0
கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த இளைஞன் ஒருவன் தன் வாழ்வியல் உரிமைக்காக நடத்தும் போராட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வினோத். வி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கவுடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபால கிருஷ்ணா தேஷ் பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
லலித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ண சந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியசன் மற்றும் சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
தமிழ் -கன்னடம் -தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது இந்த தருணத்தில் ‘ரைஸ் ஆஃப் அசோகா’ படத்தை தமிழில் அறிமுகப்படுத்துவதற்கான பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தை பற்றி நாயகன் சதீஷ் பேசுகையில், ” இப்படத்தின் கதைக்களம் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில எல்லை பகுதியான சாம்ராஜ் நகரில் நடைபெறுகிறது. 1970களில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் அவர்களுடைய வாழ்வாதாரமான சிகை அலங்கார தொழில் மீது ஆதிக்க வர்க்கத்தினர் தடை விதிக்க, அதை எதிர்த்து கதையின் நாயகன் போராடுகிறார்.
அவருக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதை உணர்வுபூர்வமாக இப்படம் விவரிக்கிறது. இந்தக் கதையை இயக்குநர் சொன்னவுடன் கன்னடத்தில் நான் நடிகராக இருந்தாலும் தமிழிலும் இதனை வெளியிட வேண்டும் என விரும்பினேன். கதை களத்தில் வாழும் மக்கள் தமிழும் கன்னடமும் கலந்த பேச்சு வழக்கினை கொண்டிருப்பவர்கள். அதனால் இந்த திரைப்படம் உணர்வுபூர்வமாக தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழிலும் நான் அறிமுகமாகிறேன்” என்றார்.