பட மூலாதாரம், Getty Images
சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்யும்போதும் அல்லது ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலைகளில், ரத்த வங்கிகளில் இருந்தோ அல்லது அதே ரத்தக் வகையை கொண்ட நன்கொடையாளர்களிடம் இருந்தோ ரத்தம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது.
சமீபத்தில் வாரங்கல் எம்ஜிஎம் மருத்துவமனையில், 34 வயதான ஒரு பெண் சேர்க்கப்பட்டபோது அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் அவருக்கு ‘ஓ’ பாசிட்டிவ் ரத்தத்திற்குப் பதிலாக ‘பி’ பாசிட்டிவ் ரத்தத்தை ஏற்றியுள்ளனர்.
ஒரு நாள் கழித்து, நோயாளிக்கு வேறு வகை ரத்தம் செலுத்தப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதற்குள்ளாக நோயாளிக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஆரம்பமாகிவிட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வாரங்கல் எம்ஜிஎம் கண்காணிப்பாளர் டாக்டர் கிஷோர் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிர்களைக் காப்பாற்றும் அதே ரத்தம் தவறுதலாக அமைந்துவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த வாரங்கல் சம்பவம் ஒரு உதாரணம்.
உண்மையில் ஒரு நோயாளிக்குத் தவறான ரத்த வகை செலுத்தப்பட்டால் என்ன நடக்கும்? ரத்தம் ஏற்றும்போது என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்? ஒருவேளை தவறான ரத்த பிரிவு ஏற்றப்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகள் குறித்து விவாதம் தொடங்கியது.
இந்த விஷயங்கள் குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் ரத்தவியல் நிபுணர் மருத்துவர் லட்சுமி மைதிலியை பிபிசி தொடர்புகொண்டது.
பட மூலாதாரம், Getty Images
உடலுக்குள் வேறு ரத்த பிரிவு வந்தால் என்ன நடக்கும்?
“மனித உடலில் ரத்தம் ஏ,பி, ஏபி, ஓ ஆகிய 4 முக்கிய குழுக்களாக (குரூப்) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றோடு பாசிட்டிவ், நெகட்டிவ் என்ற துணைப் பிரிவுகளைச் சேர்த்தால் எட்டு வகையான ரத்தக் குழுக்கள் வருகின்றன. ஒவ்வொரு மனித உடலிலும் ஒரு வகை ரத்தம் மட்டுமே கொண்டிருக்கும். வேறு வகை ரத்தத்தை ஏற்றினால், உடல் அதை எதிரியாகக் கருதி எதிர்வினை ஆற்றும்” என்று மருத்துவர் லட்சுமி மைதிலி விளக்கினார்.
இந்த ரத்தக் குழுக்களுடன், உலகில் மேலும் சில அரிய ரத்தக் குழுக்களும் உள்ளன என்று அவர் கூறினார்.
பாம்பே பிளட் குரூப் (ஹெச்ஹெச்) (Bombay Blood Group (hh): பொதுவாக பாம்பே வகை ரத்தம் கிடைக்காத பட்சத்தில் ஓ குரூப் ரத்தம் போதுமானது என்று கருதப்படுவதுண்டு. இந்த ரத்தக் குழுவில் ஹெச் ஆன்டிஜென் இருக்காது. எனவே, பாம்பே ரத்தக் குழு உள்ள நோயாளிக்கு சாதாரண O குரூப் ரத்தத்தை கொடுக்கக்கூடாது. ஹெச்ஹெச் வகை ரத்தம் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஆர்ஹெச் நல் (Rh-null): இது ‘தங்க ரத்தம்’ (Golden Blood) என்று அழைக்கப்படுகிறது. உலகில் சுமார் 50-60 பேருக்கு மட்டுமே இது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிற அரிய குழுக்கள்: லத்தீன் அமெரிக்க இனங்களில் காணப்படும் தனித்துவமான ஆன்டிஜென்கள் உள்ள டீகோ (Diego) வகை, அதேபோல் ஜேகேஏ, ஜேகேபி போன்ற ஆன்டிஜென்கள் கொண்ட கிட் (Kidd) வகை, மேலும் எஃப்ஒய்(ஏ), எஃப்ஒய்(பி) போன்ற சிறப்பு ஆன்டிஜென் கொண்ட டஃப்பி (Duffy) வகை போன்றவை உள்ளன. இவை சில இனங்கள் மற்றும் சில பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன.
“இந்த அரிய ரத்தக் குழுக்களை கையாள்கையில் தனியாகச் சேகரிப்பு, சேமிப்பு, மற்றும் செலுத்துதலில் சிறப்பு கவனம் தேவை. அரிய ரத்தம் கொண்ட நோயாளிகளுக்கு அதிகபட்ச கவனம் தேவை. சரியான ரத்தம் கிடைக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகும்” என்று மருத்துவர் லட்சுமி மைதிலி கூறினார்.
ரத்தக் குழுவை எப்படி உறுதி செய்கிறார்கள்?
ரத்தக் குழுவை உறுதி செய்ய இரண்டு முக்கியமான சோதனைகள் செய்யப்படுகின்றன. அவை சிவப்பு ரத்த அணுக்களின் மீதுள்ள ஆன்டிஜென்களை உறுதி செய்யும் ஃபார்வர்ட் குரூப்பிங் சோதனை, மற்றும் ரத்தத்தில் உள்ள வேறு ரத்த அணுக்களைக் கண்டறியும், அதாவது ஆன்டிபாடிகளைக் கண்டறியும் ரிவர்ஸ் குரூப்பிங் சோதனை.
ஒவ்வொரு ரத்தக் குழுவுக்கும் தனிப்பட்ட ஆன்டிஜென்கள் உள்ளன.
“ஏ குரூப்பில் ஏ ஆன்டிஜென், பி குரூப்பில் பி ஆன்டிஜென், ஏபி குரூப்பில் ஏ, பி என இரண்டு வகையான ஆன்டிஜென்களும் இருக்கும். ஓ குரூப்பில் எந்த வகையான ஆன்டிஜென்களும் இருக்காது. அதனால் தான் ஓ ரத்தக் குழுவை அனைவருக்குமான நன்கொடையாளர் குரூப் (Universal Donor Group) என்று அழைக்கிறார்கள். ஃபார்வர்ட் குரூப்பிங் சோதனையில் ரத்தத்தில் உள்ள ஆன்டிஜென்களைக் கண்டறிந்து ரத்தக் குழுவை உறுதி செய்கிறார்கள். ஆன்டிஜென் என்பது ரத்த அணுக்களின் ‘அடையாள அட்டை’ என்று சொல்லலாம்” என்று மருத்துவர் லட்சுமி மைதிலி கூறினார்.
அதேபோல், ரிவர்ஸ் குரூப்பிங் சோதனையில் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள் கண்டறியப்படுகின்றன. இவை உடலில் உள்ள மற்ற ரத்த அணுக்களைக் கண்டறிந்து தாக்குகின்றன. ஆன்டிஜென்களைப் போலவே ஒவ்வொரு ரத்தக் குழுவுக்கும் தனிப்பட்ட ஆன்டிபாடிகள் உள்ளன.
“ஏ வகை ரத்தத்தில் பி ஆன்டிபாடி, பி வகை ரத்தத்தில் ஏ ஆன்டிபாடி இருக்கும். ஏபி வகை ரத்தத்தில் எந்த ஆன்டிபாடியும் இருக்காது. ஓ வகை ரத்தத்தில் ஏ, பி ஆகிய இரண்டும் இருக்கும். ரிவர்ஸ் குரூப்பிங் சோதனையில் இந்த ஆன்டிபாடிகளைப் பார்த்து ரத்தக் குழுவை உறுதி செய்கிறார்கள். ஆன்டிபாடிகள் என்றால், ‘இது எனது வகை இல்லையென்றால் அழிக்க வேண்டும்’ என்று நினைக்கும் உடலின் பாதுகாப்புப் படையே போன்றது. இந்த இரண்டு சோதனைகளின் முடிவுகளும் ஒத்துப்போனால் மட்டுமே ரத்தக் குழு துல்லியமாக உறுதி செய்யப்படுகிறது” என்று டாக்டர் லட்சுமி மைதிலி கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
நோயாளி உடலில் வேறு வகை ரத்தம் ஏற்றப்பட்டால் என்ன நடக்கும்?
ரத்தவியல் நிபுணர் லட்சுமி மைதிலி அளித்த தகவல்களின்படி, ரத்தம் தவறாக செலுத்தப்படும் போது உடலில் ஹீமோலிடிக் ரியாக்ஷன் (சிவப்பு ரத்த அணுக்கள் உடைதல்) ஏற்படுகிறது.
“ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் வெடித்துச் சிதறும். இதனால் நோயாளிக்கு காய்ச்சல், நடுக்கம், கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, நெஞ்சுவலி, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். உடனடியாகக் கண்டறியப்படாவிட்டால், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அத்தகைய நிலைமை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.”
“தவறான வகை ரத்தம் செலுத்தப்பட்டால், நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பை அந்த ரத்தமே தாக்கும். இதை ‘அக்யூட் ஹீமோலிடிக் டிரான்ஸ்ஃப்யூஷன் ரியாக்ஷன்’ என்று அழைக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. சந்தேகம் ஏற்பட்ட உடனேயே முதலில் டிரான்ஸ்ஃப்யூஷனை (ரத்தம் ஏற்றுவதை) நிறுத்த வேண்டும்” என்று மருத்துவர் லட்சுமி மைதிலி அறிவுறுத்தினார்.
“அதன் பிறகு நோயாளிக்குத் திரவங்கள், மருந்துகள் கொடுத்து சிறுநீரகங்களைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும். நோய்த்தொற்றுகள் வராமல் இருக்க ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் தேவைப்பட்டால் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பும் செய்யப்பட வேண்டும். நோயாளியின் ரத்த மாதிரி, ரத்தப் பையின் லேபிளை மீண்டும் சரிபார்த்து, தவறு எங்கே நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். தாமதித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்று அவர் எச்சரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற தவறுகள் ஏன் நடக்கின்றன?
“ஒரு யூனிட் ரத்தம் நோயாளிக்குச் சென்றடையும் வழியில் மூன்று, நான்கு முறை சரிபார்ப்பு (cross-check) செய்யப்படுகிறது. ரத்த வங்கியில் குரூப்பிங், கிராஸ் மேட்சிங், லேபிள்கள் சரிபார்ப்பு, மீண்டும் ஒருமுறை ரத்தக் குழு சரிபார்ப்பு ஆகியவை கட்டாயம் செய்யப்படுகின்றன. ஆனால் சில சமயங்களில் மனிதத் தவறு, அவசரம் அல்லது சிஸ்டம் தோல்வி காரணமாகத் தவறு நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இது மிகவும் அரிது” என்று மருத்துவர் மைதிலி கூறினார்.
நோயாளியின் அடையாளத்தை உறுதி செய்தல்: நோயாளியின் பெயர், வயது, வார்டு எண் சரிபார்க்கப்பட வேண்டும்.
தவறான ரத்த மாதிரி: ஒருவரின் ரத்தத்தை எடுத்து, தவறுதலாக மற்றொருவரின் பெயரை லேபிளில் ஒட்டுதல்.
தவறான ரத்தப் பை: ரத்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தப் பையைச் சரியாக மேட்ச் செய்யாமல் இருப்பது.
சரிபார்ப்பில் தவறு: ஆய்வகத்தில் மீண்டும் சோதனை செய்யும்போது உறுதிப்படுத்தும் சோதனையில் தவறு நடப்பது.
பட மூலாதாரம், Getty Images
ரத்தம் தேவைப்பட்டால் நோயாளிகள் பயப்பட வேண்டுமா?
யாராவது, தங்களுக்கு அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வேறு வகை ரத்தம் ஏற்றப்பட்டதாக அறிந்தால் தனக்கு ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும்போது அந்த நோயாளி/நபர் பயப்படுவார் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்தார். ஆனால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறுகிறார்.
“தற்போது ரத்த வங்கிகளில் மிகவும் கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. சோதனை செயல்முறையில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. தவறான ரத்தம் ஏற்றும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. வாரங்கலில் நடந்தது ஒரு விதிவிலக்கு. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மருத்துவ ஊழியர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
ரத்த வகை சரியானதா என்று பார்க்க பல்வேறு கட்டங்களில் சரிபார்க்கிறார்கள். இதை ஒருவர் மட்டும் அல்லாமல் குறைந்தது இருவர் தனித்தனியாகச் சரிபார்க்க வேண்டும்.
“ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும் போது பயப்பட வேண்டாம். ஆனால் உங்கள் ரத்தக் குழு எது என்பதை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரத்தம் ஏற்றும் போது, நோயாளியின் பெயர் மற்றும் ரத்த வகை லேபிள் பொருந்துகிறதா என்று ஒருமுறை கேட்டுப் பார்ப்பது நல்லது. இது நோயாளியின் உரிமையும் கூட. இவற்றைத் துல்லியமாகக் கடைப்பிடித்தால், தவறான வகை ரத்தம் ஏற்றப்படும் அபாயம் இருக்காது” என்று மருத்துவர் லட்சுமி மைதிலி கூறினார்.
பட மூலாதாரம், Dr. Lakshmi Mythili
‘ரத்த தானம் சிறந்தது, நெறிமுறைகள் கட்டாயம்’
அரசியல் தலைவர்கள், சினிமா கதாநாயகர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள் அல்லது பிற சந்தர்ப்பங்களில் ரத்த தானம் செய்வதை நாம் பார்க்கிறோம். அங்கு பல தன்னார்வலர்கள் ரத்தம் கொடுக்கிறார்கள். ஆனால், எல்லோர் ரத்தமும் நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல என்பதை உணர வேண்டும் என்று மருத்துவர் லட்சுமி மைதிலி கூறினார்.
ரத்தம் பாதுகாப்பானது என்று உறுதி செய்வதற்கு முன், ரத்தவியல் நிபுணர்கள் சில சோதனைகளைச் செய்கிறார்கள். தொற்று பாதிப்புக்கான வாய்ப்புகள், ஹெபடைடிஸ் பி, சி, மலேரியா, சிபிலிஸ் போன்ற தொற்றும் நோய்கள் உள்ளனவா, அதேபோல் ரத்தக் குழு சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள். அவை அனைத்தும் சரியாக இருந்தால், அந்த ரத்தம் நோயாளிக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
“ரத்த தானம் சிறந்தது. ஆனால், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம்” என்று மருத்துவர் லட்சுமி மைதிலி கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு