மகாராஷ்டிராவின் நவி மும்பையின் புறநகர் பகுதியான நெருலின் பரபரப்பான சாலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடைத்த ஒரு சிறிய துப்பின் மூலம் இந்த கொலையை செய்தவர் யார் என காவல்துறை தேடிவந்தது.
சடலம் குறித்த தகவலை அறிந்தவுடனேயே அந்த இடத்துக்கு விரைந்த காவல்துறை, கொலையாளி யார் என விசாரிக்கத் தொடங்கியது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படியொரு மோசமான கொலையை செய்தவர், எந்தவொரு ஆதாரத்தையும் அங்கு விட்டு வைக்கவில்லை. எனினும், பல்வேறு கோணங்களில் சில நாட்கள் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, சாலையில் இருந்த ஒரு தெருநாயின் மூலம் கொலையாளியை கண்டுபிடித்தனர்.
என்ன நடந்தது?
நவி மும்பையின் நெருல் பகுதியில் ஏப்ரல் 13, 2024 அன்று காலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
அப்பகுதியில் உள்ள சாலையொன்றில் காலை 6.30-7.00 மணிக்குள் ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்துள்ளார். இந்த தகவல் தெரிந்தவுடனேயே போலீஸார், நெருல் பகுதியின் செக்டார் 10-க்கு சென்றடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்நபரை நெருல் போலீஸார் மருத்துவமனைக்கு அனுமதித்த நிலையில், அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, தன் விசாரணையை ஆரம்பித்தது.
பட மூலாதாரம், Alpesh Karkare
பல்வேறு கோணங்களில் விசாரணை
இதுதொடர்பாக விசாரிக்க இரண்டு அல்லது மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த சம்பவம் நெருல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
துணை காவல் ஆணையர் விவேக் பன்சாரே, உதவி ஆணையர் ராகுல் கெய்க்வாட் ஆகியோரின் தலைமையில், நெருல் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் தனாஜி பகத்தின் வழிகாட்டுதலில் விசாரணை தொடங்கியது.
அந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள தெருக்களில் கடைகளில் இருந்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆராயத் தொடங்கினர். குற்றப் பின்னணி கொண்ட சிலரை காவல் துறையினர் தடுப்புக் காவலில் வைத்தனர்.
விசாரணையில் இறந்த நபர் குப்பைகளை சேகரிப்பவர் என போலீஸார் கண்டறிந்தனர். எனினும், இந்தக் கொலையை செய்தவர் யார், ஏன் செய்தார் என்பதை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நாள் முழுக்க ஒரு போலீஸ் குழு சிசிடிவி பதிவுகள் முழுவதையும் ஆராய்ந்தது. மற்றொரு குழு, சம்பவ இடத்தில் இருந்த பலரிடம் விசாரணை நடத்திவந்தது. எனினும், இரண்டு நாட்கள் கழித்தும் உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
நீடித்த சிக்கல்
சிசிடிவி பதிவுகள், சந்தேக நபர்கள், ஊடக செய்திகள் என பலவற்றை ஆராய்ந்தும் இறந்த நபர் குறித்தோ, கொலையாளி குறித்தோ மேலதிக தகவல்கள் கிடைக்காமல் விசாரணையில் பல சிரமங்கள் ஏற்பட்டன.
ஆரம்பகட்ட விசாரணையில் இறந்த நபர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்ததாக தெரியவந்தது. எனினும், இறந்த நபரின் பாக்கெட்டுகளில் எதுவும் இல்லை என்பதால், அவர் யார் என்பதை விசாரணையில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியில் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது, உதவி காவல் ஆய்வாளர் சச்சின் தாகேவும் அவருடைய குழுவும் சிசிடிவி பதிவு ஒன்றில் இறந்த நபரை அடையாளம் கண்டனர். அதில், இரு நபர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது தெரியவந்தது.
கழிவறை இருக்கும் பகுதிக்கு அருகில் இரு நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிசிடிவி பதிவில் தெரியவந்தது. அதன்பின், சிசிடிவி பதிவில் எதுவும் தெரியவில்லை. இதனால், விசாரணையில் பல சிரமங்கள் ஏற்பட்டன.
மேற்கொண்டு விசாரித்தபோது, உதவி காவல் ஆய்வாளர் சச்சின் தாகே, சம்பவம் நடந்த இடத்துக்கு சிறிது தொலைவில் ஒருவர் இருந்ததை சிசிடிவி பதிவில் கண்டறிந்தார். எனினும், முகம் தெளிவாக தெரியாததால், விசாரணையில் சிக்கல்கள் தொடர்ந்தன.
இறுதியாக, தாகேவும் அவருடைய சகாக்களும் சந்தேகத்துக்கிடமான நபருடன் வெள்ளைக் கோடுகள் கொண்ட கருப்பு நாய் ஒன்று இருந்ததை சிசிடிவி பதிவுகளில் கண்டனர்.
இன்னும் சில சிசிடிவி பதிவுகளிலும் அந்நபருடன் அந்த நாய் இருந்தது தெரியவந்தது. எனினும், அந்த நாய் மற்றவர்களை பார்க்கும்போது குரைப்பதையும், அந்த நபரிடம் மட்டும் குரைக்காமல் இருப்பதும் சிசிடிவியில் இருந்தது. அந்த நபரிடம் மட்டும் தெரு நாய் குரைக்காமல் இருப்பது ஏன் என போலீஸார் ஆச்சரியப்பட்டனர்.
அந்நபருக்கும் அந்த நாய்க்கும் இடையே ஏதோவொரு தொடர்பு இருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர். எனவே, அந்த நாயை கண்டுபிடிக்க போலீஸார் முயற்சித்தனர்.
நாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிக்கிய கொலையாளி
நெருலில் உள்ள ஷிர்வானே பகுதியில் போலீஸார் அந்த நாயை கண்டுபிடித்தனர்.
அப்பகுதியின் நடைபாதையில் ஒருவருடன் அந்த நாய் இருந்தது. சிசிடிவி பதிவுகளில் பார்த்த நாயைப் போன்றே அச்சு அசலாக அந்த நாய் இருந்தது.
அந்த நாய் குறித்து அப்பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்தபோது, வழக்கமாக புர்யா என்பவருடன் அந்த நாய் இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கினர்.
ஒருநாள் புர்யா எனும் நபர், நடை மேம்பாலத்தில் உறங்கிக் கொண்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்நபரை காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரித்தனர். அந்நபர் என்ன நடந்தது என்ன என்று போலீஸாரிடம் கூற ஆரம்பித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கொலைக்கு என்ன காரணம்?
போலீஸாரின் கூற்றுப்படி, இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் புர்யா என்கிற மனோஜ் பிரஜாபதி (20). சில கடைகளில் அவர் கிளீனராக வேலை செய்துவந்தார். கொலையான 45 வயது நபர், மனோஜ் பிரஜாபதியை சில சமயங்களில் அடித்து, அவர் உறங்கும்போது பாக்கெட்டில் இருந்து பணத்தைத் திருடிச் சென்றுவிடுவார் என்பதால் அவரை கொலை செய்ததாக மனோஜ் கூறியுள்ளார்.
ஏப்ரல் 13 அன்று இரவு, கொலையான நபருக்கும் மனோஜுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது.
மனோஜ் பிரஜாபதி கோபமடைந்து, அந்நபரை அங்கிருந்த தடியால் தலையில் தாக்கியுள்ளார், இதனால் அந்நபரின் தலையிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது.
கொலை எப்படி நிகழ்ந்தது என நடந்த எல்லாவற்றையும் மனோஜ் ஒப்புக்கொண்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனோஜை பார்த்து நாய் குரைக்காதது ஏன்?
அந்த தெரு நாய்க்கு தினமும் உணவளிப்பதால், தன்னைப் பார்த்து குரைக்காது என மனோஜ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
“எனக்கு அந்த நாயை மிகவும் பிடிக்கும். எனவே, அது மற்றவர்களை பார்த்து குரைக்கும், ஆனால் என்னை பார்த்து குரைக்காது. என்னுடன்தான் அந்த நாய் இருக்கும்” என மனோஜ் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
விசாரணைக்கு உதவிய தெருநாய்
பிபிசி மராத்தியிடம் பேசிய அப்போதைய உதவி காவல் ஆய்வாளர் சச்சின் தாகே, “இந்த வழக்கை விசாரித்தபோது பல சிக்கல்கள் இருந்தன. சந்தேகத்தின் அடிப்படையில்தான் அந்த நபரை நாங்கள் கண்டுபிடித்தோம்” என தெரிவித்தார்.
“காவல்துறையினர், அதிகாரிகளின் அனுபவம் இந்த வழக்கில் எங்களுக்கு உதவியாக இருந்தது. சிசிடிவி பதிவுகள், போலீஸாருக்கு தகவல் அளிப்பவர்கள், சந்தேக நபர்கள் மூலம்தான் நாங்கள் அந்த நபரை கண்டுபிடித்தோம். இந்த வழக்கில் முக்கியமான துப்பாக அந்த நாய்தான் இருந்தது” என்றார்.
இதையடுத்து, மனோஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.
போலீஸ் விசாரணையில் அந்நபர் மும்பை மற்றும் நவி மும்பைக்கு வேலைக்காக புலம்பெயர்ந்த ஒருவர் என்பது தெரியவந்தது.