பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், கோடைகால விளையாட்டுத் திருவிழா 2025ம் ஆண்டு சீசனுக்கான 18-வது ஐபிஎல் டி20 தொடர் இந்த மாதம் தொடங்க இருக்கிறது.
ஒவ்வொரு அணி வீரர்களுடன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சீசனைப் போல் இல்லாமல் ஒட்டுமொத்த அணிகளிலும் உள்ள வீரர்கள் மாற்றப்பட்டு ஏராளமான புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, லக்னெள அணி ஆகியவற்றுக்கு புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி கோப்பையைத் தக்க வைக்குமா, நட்சத்திர வீரர் விராட் கோலிpயன் ஆர்சிபி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா, சிஎஸ்கே, மும்பை அணிகள் தங்களது வேட்டையைத் தொடருமா, புதிய அணிகள் ஏதேனும் கோப்பையை வெல்லுமா என்பன போன்ற பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் வருண் தவான், ஷ்ரதா கபூர், பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் 2025
1. ஐபிஎல் டி20 போட்டித் தொடர் எந்த தேதியில் தொடங்குகிறது, எப்போது முடிகிறது?
18வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்குகிறது. மே 25-ஆம் தேதி முடிகிறது. 65 நாட்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடக்கிறது.
2. 2025 ஐபிஎல் தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?
2025 ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
3. ஐபிஎல் டி20 போட்டியில் முதல் ஆட்டம் எப்போது? எந்தெந்த அணிகள் மோதுகின்றன?
மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.
4. 10 அணிகளின் கேப்டன்கள் யார்யார்?
- ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே)
- ஹர்திக் பாண்டியா(மும்பை இந்தியன்ஸ்)
- சஞ்சு சாம்ஸன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
- அக்ஸர் படேல் (டெல்லி கேபிடல்ஸ்)
- சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
- ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்)
- ரிஷப் பந்த் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)
- அஜிங்கயே ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
- ரஜத் பட்டிதார் (ராயல் சேலஞ்சர்ஸ்)
- பேட் கம்மின்ஸ் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்)
டபுள் ஹெட்டர்ஸும், குவாலிஃபயர் போட்டிகளும்!
5. ஐபிஎல் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடக்கின்றன?
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசனில் மொத்தம் 74 போட்டிகள் 65 நாட்களில் நடத்தப்படுகின்றன. இதில் 12 போட்டிகள் டபுள் ஹெட்டர்ஸ் முறையில் அதாவது ஒரே நாளில் இரு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
6. ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த நகரங்களில் நடக்கின்றன?
ஐபிஎல் டி20 போட்டிகள் இந்த முறை 13 நகரங்களில் நடக்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டிணம், லக்னெள, புதுடெல்லி, அகமதாபாத், முலான்பூர், ஜெய்பூர், தரம்சாலா, கெளஹாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன.
7. ஒரே நாளில் 2 ஆட்டங்கள் (டபுள் ஹெட்டர்ஸ்) எந்தெந்த தேதியில் நடக்கின்றன?
2025 ஐபிஎல் சீசனில் மொத்தம் 12 டபுல் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் டபுள் ஹெட்டர்ஸ் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 30, ஏப்ரல் 5,6, 12,13 தேதிகளில் நடக்கிறது. அதன்பின 19,20, 27 தேதிகளில் டபுள் ஹெட்டர்ஸ் போட்டி நடக்கிறது. மே மாதத்தில் 4, 11 , 18 ஆகிய தேதிகளில் ஒரே நாளில் இரு ஆட்டங்கள் நடக்கின்றன.
8. ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 1 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது?
ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் முதல் போட்டி மே மாதம் 20ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது.
9. ஐபிஎல் தொடரில் குவாலிஃயர் 2 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது?
ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2வது போட்டி மே மாதம் 23ம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
18 சேனல்களில் நேரலை
10. ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டி எப்போது எங்கு நடக்கிறது?
ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மே மாதம் 21ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது.
11. ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி எப்போது எங்கு நடக்கிறது?
ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மே மாதம் 25-ஆம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
12. ஐபிஎல் போட்டியை எந்த சேனல் நேரலை செய்கிறது, எந்த செயலியில் பார்க்கலாம்?
2025 சீசனுக்கான ஐபிஎல் டி20 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக காணலாம். இது தவிர மொபைலில் ஜியோ சினிமாவில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரடியாகப் போட்டியைப் பார்க்க முடியும்.
13. ஐபிஎல் தொடரில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் பிற்பகலில் எத்தனை மணிக்குத் தொடங்கும்?
ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 12 டபுள்ஹெட்டர்கள் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும், 2வது போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும்.
பட மூலாதாரம், Getty Images
சென்னையில் நடக்கும் போட்டிகள் எத்தனை?
14. சிஎஸ்கே அணி எத்தனை லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது, தேதிகள் என்ன?
2025 ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் சிஎஸ்கே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ஸ்ட் அணிகள் உள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள சிஎஸ்கே அணி தன்னுடைய குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளும், பி குரூப்பில் உள்ள அணிகளுடன் மும்பை தவிர்த்து மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டி என 14 லீக் ஆட்டங்களில் மோதுகிறது.
மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 28 (ஆர்சிபி), மார்ச் 30 (ராஜஸ்தான்), ஏப்ரல் 5 (டெல்லி), ஏப்ரல்8 (பஞ்சாப்), ஏப்ரல்11 (கொல்கத்தா), ஏப்ரல் 14 (லக்னெள), ஏப்ரல்20 (மும்பை), ஏப்ரல்25 (சன்ரைசர்ஸ்), ஏப்ரல் 30 (பஞ்சாப்), மே3 (ஆர்சிபி), மே7 (கொல்கத்தா), மே12 (ராஜஸ்தான்), மே18 (குஜராத்) ஆகிய தேதிகளில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது.
15. சென்னை சேப்பாகத்தில் எத்தனை ஆட்டங்கள் நடக்கின்றன?
சென்னையில் 2025 ஐபிஎல் டி20 தொடரில் 7 ஆட்டங்கள் நடக்கின்றன. மார்ச் 23, மார்ச் 28, ஏப்ரல்-5, ஏப்ரல் 11, ஏப்ரல் 25, ஏப்ரல் 30,மே 12 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன.
16. சென்னையில் இறுதிப்போட்டி, குவாலிஃபயர் ஆட்டங்கள் நடக்கிறதா?
இல்லை, சென்னையில் லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. குவாலிஃபயர் ஆட்டங்களோ, இறுதிப்போட்டியோ நடக்காது.
17. ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் எப்போது தொடக்கம்?
சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரீசெல் டிக்கெட் விற்பனை செய்யும் தளமான வியாகோகோவில் சிஎஸ்கே-மும்பை ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.1.23 லட்சத்துக்கு பேரம்பேசப்படுகிறது, குறைந்தபட்சமாக ரூ.17ஆயிரத்துக்கு பேரம் பேசப்படுகிறது.
18. சிஎஸ்கே-மும்பை அணி ஆட்டங்கள் எந்தெந்த தேதியில், எங்கு நடக்கின்றன?
2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-மும்பை அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 23ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் ஏப்ரல் 20ம் தேதி மும்பை வான்ஹடே மைதானத்தில் நடக்கிறது.
19. சிஎஸ்கே-ஆர்சிபி ஆட்டங்கள் எப்போது, எங்கு நடக்கின்றன?
2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 28ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் மே 3ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
புதிய விதிகள்
20. ஐபிஎல் தொடரில் புதிய விதிகள் என்ன?
- ஐபிஎல் அணிகளில் உள்ள வீரர்களின் ஓய்வறைக்குள் நண்பர்கள், சப்போர்ட் ஸ்டாப், குடும்ப உறுப்பினர்கள் செல்ல அனுமதியில்லை.
- அணி வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில்தான் பயணிக்க வேண்டும், தனியாக காரில் பயணிக்கக் கூடாது.
- போட்டி நடக்கும் நாட்களில் பயிற்சி கிடையாது. திறந்தவெளி வலைப்பயிற்சி இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வீரர்கள் ஓய்வறைக்குள் செல்ல முடியும்.
- எல்இடி போர்டுகளில் வீரர்கள் பந்தை அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்இடி போர்டுக்கு முன் வீரர்கள், அணியின் ஊழியர்கள் அமரக்கூடாது. அவர்களுக்கான இடத்தில்தான் அமர வேண்டும்.
- ஆரஞ்சு, பர்ப்பிள் தொப்பி வாங்கிய வீரர்கள் அதனை குறைந்தபட்ச நேரம் அணிந்திருக்க வேண்டும்.
- வீரர்கள் ப்ளாப்பி தொப்பி, ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அணிய அனுமதியில்லை. முதல் முறை தவறு செய்தால் எச்சரிக்கையும் 2வது முறை அபராதமும் விதிக்கப்படும்.
- ஜெர்ஸியில் எண்கள் மாற்றப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக ஓர் அணி தெரிவிக்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு