16
சிறை எப்பிடி இருக்கும் என்பது எங்கள் அனைவருக்கும் சினிமாக்களிலோ வேறு சிலர் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலோ நாங்கள் தெரிந்திருக்க முடியும். ஆனால் அனுபவித்த ஒருவனுக்கே அந்த வலியும் வேதனையும் முற்றாக உணரமுடியும். இலங்கை சிறைச்சாலை எப்படி இருக்கும் என்பதனை அனுபவித்து அனுபவித்து எழுதியுள்ளார் கட்டுரையாசிரியர் விவேகானந்தனூர் சதீஸ். சிறைக்குள் இருந்து இவ்வாறான தொகுப்பு வெளிவந்தது என்பது பெரும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. சிறைக்குள் நடந்த பல உண்மைச்சம்பவங்கள் எங்களுக்கு தெரிவதுமில்லை தெரியப்படுத்தப்படுவதுமில்லை. உள்ளே என்ன நடக்கிறதென்பது மலைபோல் உயர்ந்த மதில்ச்சுவர்களை தாண்டி வருவதுமில்லை. உள்ளே என்ன நடக்கிறது இதுவரை காலமும் என்ன நடந்தது என்பதை துருவேறும் கைவிலங்கு நூல் ஆதாரபூர்வமாக விளக்குகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் வன்கொடுமைகள் கொலைகள், தற்கொலைகள் எவ்வாறு நிகழ்கிறது அவற்றை சிறை அதிகாரிகள் எவ்வாறு சமாளித்து மூடிமறைக்கின்றார்கள் என்பதை அனுபவத்தின் மூலம் எடுத்து விளக்குகிறார்.
செய்யாத குற்றங்களுக்காக ஒப்புதல் வாக்குமூலங்கள் விசாரணைகளின் வடிவங்கள் அதில் அகப்பட்ட தமிழ் கைதிகளின் நிலைமைகள் அவர்களின் குடும்பங்கள் எவ்வாறான நிலையினை அனுபவித்து வருகின்றனர் என்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவுபடுத்துகிறார் கட்டுரையாளர். கைது செய்யப்பட்டு தாய் தந்தை இறப்பில் கூட கலந்து கொள்ள முடியாத பல தமிழ் கைதிகளின் நிலையும் பல தகாப்தங்களாக அனுபத்து வரும் துன்பங்களின் விளைவாக ஒவ்வொரு கைதியும் தற்கொலைக்கு முற்சிக்கும் முறைகளையும் அருகில் இருந்து பார்த்து இறுகப்பற்றிய வேதனைகளின் அனுபத்தையும் பக்கங்களில் புரட்டிபோட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விஷயங்களில் ஒவ்வொரு அரசியல் தரப்பினரும் எவ்வாறு நழுவிக்கொள்கின்றனர். அவர்களை காரணம் காட்டி பல தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் சுகபோக வாழ்க்கையினை எப்படி பெற்றுக்கொள்கிறார்கள் என்பது துருவேறும் கைவிலங்கு நூல் எமக்கு அவர்களின் இன்னோர் முகங்களை அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கிறது.
வலுவிழந்த நீதிகளும் தமிழ் அரசியல் கைதிகளின் நீதிகளுக்கு காதுகொடுக்காத நீதிமன்றுகளும் இருக்கும் வரையில் கைதிகளின் விடுதலைக்கு கேலிகளும் கேள்விக்குறிகளுமே மிச்சியுள்ளன. சிறைக்குள் இருந்து வெளியில் கொலை கொள்ளைகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் சிங்கள கைதிகளோடு தமிழ் அரசியல் கைதிகளை ஒன்றாக்கி போராட்டங்களை தூண்டிவிடும் சிறை அதிகாரிகளின் குள்ள நரித்தந்திரம் புரியாமல் தவிக்கும் தமிழ் கைதிகளின் அவல நிலையினை கட்டுரையாளர் பிரசவிக்கின்றார்.
சிங்கள கைதிகளையும் தமிழ் கைதிகளையும் வெவ்வேறு விதங்களில் கையாளும் சிறை அதிகாரிகளும் சிறைக்கும் போதைவஸ்து பாவனைகளை கண்டும் காணாததும் போல இருப்பதும் எவ்வாறு போதைவஸ்து உள்நுழைகிறது என்பது கண்டும் காணாமல் இருப்பதையும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் தெளிவாக புரிய வைத்துள்ளார்.
ஈழமக்களின் விடயத்தில் காத்திரமாக செயல்படாமல் ஐநா எவ்வாறு தவறியிருக்கிறது.அவர்களின் பிரச்சனைகளையும் காணாமல் ஆக்கபட்ட உறவுகளின் நீதி கோருவதிலும் ஐநாவின் பங்கு எந்த அளவு முக்கியம் என்பதையும் புரிய வைப்பதில் தவறவில்லை.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு ஒரு பிடி சோறு கூட போட முடியாத பாவியாகிவிட்டேனே என்று புலம்பும் சக கைதிகளின் நெஞ்சுரத்தில் பொதிந்துள்ள ரணங்களை பேனாமையில் தோய்த்துள்ளார். ஆயுள் தண்டனை கைதியாக சிறை சென்று விடுதலையான கட்டுரையாளர் தான் மட்டும் விடுதலை இலக்கை பெற்றிடாமல் சக தோழர்களும் புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் இணைய வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக உள்ளார்.
ஒவ்வொரு வழக்குகளுக்கும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வெளியேற முடியாமல் தவிக்கும் கைதிகள் பலர் உள்ளனர். ஒவ்வொரு கைதிகளும் தங்களின் பொன்னான வாழ்க்கையினை சிறையில் தொலைத்துவிட்டு குடும்பங்கள் நெருக்கடியில் சிதைவதையும் சிறையில் இருந்து வெளிக்கொணர்ந்துள்ளார்.
சிறைகள் எப்படி இருக்கும் கைதிகள் எப்படி இருப்பார்கள் என்பதை நூல் நன்கு புலப்படுத்தி நிற்கிறது. உண்மையில் சிறைச்சாலை எப்படி இருக்கக்கூடாது சிறை அதிகாரிகள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இலங்கை சிறைச்சாலை முன்மாதிரியாக திகழ்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் கூறப்பட்டுள்ள விடயங்கள் நூல் வாசிப்போரை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்கிறது. வயது வித்தியாசம் ஆண் பெண் வித்தியாசமா பாராது அனுபவிக்கும் சிறை இன்னல்களை தெட்டத்தெளிவாக அறியமுடிகிறது.
கேசுதன்