2
போன் வந்த வண்ணமாய் இருந்தது. ‘சே! ஒருத்தர் இறந்துடக்கூடாதே?! துக்கம் விசாரிக்கறேங்கற பேர்ல போன் பேசியே கொன்னுடுவாங்க்களே?!’ நொந்தபடியே போன் எடுத்து ‘ஹாலோ’ என்றான் அயர்வாக.
‘என்ன பெரிசா சொல்லப்போறானுக ?! ரொம்ப சாரி! கேள்விப்பட்டேன் அந்த இழப்பு ஈடு செய்ய முடியாத ஒண்ணுதான். பிறந்தவங்க எல்லாரும் ஒருநாள் போய்த்தானே ஆகணும்?! மனசு தளரவிடாம, குடு பத்துக்கு ஆதரவா நில்லுங்க!’ இப்படி சம்பிரதாய வார்த்தியகளால் வலிக்கு நிவாரணம் தருவதாக வழிவார்கள்! வேறு என்ன பெரிசாய் சொல்லப்போறாங்க?!
‘அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்!’பாங்க.
சிலர், ‘கேள்விப் பட்ட உடனேயே வரணும்னு நெனைச்சேன்.. ஆனா பாருங்க, வெளியூர் போய்ட்டேன்!. அதனால வரமுடியலை. தப்பா நெனைச்சுக்காதீங்க’ன்னு சிலர். இன்னும் சிலர்.. ‘சாகாத யாரோ ஒருத்தரைச் சாகடிச்சு, அவர் எழவுக்குப் போயிட்டதால வரமுடியலை! என்பார். இதுதான் எல்லாச் சாவுலயும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன விஷயமாசே?
இன்னும் இவன் சொல்லப் போறான்னு பார்ப்போம்னு தாயைப் பறி கொடுத்த தயாநிதி போனில் சுரத்தில்லாமல் ‘ஹலோ…! சொல்லுங்க!’ என்றான் அஸ்தி கரைத்துவந்த அசதியில்..
பேசியவர் தன்னை இன்னார் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு சொன்னார்… ‘தாயை இழந்த இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்னுதான் ஆனால், என்னால் சம்பிரதாயமாக வருத்தம் சொல்ல முடியலை! ஒருவார்த்தை, ஒரே ஒரு வார்த்தை சொல்றேன்!. ‘யாரை இழந்தால் நீ அவளைத் திரும்பப் பெற முடியாதோ அவளுக்குப் பெயர்தான் தாய்!’. நானும், என்னம்மாவை அவரின் நொன்னூற்றைந்தாவது வயதில்தான் இழந்தேன். இன்னைக்கு வரைக்கும் அவர் இருந்த இடத்த இடத்தை நிரப்ப மாற்று இல்லாமல் மறுகுகிறேன்!’ என்றார்.
அவர் சொன்ன ஆயிரம் வார்த்தைகளில் ‘யாரை இழந்தால் உன்னால் திரும்பப் பெற முடியாதோ அவளுக்குப் பேர்தான் தாய்!’ என்ற அந்த ஒருவார்த்தை தயாநிதியின் இதயத்துக்குள் ஈரமாய் இறங்கி அம்மா இறந்த இரக்கத்தை உண்மையாய் உணர வைத்து, உயிரை உலுக்கி உயிர்பித்தது.
– வளர்கவி
நன்றி : சிறுகதைகள்.காம்