0
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களுக்கு 22 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை உயர்ந்த வரிகளை சீனா விதித்துள்ளது. இந்த புதிய வரி நடைமுறை, டிசெம்பர் 22 முதல் அமலில் உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் வரி விதித்ததற்கான பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனா விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பால் துறைக்கு வழங்கப்படும் அரச நிதியுதவிகள், சீன உள்ளூர் பால் தயாரிப்புத் துறையை பாதிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இதனையடுத்து, சீனாவின் வர்த்தக அமைச்சு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்த விசாரணையின் முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த வரி விதிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் போது தேவையான தகவல்களை முழுமையாக வழங்காமல் ஒத்துழைக்காத சில ஐரோப்பிய நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெரும்பாலான ஐரோப்பிய பால் தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 30 சதவீத வரி செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இனிப்பு சேர்க்கப்படாத பால், பாலாடைக்கட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய பால் பொருட்களே இந்த வரிகளின் முக்கிய இலக்காக உள்ளன.
இந்த வரி விதிப்பு நியாயமற்றதும் தேவையற்றதும் என ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடும் என்றும், உலகளாவிய வர்த்தக சூழலில் புதிய சவால்களை உருவாக்கக்கூடும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.