்கும் தலா 14.2 கோடி கொடுத்திருக்கிறது சூப்பர் கிங்ஸ். இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ‘அன்கேப்டு’ வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரின் அடிப்படை விலையுமே 30 லட்ச ரூபாயாக இருந்தது.
விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மாவுக்கு இப்போது 19 வயது தான் ஆகிறது. உள்நாட்டு டி20 போட்டிகளில் சிறப்பான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார்.
ஏலத்துக்கு முன்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன் “கார்த்திக் சர்மாவின் அதிரடி ஆட்டம் பல அணிகளின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அவர் மிகப் பெரிய ஷாட்கள் அடிக்கிறார்” என்று கூறியிருந்தார். இந்த ஏலத்தின்போதும் அது வெளிப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என பல அணிகளோடு போட்டியிட்டுத்தான் சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியது.
அதேபோல், ஆல்ரவுண்டரான பிரஷாந்த் வீரும் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். கிரிக்பஸ் தரவுகளின்படி 2025 யுபி டி20 லீக்கில் 10 போட்டிகளில் ஆடிய அவர், 320 ரன்கள் அடித்திருக்கிறார். அதை 155.34 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும், 64 என்ற சராசரியிலும் அடித்திருக்கிறார். பந்துவீச்சிலும் 21.75 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.
இடது கை பேட்டரும், இடது கை ஸ்பின்னருமான அவரை ஜடேஜாவுக்கான மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் பார்க்கிறது என்று பிபிசி தமிழிடம் கூறினார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. இவரை வாங்க மும்பை, லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் சென்னையோடு போட்டியிட்டன. அதனால், அவரின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது.
கடந்த சீசன் ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், பிரெவிஸ் போன்ற இளம் வீரர்கள் பெருமளவு சோபித்ததால், அவர்கள்மீது அதிகம் முதலீடு செய்ய சிஎஸ்கே முடிவு செய்திருக்கலாம் என்கிறார் நானீ.
5. லிவிங்ஸ்டன் – ரூ 13 கோடி
இந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு பல அணிகள் போட்டியிடுவார்கள் என்று ஏலத்துக்கு முன்பு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக் கூடியவர் என்பதால், நிறைய அணிகளுக்கு அவர் தேவைப்படுவார் என்று கருதப்பட்டது. ஆனால், முதல் சுற்றில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
பல அணிகளும் இளம் வீரர்களையும் வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்களையும் வாங்குவதற்காக தங்கள் தொகையை அப்படியே வைத்திருந்ததால், தொடக்க கட்டத்தில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை. அதில் லிவிங்ஸ்டனும் ஒருவராகவே இருந்தார். ஆனால், ஏலத்தின் கடைசி கட்டத்தில் இவர் வர, 13 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆர்சிபி அணியோடு ஐபிஎல் பட்டம் வென்றிருந்தார் லியாம் லிவிங்ஸ்டன்
பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தின் கடைசி கட்டத்தில் வரும் ஒருசில வீரர்கள் இப்படி அதிக தொகைக்கு ஏலம் போவது வழக்கம். ஒருசில அணிகளுக்கு பெரிய தொகை மீதமிருக்கும். ஆனால், ஒருசில வீரர்களே தேவையாக இருக்கும். அப்படியிருக்கும் போது வரும் சில வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள்.
உதாரணமாக 2024 சீசனுக்கான ஏலத்தில், கடைசி கட்டத்தில் ரைலி ரூஸோ 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். லிவிங்ஸ்டன் விஷயத்தில் அதுவே நடந்தது. சன்ரைசர்ஸ், சூப்பர் ஜெயின்ட்ஸ் இரு அணிகளுக்குமே கடைசி கட்டத்தில் பெரும் தொகை மீதமிருந்ததால், லிவிங்ஸ்டனுக்கு அந்த அணிகள் சண்டையிட்டு 13 கோடி ரூபாய் வரை கொண்டு சென்றன.
ஏற்கெனவே பலமான பேட்டிங் ஆர்டர் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை ஒரு ஃபினிஷராகப் பயன்படுத்தக் கூடும். “ஒருவேளை அணியின் ஒட்டுமொத்த பேலன்ஸ் கருதி இரண்டாவது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரைக் களமிறக்க நினைத்தால், லிவிங்ஸ்டன் வெளியே கூட அமர வைக்கப்படலாம்” என்கிறார் நானீ.