பட மூலாதாரம், instagram/chennaiipl
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
இந்தியக் கிரிக்கெட்டுக்கும், ஐபிஎல் டி20 லீக்கிற்கும் சிறந்த வீரர்களை தமிழகம் உருவாக்கி வழங்கியுள்ளது.
அந்த வகையில் ஐபிஎல் 2025 சீசனில் ஏராளமான தமிழக வீரர்கள் இருந்தாலும் சில வீரர்கள், ஒவ்வொரு அணியின் ஆட்டத்தை மாற்றும் திருப்புமுனை வீரர்களாக கருதப்படுகிறார்கள்
தமிழக வீரர்கள் எத்தனை பேர்
2025 ஐபிஎல் சீசனில் தமிழகத்தில் இருந்து 9 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.
அஸ்வின் ரூ.9.75 கோடி(சிஎஸ்கே), விஜய் சங்கர் ரூ.1.20 கோடி(சிஎஸ்கே), சாய் சுதர்சன் ரூ.8.50 கோடி (குஜராத்), ஷாருக்கான் ரூ.4 கோடி (குஜராத்), வாஷிங்டன் சுந்தர் ரூ.3.20 கோடி(குஜராத்), சாய் கிஷோர் ரூ.2 கோடி(குஜராத்), வருண் சக்கிரவர்த்தி ரூ 12 கோடி(கொல்கத்தா), வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி (கொல்கத்தா), மணிமாறன் சித்தார்த் ரூ.75 லட்சம்(லக்னெள), நடராஜன் ரூ.10.75 கோடி(டெல்லி), ஆகிய வீரர்கள் தமிழகத்தில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக குஜராத் அணியில் 4 தமிழக வீரர்களும், சிஎஸ்கே அணியில் 2 பேரும், லக்னெள அணியில் ஒருவரும், கொல்கத்தா அணியில் 2 பேரும், டெல்லி அணியில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த 9 தமிழக வீரர்களில் மணிமாறன் சித்தார்த்துக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை.
இதில் பல வீரர்கள் ஆல்ரவுண்டர்ளாகவும், சிலர் சுழற்பந்துவீச்சாளராகவும், ஒரு சிலர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களாகவும் உள்ளனர்.
பட மூலாதாரம், instagram/chennaiipl
1. ரவிச்சந்திரன் அஸ்வின்(சிஎஸ்கே)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2025 ஐபிஎல் ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். கடந்த 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக ஆடிய அஸ்வின், 10 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சிஎஸ்கே அணியில் தற்போது இணைந்துள்ளார்.
அஸ்வினின் வருகை சிஎஸ்கேவுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும்.
ஐபிஎல் தொடரில் அஸ்வினின் வேரியேஷன் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதாக ஆடுவது கடினம். அஸ்வினின் ஒரு ஓவரின் 6 பந்துகளும் ஒவ்வொரு மாதிரியாக பேட்ஸ்மேனை நோக்கி வரும் என்பதால் நடுப்பகுதியிலும், பவர்ப்ளே ஓவரிலும் அஸ்வின் பந்துவீச்சு முக்கியப் பங்கு வகிக்கும். சிஎஸ்கே அணியில் அஸ்வினின் பந்துவீச்சு பவர்ப்ளே ஓவரிலோ அல்லது நடுப்பகுதியிலோ திருப்புமுனையை ஏற்படுத்தும்.
ஐபிஎல் தொடரில் 212 போட்டிகளில் 180 விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு பேட்டிங்கிலும் கடைசி வரிசை வரை வலிமை சேர்க்கும் அஸ்வின், பந்துவீச்சிலும் துருப்புச்சீட்டாக இருப்பார்.
பட மூலாதாரம், instagram/vijay_41
2. விஜய் சங்கர்(சிஎஸ்கே)
சிஎஸ்கே அணியால் ரூ.1.20 கோடிக்கு ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் வாங்கப்பட்டுள்ளார்.
பேட்டிங் ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் இம்பாக்ட் ப்ளேயராகவும், கீழ்வரிசை பேட்டிங்கில் சிஎஸ்கே அணியை பலப்படுத்துவார் எனத் தெரிகிறது.
தேவைப்பட்டால் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிஎஸ்கே விஜய் சங்கரை வலுவாகப் பயன்படுத்தும். ஐபிஎல் தொடரில் 72 போட்டிகளில் ஆடியுள்ள விஜய் சங்கர் 6 அரைசதங்கள் உள்பட 1115 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
பிஞ்ச்ஹிட்டர் வரிசையில் சேர்க்கப்படும் விஜய் சங்கர் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் அவர் திடீரென அணியின் ஸ்கோரை உயர்த்தும் அதிரடி ஆட்டக்காரர்.
பட மூலாதாரம், instragram/sais_1509
3. சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)
குஜராத் அணியால் கடந்த 2022ம் ஆண்டு ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சாய் சுதர்சன் பேட்டிங்கை 2023ம் ஆண்டிலிருந்து குஜராத் அணி புரிந்து கொண்டது. 2023 சீசனில் 8 போட்டிகளில் 3 அரை சதங்கள் உள்பட 362 ரன்களும், 2024 சீசனில் 12 போட்டிகளில் 524 ரன்களும் குவித்து குஜராத் அணியின் முக்கியத் தூணாக சுதர்சன் மாறிவிட்டார்.
இந்த சீசனிலும் குஜராத் அணிக்கு தொடக்க வீரராக அல்லது 3வது வீரராக களமிறங்கி சுதர்சன் பலம் சேர்ப்பார். தேவைப்படும் நேரத்தில் ஆங்கர் ரோல் எடுத்து பேட் செய்வது, ரன்ரேட்டை உயர்த்த வேண்டுமென்றால் அதிரடியாக விளையாடுவதற்கு சுதர்சன் திறமையானவர். கடந்த சீசனில் ஒரு சதம், 2 அரைசதங்களை அடித்ததில் இருந்து சுதர்சன் பங்கு அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என கூறலாம்.
பட மூலாதாரம், instagram/shahrukh.35
4. ஷாருக்கான்(குஜராத் டைட்டன்ஸ்)
குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் ரூ.4 கோடிக்கு ஷாருக்கான தக்க வைக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த ஷாருக்கான் கடைசி வரிசையில் களமிறங்கி போட்டியை ஃபினிஷ் செய்வதில் தேர்ந்தவர்.
2021 முதல் 2023 வரை பஞ்சாப் அணியில் ஆடி ஷாருக்கான் 426 ரன்கள் சேர்த்துள்ளார். குஜராத் அணிக்காக கடந்த சீசனில் ஆடிய ஷாருக்கான், 7 போட்டிகளில் 127 ரன்கள் சேர்த்தார்.
குஜராத் அணியில் நடுவரிசை, கீழ்வரிசையில் பேட் செய்ய ஷாருக்கான் வலுவானவர். இலக்கை சேஸ் செய்யும்போது பெரிய ஷாட்களை அடிப்பதில் ஷாருக்கான் சிறந்தவர்.
பட மூலாதாரம், instragram/washisundar555
5. வாஷிங்டன் சுந்தர்(குஜராத் டைட்டன்ஸ்)
வாஷிங்டன் சுந்தரை ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் குஜராத் அணி வாங்கியது. ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணியில் நீண்டகாலம் பயணித்த சுந்தருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவங்கள் உண்டு. குஜராத் அணியில் லெக் ஸ்பின்னர்கள் அதிகம் இருக்கும் நிலையில் முழுநேர ஆப் ஸ்பின்னராக சுந்தரை அந்த அணி வாங்கியுள்ளது.
வாஷிங்டன் சுந்தரால் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நன்றாகவே பங்களிப்பு செய்ய முடியும். பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சுந்தர் 60 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 378 ரன்கள் சேர்த்துள்ளார்.
பெரும்பாலும் கீழ்வரிசையில் பேட்டிங் செய்வதால் சுந்தரால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. குஜராத் அணிக்கு பவர்ப்ளே ஓவரிலும், நடுப்பகுதியிலும் சுந்தர் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர்.
ராஷித் கான், சாய் கிஷோர், ராகுல் தேவாட்டியாவுடன் சேர்ந்து சுந்தர் பந்துவீசினால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். குஜராத் அணியில் இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், instagram/saik_99
6. சாய் கிஷோர்(குஜராத் டைட்டன்ஸ்)
குஜராத் அணியில் கடந்த இரு சீசன்களாக விளையாடிவரும் சாய் கிஷோர் ஏலத்தில் ரூ.2 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். கடந்த இரு சீசன்களிலும் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான கிஷோர் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். டி20 போட்டிகளில் தனது பந்துவீச்சு சராசரியை 19ஆக மட்டுமே வைத்துள்ளார், அனுபவ வீரர் அஸ்வினிடம் கூட இந்த பந்துவீச்சு சராசரி இல்லை.
மெதுவாக, பந்தை நன்கு டாஸ் செய்து வீசக்கூடிய கிஷோர், பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் ஆடுவது சற்று சிரமமாக இருக்கும். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் சாய் கிஷோர் முக்கிய ஆயுதமாக குஜராத் அணிக்கு இருப்பார்.
ரன்ரேட்டை கட்டுப்படுத்த கிஷோரின் பந்துவீச்சு துல்லியமாக இருக்கும். குஜராத் அணியில் பல சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது கிஷோரை அந்த அணியின் நிர்வாகம் எவ்வாறு பயன்படுத்தப்போகிறது என்பதில் வெற்றி அடங்கியுள்ளது.
பட மூலாதாரம், instagram/chakaravarthyvarun
7. வருண் சக்கிரவர்த்தி(கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)
‘மிஸ்ட்ரி ஸ்பின்னர்’ என்றழைக்கப்படும் வருண் சக்கிரவர்த்தியை ரூ.12 கோடிக்கு தக்கவைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 2019ம் ஆண்டில் பஞ்சாப் அணியில் ஆடியபின், 2020லிருந்து கொல்கத்தா அணியில்தான் வருண் நீடித்துவருகிறார். ஐபிஎல் தொடரில் கடந்த 2 சீசன்களிலும் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணி பந்துவீச்சாளராக வருண் திகழ்கிறார். நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி கடந்த முறை சாம்பியன் பட்டம் வெல்ல பல போட்டிகளில் வெற்றிக்கு நாயகனாக வருண் இருந்துள்ளார்.
வருண் சக்கிரவர்த்தியை பவர் ப்ளே முடிந்து பந்துவீசச் செய்வதும், நடுப்பகுதியில் பந்துவீசச் செய்வதும் எதிரணியின் ரன்ரேட்டை குறைக்க உதவும். கொல்கத்தா அணியின் மிகப்பெரிய தூண்களில் வருணும் ஒருவர்.
பட மூலாதாரம், instagram/venky_iyer
8. வெங்கடேஷ் ஐயர்(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
2021ம் ஆண்டிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வெங்கடேஷ் ஐயர் நீடித்து வருகிறார். இந்த ஆண்டு ரூ.23.75 கோடிக்கு அவரை விலைக்கு வாங்கி, கொல்கத்தா அணி அவரை துணைக் கேப்டனாக்கியது. சிறந்த ஆல்ரவுண்டரான வெங்கேடஷ் கொல்கத்தா அணியின் பேட்டிங் தூண்களில் முக்கியமானவர். பந்துவீச்சிலும் அவ்வப்போது பங்களிப்பு செய்வார்.
கொல்கத்தா அணியில் தொடக்க வரிசை, நடுவரிசை, கீழ்வரிசை என எந்தவரிசையில் களமிறக்கினாலும் அதிரடியாக ஆடக்கூடிய இடதுகை பேட்ஸ்மேன் வெங்கடேஷ். கொல்கத்தா அணியின் பேட்டிங் வலிமையாக இருப்பதற்கு வெங்கடேஷ் இருப்பும் காரணம். கொல்கத்தா அணிக்காக 51 போட்டிகளி்ல் ஆடிய அவர் 1356 ரன்கள் குவித்துள்ளார்.
பட மூலாதாரம், instragram/natarajan_jayaprakash
9. நடராஜன்(டெல்லி கேபிடல்ஸ்)
2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அறிமுகமாகிய நடராஜன், அதன்பின் 2024 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்தார். கடந்த 3 சீசன்களிலும் சிறப்பாகப் பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், சராசரியாக 15 விக்கெட்டுகளுக்குமேல் எடுத்துள்ளார். கடந்த ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி கடும் போட்டிக்குப்பின் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.
நடராஜனை வாங்கியன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய வேகப்பந்துவீச்சு படையை வலிமையாக்கியுள்ளது. ஏற்கெனவே மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார் இருக்கும் நிலையில் நடராஜன் இணைவு மேலும் பலமாக்கும். டெத் ஓவர்,யார்கர் ஸ்பெஷலிஸ்டான நடராஜன் டெல்லி அணிக்கு முக்கியத் துருப்புச்சீட்டாக இருப்பார். நடுப்பகுதி ஓவர்களில் பேட்டர்களை திணறடிக்கவும், இக்கட்டான நேரத்தில் டெத் ஓவர்களில் பந்துவீச ஸ்டார்க்குடன் சரியான கலவையாக நடராஜன் இருப்பார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.