0
வடக்குக் கடலில் உருவாக்கப்பட உள்ள பிரம்மாண்ட கடல்சார் காற்றாலை திட்டத்தை நோர்வே, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், எரிபொருள், எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகளின் ஏற்ற இறக்கங்களிலிருந்து விடுபட உதவுவதோடு, நாட்டின் ஆற்றல் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, முதன்முறையாக சில புதிய காற்றாலைத் திட்டங்கள் கடலுக்கடியில் அமைக்கப்படும் ‘இன்டர்கனெக்டர்’ கேபிள்கள் மூலம் பல நாடுகளின் மின்சார வலையமைப்புகளுடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மின்சார விநியோகம் அதிகரித்து, மின்சார விலைகள் குறைய வாய்ப்பு இருப்பதாக திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், மின்சாரத்திற்கு அதிக விலை கிடைக்கும் நாட்டிற்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விற்பனை செய்ய காற்றாலை இயக்குநர்களுக்கு வாய்ப்பு இருப்பதால், மின்சாரம் தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் விலைகள் உயரக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
ஆற்றல் செயலாளர் எட் மிலிபாண்ட், திங்கட்கிழமை ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெறும் வடக்குக் கடல் எதிர்காலம் தொடர்பான மாநாட்டில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். இந்தக் கூட்டு திட்டம் 2050 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற இலக்கையும் இங்கிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளது.
ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளின் மின்சார வலையமைப்புகளை இணைக்கும் பல கேபிள்கள் கடலுக்கடியில் செயல்பட்டு வருகின்றன. இங்கிலாந்துக்கு மட்டும் 10 இன்டர்கனெக்டர் கேபிள்கள் உள்ளன. இருப்பினும், காற்றாலைகளை நேரடியாக பல நாடுகளுடன் இணைப்பது இதுவே முதல் முறையாகும்.
பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான இத்தகைய அதிக இணைப்புகள் செலவைக் குறைத்து, மின்சார விநியோகத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என கருத்து தெரிவிக்கின்றனர்.