பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் டி20 தொடரில் 6-வது கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்குகிறது.
ஒரு சில அணிகளுக்கு சரியான கேப்டன் அமையாமல் சிரமப்படலாம் ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டும் 4 கேப்டன்கள் விளையாடுவதிலேயே அதன் தீர்மானத்தை அறியலாம்.
ஓர் அணியில் 4 கேப்டன் இருப்பது நிச்சயமாக பலம்தான், அதுவே சில நேரங்களில் அணியின் பலவீனத்துக்கும் காரணமாகிறது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 2020 சீசனுக்குப்பின் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை.
கடந்த 4 சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சாம்பியன் போலவே விளையாடவில்லை. 3 சீசன்களில் லீக் சுற்றிலேயே வெளியேறி, ஒரு சீசனில் மட்டும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால், இந்த முறை அணியில் முக்கிய அடையாளங்களாக இருக்கும் வீரர்களை மட்டும் தக்கவைத்துவிட்டு பல புதிய வீரர்களை மும்பை நிர்வாகம் ஏலத்தில் வாங்கியுள்ளது.
இதில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இருந்த வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அது மட்டுமல்லாமல் மும்பை அணிக்கு பல சாம்பியன் கோப்பைகளை பெற்றுக்கொடுத்த தலைமைப் பயிற்சியாளர் இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனாவும் அணியில் இணைந்துள்ளது கூடுதல் பலமாகும்.
கேப்டன்சியில் ஏற்பட்ட மாற்றம்
பட மூலாதாரம், Getty Images
கடந்த பல சீசன்களில் மும்பை அணி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தது. அதிலும் கடந்த சீசனில் கேப்டன்ஷிப்பை மாற்றிய சம்பவம் அணிக்குள் திடீரென சலசலப்பை ஏற்படுத்தி வீரர்களின் நம்பிக்கையைக் குலைத்தது ஆட்டத்திலேயே தெரிந்தது.
அணிக்குள்ளேயே ரோஹித் சர்மா தலைமை, ஹர்திக் பாண்ட்யா தலைமை என்று வீரர்கள் பிரிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
மும்பை அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை திடீரென மாற்றிவிட்டு, ஹர்திக் பாண்ட்யாவை அணி நிர்வாகம் கொண்டு வந்தது சர்ச்சையானது. இந்த கேப்டன்சி குழப்பத்தாலேயே மும்பை அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவை களத்தில் ஹர்திக் பாண்ட்யா நடத்திய விதமும் கடந்த சீசனில் சர்ச்சையானது.
இப்போது மிகுந்த நம்பிக்கையுடனும், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற உற்சாகத்தோடும் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி பணியை ஏற்க இருக்கிறார். மும்பை அணி ரசிகர்கள் ஹர்திக்கை ஏற்பார்களா, அல்லது ரோஹித், சூர்யகுமார் கேப்டன்சியை விரும்புகிறார்களா என்பது களத்தில் தெரியும்.
பல கேப்டன்கள் பலமா, பலவீனமா
பட மூலாதாரம், Getty Images
ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்கக்கூடாது என்று சொலவடை இருக்கும் நிலையில் அதையே விஞ்சும் அளவுக்கு ஒரு உறைக்குள் 4 கத்திகளை எவ்வாறு வைப்பது. இது சற்று சிக்கலானது.
அதுபோல ஓர் அணியில் 4 கேப்டன்கள் விளையாடினால் எப்படி இருக்கும், அணியின் உண்மையான கேப்டன் நிலை எப்படி இருக்கும், மற்ற 3 கேப்டன்களை எவ்வாறு சமாளிப்பார் என்பது சுவரஸ்யமானது.
இந்த ஐபிஎல் ஏலத்தில் கேப்டன் பொறுப்புக்குரிய வீரர்கள் கிடைக்காமல் ஏலத்தில் பல அணிகளின் நிர்வாகங்கள் அலைபாய்ந்ததைக் காண முடிந்தது. சில வீரர்கள் கேப்டன் பொறுப்புக்காகவே விலைக்கு வாங்கப்பட்டார்கள்.
சரியான கேப்டன் கிடைக்காமல் மூத்த வீரரையும், அனுபவம் இல்லாத வீரரையும் கேப்டனாக்கிய சம்பவம் இந்த சீசனில் நடந்துள்ளது.
சரியான கேப்டன் கிடைக்காமல் ஒருபுறம் அணிகள் தடுமாறிவரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியோ, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 கேப்டன்களை வைத்துள்ளது.
ரோஹித் சர்மா இந்திய அணிக்கு அடுத்தடுத்து 2 ஐசிசி கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான கேப்டன் என்ற அடையாளத்தோடு இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்று சூர்யகுமார் யாதவும் வெற்றிக் கேப்டனாக இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பும்ரா என 3 கேப்டன்களும் தனித்தனி ஆளுமைகளாக இருக்கிறார்கள்.
அணியை வழிநடத்த 4 கேப்டன்களும் சேர்ந்து ஆலோசித்து, முடிவை எடுத்தால் மும்பை அணி எந்த இக்கட்டான சூழலில் இருந்தும் மீண்டுவந்து எதிரணியை திக்குமுக்காட வைத்துவிடும்.
பட மூலாதாரம், Getty Images
பந்துவீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற உத்தி தெரிந்த ரோஹித் சர்மா, வீரர்களுக்கு சுதந்திரம் அளித்து அவர்கள் போக்கில் விளையாடவிடும் சூர்யகுமார், களத்தில் வீரர்களை எப்போதும் குஷியாக, உற்சாகமாக வைத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இணைந்து செயல்படும்போது, முடிவு சிறப்பாக கிடைக்கும்.
ஹர்திக் பாண்டியா களத்தில் கேப்டனாகச் செயல்படும்போது அவர் இடும் கட்டளைகளுக்கு ரோஹித், சூர்யகுமார், பும்ரா 3 பேரும் பணிந்து நடக்க வேண்டும் என்பது விதி. இதை 3 பேரும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போடு எடுத்துக்கொண்டால் அணிக்கு மிகப்பெரிய பலம். சிறிது ஈகோவோடு 3 பேரும் அணுகினால் மீண்டும் சிக்கல் ஏற்படும்.
மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை பார்த்த மும்பை ரசிகர்கள் அவர் இடத்தில் ஹர்திக் பாண்ட்யாவைப் பார்க்க விரும்பவில்லை என்பது கடந்த சீசனில் தெளிவாகத் தெரிந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்ட்யா என்னதான் உழைத்தாலும் மும்பை அணி என்று வரும்போது மண்ணின் மைந்தர் என்ற கோட்பாட்டை ரசிகர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த முறையும் பாண்ட்யாவுக்கு சிக்கல் வந்தால் மும்பை அணி நிலைமை பரிதாபம்தான்.
ரோஹித் இருக்கும்போது சூர்யகுமாருக்கு கொடுக்கப்பட்ட கேப்டன்சி
பட மூலாதாரம், Getty Images
ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட கடந்த சீசனில் தடை இருப்பதால் தொடக்க ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார்.
இதனால் அவருக்குப் பதிலாக கேப்டன்சி பொறுப்பை சூர்யகுமார் ஏற்பார் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
“இந்திய அணியை சூர்யா சிறப்பாக வழிநடத்தியுள்ளார். நான் இல்லாத நிலையில் அணியை வழிநடத்த சரியான தேர்வு சூர்யகுமார்தான். என்னுடன் 3 கேப்டன்கள் விளையாடுவதால் நான் அதிர்ஷ்டசாலி, 3 பேரும் எனக்கு துணையாக நிற்பார்கள், எனக்கு தேவைப்படும்போது உதவுவார்கள்” என்று ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.
மும்பை அணியில் மூத்த கேப்டன் ரோஹித் சர்மா இருக்கும்போது, சூர்யகுமாரிடம் கேப்டன்சியை ஹர்திக் பாண்ட்யா வழங்கியது ஏன் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் ரோஹித் ரசிகர்களும், மும்பை ரசிகர்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மும்பைக்கு புதிய வீரர்கள்
பட மூலாதாரம், Getty Images
மும்பை அணி ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை கழற்றிவிட்டது. ஏலத்தில் பலவிதமான வீரர்களை வாங்கியுள்ளது.
குறிப்பாக சிஎஸ்கே அணியோடு இணைந்து பல சீசன்கள் ஆடிய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ.9.25 கோடிக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அணியில் இருந்த நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் போல்டை ரூ.12.50 கோடிக்கும் வாங்கியது.
சிஎஸ்கே அணியில் இருந்த நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்ஷெல் சான்ட்னர், கரண் ஷர்மா, ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரையும் அதிரடி பேட்டிங்கிற்காக வில் ஜேக்ஸ், பேவென் ஜேக்கப்ஸ், ரியான் ரெக்கல்டன் ஆகியோரையும் வாங்கியது. வேகப்பந்துவீச்சை பலப்படுத்த ரீஸ் டாப்ளி, கார்பிஸ் போஸ் ஆகியோரையும் மும்பை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது.
இளம் வீரர்களை கண்டெடுத்து அவர்களின் திறமையை மெருகேற்றி வளர்த்துவிடுவதில் மும்பை அணிக்கு முக்கிய பங்குண்டு. இன்று கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்ட்யா, அவரின் சகோதரர் குர்னல் பாண்ட்யா, சூர்யகுமார் ஆகியோர் மும்பை அணியின் கண்டுபிடிப்புகள்தான்.
அந்த வகையில் இந்த முறை சர்வதேச அனுபவமில்லாத, உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் விளையாடாத ராபின் மின்ஸ், விக்னேஷ் புத்தூர், ராஜ் பாவா, வெங்கட் சத்யநாராயணா உள்ளிட்டோரை வாங்கியுள்ளது.
மும்பை அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்
பட மூலாதாரம், Getty Images
மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன், அந்த அணியைக் குறைத்து மதிப்பிடலாமா என்று ரசிகர்கள் கேட்கலாம். ஆனால், அணியின் வடிவம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால், எந்த இடத்தில் எந்த வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்பதை கண்டுபிடிக்க சில போட்டிகள் ஆகலாம்.
மும்பை அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து அதிரடியான தொடக்கத்தை யார் தரப்போகிறார்கள் என்பதே ஊகிக்க முடியாத நிலையில் இருப்பதுதான் நிதர்சனம்.
அதாவது தொடக்க வரிசைக்கு யார் தகுதியாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை. ரியான் ரிக்கல்டன், ராபின் மின்ஸ் இருவரில் யாரை தொடக்க வீரராக களமிறங்க வைக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்புதான்.
ஏனென்றால், இதற்கு முன் இஷான் கிஷன், குயின்டன் டீ காக் என அதிரடியான தொடக்கத்தை அளித்த வீரர்கள் இருந்தநிலையில் இந்த சீசனில் தொடக்க வீரரை ஊகிப்பது கடினம்தான், பரிசோதனை முயற்சியில்தான் தொடக்க வரிசையை அமைக்க முடியும்.
இதைத் தவிர்த்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஹர்திக் பாண்டியா வரை அணியின் பேட்டிங் நம்பிக்கையளிக்கிறது. அதன்பின் கீழ் நடுவரிசை சற்று பலமில்லாததாகவே தெரிகிறது. சான்ட்னர் தவிர்த்து ராபின் மின்ஸ், பெவான் ஜேக்கப்ஸ், கார்பின் போஸ் ஆகியோர் ஆல்ரவுண்டர்கள், நடுவரிசையில் விளையாடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் விலைக்கு வாங்கியுள்ளது.
ஆனால், இவர்களுக்கு சர்வதேச அனுபவம் பெரிதாக இல்லை என்பதுதான் குறை. மும்பை அணியின் பேட்டிங் பெரிதாக நம்பி இருப்பது டாப்ஆர்டர்கள் 4 பேரையும், நடுவரிசையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவையும்தான்
பட மூலாதாரம், Getty Images
வேகப்பந்துவீச்சில் பும்ரா, டிரன்ட் போல்ட் ஆகியோர் தொடக்கத்திலும், நடுப்பகுதியில் பந்துவீச தீபக் சஹார், டாப்ளி உள்ளனர். இதில் பும்ரா பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் போல்ட்டுடன் சேர்ந்து தீபக் சஹார் பந்துவீசலாம், நடுப்பகுதியில் டாப்ளி பந்துவீசலாம்.
வேகப்பந்துவீச்சைப் பொருத்தவரை நல்ல அனுபவமான வீரர்களை வைத்துள்ளது மும்பை அணி நிர்வாகம். மும்பை அணி ஏலத்தில் எடுத்த 7 வேகப்பந்துவீச்சாளர்களில் 5 பேர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதும் தீபக் சஹார், பும்ரா மட்டுமே வலது வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்துவீச்சில் மிட்ஷெல் சான்ட்னர், கரண் சர்மா, முஜிபுர் ரஹ்மான், நமன் திர், வில் ஜேக்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.
சுழற்பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த வீரர்களான சான்ட்னர், முஜிபுர் ரஹ்மான், வில் ஜேக்ஸ், கரண் சர்மாவின் கூட்டணி வலிமையானது. அதிலும் சான்ட்னர், ரஹ்மான் பந்துவீச்சு நடுப்பகுதி ஓவர்களில் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும், இருவருமே விக்கெட் வீழ்த்தக்கூடிய திறமை படைத்தவர்கள்.
மும்பை அணி விவரம்
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிரன்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரண் சர்மா, ரியான் ரெக்கில்டன், தீபக் சஹார், வில் ஜேக்ஸ், அஷ்வானி குமார், மிட்ஷெல் சான்ட்னர், ரீஸ் டாப்ளி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் பாவா, வெங்கட் சத்யநாராயணா, ரெவான் ஜேக்கப்ஸ், அர்ஜூன் டெண்டுல்கர், விக்னேஷ் புத்தூர், முஜிப்புர் ரஹ்மான், கார்பின் போஸ்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு