• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

ஒடிசா பெண்ணுக்கு முதல் உதவி அளித்து பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு! | Shankar Jiwal Appreciate Tiruppur Lady Police Who Help Pregnant Lady

Byadmin

Aug 20, 2025


சென்னை: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒடிசா பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு முதல் உதவி அளித்து, பிரசவிக்க உதவினார். இதையறிந்த டிஜிபி சங்கர் ஜிவால் சம்பந்தப்பட்ட பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார்.

திருப்பூர் மாவட்டத்தில், வேலம்பாளையம் காவல் நிலைய போலீஸார் அப்பகுதியில் கடந்த 16ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பணியில் ஆயுதப்படை பெண் காவலர் கோகிலா என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஓன்று வந்தது. அதில், நிறைமாத கர்பிணியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி (25) என்ற பெண் பிரசவத்துக்காக கணவருடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அந்தப் பெண் கடுமையான பிரசவ வலியில் இருப்பதை கவனித்த பெண் காவலர் கோகிலா, ஒடிசா மாநில பெண்ணுக்கு உதவி செய்ய ஆட்டோவில் ஏறினார். வலி மிகவும் கடுமையானதாக மாறியதால் பெண் காவலர் விரைவில் செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பிரசவிக்க உதவினார்.

பின்னர் தாய் மற்றும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை இருவரும் பாதுகாப்பாக திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல நிலையில் அனுமதிக்கப்பட்டனர். பெண் காவலர் கோகிலா காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்னர் நர்சிங் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, பெண் காவலரின் விரைவான மற்றும் அர்ப்பணிப்பு நடவடிக்கையை அங்கீகரிக்கும் வகையில் டிஜிபி சங்கர் ஜிவால், சம்பந்தப்பட்ட பெண் காவலர் கோகிலாவை இன்று நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.



By admin