பட மூலாதாரம், Getty Images
பண்டைய மாயன்களின் கால அளவீடு வியப்பை ஏற்படுத்துவதாக இருந்துள்ளது.
பூஜ்ஜியத்தின் கருத்தாக்கம் உள்பட கணித அறிவு மற்றும் வானியலில் அவர்கள் பெரும் தேர்ச்சியைப் பெற்றிருந்தனர். இந்த ஞானம், அக்காலத்திய ஐரோப்பிய, கிழக்கத்திய கலாசாரங்களைவிட மிகவும் துல்லியமான காலக் கணக்கீட்டை மேற்கொள்ள அவர்களுக்கு உதவியது.
பண்டைய மெக்சிகன் வரலாறு குறித்துப் பேசும்போது அதிகம் மேற்கோள் காட்டப்படும் கல்வியாளர்களில் ஒருவர் பேராசிரியர் மிகுவல் லியோன் போர்ட்டிலா (1926-2019). அவர், மாயன்கள் ‘பிரபஞ்சத்தின் மர்மங்களைத் தெரிந்து கொள்வதில், அதன் சுழற்சிகளின் அர்த்தத்தையும் அளவையும் குறிப்பிடுவதில்” மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர் என்று விளக்கினார்.
“காலத்தைப் புரிந்துகொள்ள வேறு எந்த பண்டைய நாகரிகமும் இத்தனை விதமான நாட்காட்டிகளை, கணித அமைப்புகளை உருவாக்கவில்லை. மாயன் மக்கள் முடிந்தவரை காலத்தை துல்லியமாக அளவிடுவதற்காக, அதன் தொடர்ச்சியான சுழற்சிகளைப் பல கோணங்களில் ஆய்வு செய்ய மிகவும் கடினமாக உழைத்தார்கள்” என்று மெக்சிகோவின் தேசிய தன்னாட்சிப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த போர்ட்டிலா, ‘மாயன்களின் காலவரிசை முயற்சிகள்’ என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.
இந்த நாட்காட்டி, ஓர் ஆட்சியாளரின் பிறப்பு அல்லது இறப்பு, ஒரு போர் அல்லது ஒரு நகரம் சரணடைதல் போன்ற தங்கள் வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்ய அவர்களுக்கு உதவியதோடு, விவசாய சுழற்சிகள், சந்திரனின் நிலைகள் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் உதவியது. பூமி குறித்தான அவர்களுடைய கண்ணோட்டத்தின்படி, ஒரு நாளின் அல்லது ஒரு நபரின் ஆற்றல் மீதான அவர்களின் நம்பிக்கையிலும் இது தாக்கம் செலுத்தியது.
மாயன் நாகரிகம் கி.மு.2000க்கு முன்னர், இப்போதுள்ள தென்கிழக்கு மெக்சிகோ, குவாதமாலா, பெலிஸ், மேற்கு ஹோண்டூராஸ், எல் சால்வடார் ஆகிய பகுதிகளில் தோன்றியது. பண்டைய பேரரசு சரிந்த போதிலும், இந்த நாடுகளில் இன்றும் மாயன் சமூகங்கள் வாழ்கின்றன.
“என் மூதாதையர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் காலத்தை ஆய்வு செய்வதில் செலவிட்டனர். ஏனெனில், எப்போது என்ன நடந்தது என்பதை அவர்கள் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. மாயன் நாட்காட்டி ஒரு விநாடி வரைகூட துல்லியமானதாக இருந்தது என்று நான் என் மாணவர்களிடம் கூறுகிறேன்,” என்று குவாதமாலாவை சேர்ந்த மாயன் நாட்காட்டி குறித்த ஆசிரியரும் நிபுணருமான பேராசிரியர் ஜூலியோ டேவிட் மென்சூ விளக்குகிறார்.
குவாதமாலா, தென்கிழக்கு மெக்சிகோ உள்படப் பல மாயன் சமூகங்களில், இந்த நாட்காட்டி இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. இது அவர்களின் அன்றாட கலாசாரம் மற்றும் ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
மாயன்களின் மூன்று முக்கிய நாட்காட்டிகள்
கி.மு.2000 முதல் 17ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பரவியிருந்த கலாசாரத்தைக் கொண்ட பண்டைய மாயன்கள் நாட்கள், மாதங்கள், ஆண்டுகளைக் கணக்கிட பல்வேறு அமைப்புகளைப் பயன்படுத்தினர். ஆனால் அவற்றில் இருந்த மூன்று முக்கிய அமைப்புகள் இன்றும் அறியப்படுகின்றன.
1. ஸோல்கன் நாட்காட்டி அல்லது சடங்கு நாட்காட்டி
ஸோல்கின் நாட்காட்டி (Tzolk’in calendar) அல்லது “சடங்கு நாட்காட்டி”, 260 சூரிய நாட்களைக் கணக்கிடுகிறது. ஒவ்வொரு தேதியும் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. அதாவது, ஒரு நாள் எண் (1-13) மற்றும் குறியீட்டால் குறிக்கப்படும் நாளின் பெயர் (1-20). உதாரணமாக, டிசம்பர் 12, 2025 என்பது 11 கவாக் (எண்+குறியீடு) ஆகும்.
மாயன் நாட்காட்டி குறித்த முன்னணி வல்லுநர்களான ஜோசப் குட்மேன், ஜூவான் மார்டினெஸ், எரிக் தாம்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஜி.எம்.டி அமைப்பின்படி, ஒரு புத்தாண்டுக்கு ஒப்பான அடுத்த முக்கிய நாட்காட்டி மறுசீரமைப்பு, 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி நிகழும்.
இந்தக் கலவைகள், நாம் வார நாட்களுக்குப் பெயரிடும் விதத்தை (திங்கள், செவ்வாய், புதன்…) ஒத்து இருக்கலாம். ஆனால் மாயன் கலாசாரத்தில் அவற்றுக்கு ஒரு பரந்த அர்த்தம் உண்டு. ஏனெனில் அவை அவர்களுடைய ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மாயன்களின் உலகளாவிய கண்ணோட்டத்தில், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட “ஆற்றல்” அல்லது “நஹுவல்” உடன் தொடர்புடையது. இது மாயன் சமூகங்களின் அன்றாட வாழ்க்கைக்கான ஒரு வழிகாட்டியாகச் செயல்படுகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை அறிந்துகொள்வது அல்லது ஒரு குறிப்பிட்ட நாளில் பிறந்த குழந்தையின் குணாதிசயத்தை அறிந்துகொள்வது போன்றவற்றுடன் தொடர்புடையது.
இது பண்டைய மாயன்களின் முக்கியமான பொருளாதார அடித்தளங்களில் ஒன்றான விவசாய நடவடிக்கைகளுடனும் தொடர்புடையது. இந்த 260 நாள் கணக்கீடு, உண்மையில், ஓல்மெக், டோல்டெக், தியோதிஹுக்கன், மெக்சிகா உள்படப் பிற மீசோ அமெரிக்கன் கலாசாரங்களாலும் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், ஒரு சூரிய ஆண்டில், அந்த ஆற்றலைத் தீர்மானிக்க, இரண்டாவது அமைப்புடனான ஓர் இணைப்பை உருவாக்குவது அவர்களுக்கு அவசியமாக இருந்தது.
பட மூலாதாரம், Getty/BBC
2. ஹாஅப் நாட்காட்டி
இந்த இரண்டாவது அமைப்பு, ஹாஅப் அல்லது ‘சூரிய நாட்காட்டி’ எனப்படுகிறது. இது 365 நாட்களைக் கொண்டது. இந்த நாட்கள் ஒவ்வொன்றும் 18 நாட்களைக் கொண்ட 20 மாதங்களாகவும், கூடுதலாக ஒரு சிறப்பு 5 நாள் காலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஸோல்கின் நாட்காட்டியை போலவே, ஒரு தேதி என்பது நாளின் எண்ணுடைய மாதத்தின் பெயரையும் சேர்த்து வாசிக்கப்படுகிறது.
கிரிகோரியன் நாட்காட்டி போலன்றி, மாயன்கள் ஒரு சுழற்சியின் முடிவை அடுத்த சுழற்சியின் தொடக்கமாகக் கருதினர். எனவே ஹாஅப் நாட்காட்டியில் மாதங்கள் முந்தைய மாதத்தின் கடைசி நாளில் தொடங்கின.
“நாட்காட்டி சக்கரம்” எனப்படும் ஒரு முறையின் மூலம் ஸோல்கின் நாட்காட்டியை ஹாஅப் நாட்காட்டியுடன் இணைக்க முடியும். இது ஸோல்கின் நாட்காட்டியின் நாள் எண் மற்றும் குறியீடு, அத்துடன் ஹாஅப் நாட்காட்டியின் நாள் எண் மற்றும் மாதத்தின் பெயர் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
மாயன் கலாசாரத்தில், சடங்கு நாட்காட்டியையும் (ஸோல்கின்) சூரிய நாட்காட்டியையும் (ஹாஅப்) இணைத்து வாசிப்பது, ஆன்மீக சடங்குகள், விவசாய நடவடிக்கைகள் அல்லது குடிமை மற்றும் அரசியல் விழாக்களை மேற்கொள்வதற்கான சரியான நேரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியமாக இருந்தது.
ஒரு முழுமையான சுழற்சி என்பது மொத்தமாக 18,980 நாட்கள், அதாவது 52 ஆண்டுகளாகும். மாயன்களுக்கும் மீசோ அமெரிக்க கலாசாரங்களுக்கும், இந்த சுழற்சி ஒரு சகாப்தத்தின் அல்லது ஒரு காலத்தின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கிறது. இது ஒரு நூற்றாண்டு முடிவதைப் போன்றது. மேலும் 52 வயதை எட்டிய ஒருவர் ஞானமுள்ளவராகக் கருதப்பட்டார். அதோடு அது மறுபிறப்பையும் குறித்தது.
இந்த நாட்காட்டி இணைப்பு மூன்றாவது அமைப்புக்கும் வித்திட்டது.
பட மூலாதாரம், Getty Images
3. நீண்ட கணக்கீட்டு நாட்காட்டி
மூன்றாவது நாட்காட்டி “நீண்ட கணக்கீடு” எனப்படுகிறது. அதன் பெயரைப் போலவே, இது மாயன் இனத்தினர் பல நூற்றாண்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரையிலான காலத்தைத் தீர்மானிக்க உதவியது.
இந்த நாட்காட்டி அமைப்பில், மிகச் சிறிய அலகு ‘கின்’ அல்லது ஒரு நாள். ‘யுனால்’ என்பது ஒரு மாதம், இது 20 ‘கின்களை’ கொண்டது. ‘டன்’ என்பது 18 ‘யுனால்களை’ கொண்ட ஒரு வருடம். ‘கட்டூன்’ என்பது 20 ‘டன்கள்’, ‘பாக்டூன்’ என்பது 20 ‘கட்டூன்கள்’…
உதாரணமாக, ஜனவரி 1, 2000 என்ற தேதி, மாயன்களின் நீண்ட கணக்கீட்டு நாட்காட்டியில் 12 பாக்டூன், 19 கட்டூன், 6 டன், 15 யுனால், 2 கின் என்று இருந்தது. நவீன கணக்கீடுகளில் தேதிகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், மாயன் மக்கள் இந்தத் தேதிகளை, கல்லில் பொறித்து நிலைநிறுத்திய குறியீடுகளால் வெளிப்படுத்தினர்.
அன்றாட வாழ்வில், நீண்ட கணக்கீட்டு நாட்காட்டி, நாட்களைக் கணக்கிடப் பயன்படுத்தப்படவில்லை. ஆட்சியாளர்களின் மரணம், அவர்களின் வாரிசுகளின் பிறப்பு, ஒரு நகரம் சரணடைதல் அல்லது போர்க்களத்தில் பெற்ற வெற்றிகள் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்ய இதை அவர்கள் பயன்படுத்தினர்.
அவர்களின் கலாசாரத்திற்கான முக்கியமான சுழற்சி மாற்றங்கள் எப்போது நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்கவும் இது அவர்களை அனுமதித்தது. இப்படித்தான் புகழ்பெற்ற “13வது பாக்டூன்” நாளான டிசம்பர் 21, 2012 உருவானது.
அந்தத் தேதிக்குச் சற்று முன்பு, மாயன் இனத்தினர் மனித குலத்தின் முடிவைக் கணித்துவிட்டனர் என்ற தவறான எண்ணத்தால், அந்த நாளின் வருகைக்காக உலகெங்கிலும் ஓர் எதிர்பார்ப்பு நிலவியது. உண்மையில், அவர்கள் ஒரு சுழற்சியின் முடிவையும் ஒரு புதிய சுழற்சியின் தொடக்கத்தையும் மட்டுமே குறித்து வைத்திருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஜூலியன் நாட்காட்டி, பின்னர் கிரிகோரியன் நாட்காட்டி ஆகியவை இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் இருந்து தொடங்கியதைப் போலவே, பண்டைய மாயன் மக்களுக்கு காலத்தின் தொடக்கமானது கி.மு.3114 ஆகஸ்ட் 11க்கு சமமான ஒரு தேதியால் குறிக்கப்பட்டது.
அந்தத் தேதியானது கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது மர்மமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அந்த நேரத்தில் மாயன் நாகரிகம் என்ற ஒன்று இருந்திருக்கவில்லை.
இந்தத் தேதி ஒரு வரம்பு இல்லை என்று லியோ போர்ட்டில்லா எழுதியுள்ளார். உண்மையில், மாயன் மக்களால் எல்லையற்ற காலம் வரை பின்னோக்கி எண்ண முடியும். அவரது கருத்தின்படி, இந்தத் தேதியானது, “குறிப்பாக ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை” அல்லது “உலகின் கடைசி படைப்பை” குறித்தது.
மேம்பட்ட நாகரிகம்
மெக்சிகோவின் தேசிய தன்னாட்சிப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரைப் பொறுத்தவரை, மாயன்கள் தங்கள் சிறந்த கணித, வானியல் அறிவுக்கு நன்றி செலுத்தும் வகையில், காலப்போக்கு பற்றிய மிகவும் துல்லியமான ஆய்வைச் செய்திருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது.
ஹாஅப் போன்ற 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டி காலப்போக்கில் சீரற்றதாகிவிடும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே 16ஆம் நூற்றாண்டில் கிரிகோரியன் நாட்காட்டியில் செயல்படுத்தப்பட்ட மிகுநாள் (Leap Days) என்ற அணுகுமுறைக்குச் சமமான ஓர் அமைப்பை, அதாவது 52 ஆண்டுகள் காலப்பகுதியில் நாட்களைக் கழிக்கும் ஓர் அமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
பண்டைய மாயன்கள் ஒரு வெப்பமண்டல ஆண்டு 365.2420 நாட்கள் நீடிக்கும் என்று கணக்கிட்டனர். அதேநேரம் கிரிகோரியன் நாட்காட்டி அதை 365.2425 என்று குறிப்பிட்டது. தற்போதைய அறிவியல், அது 365.2422 நாட்கள் என்று கூறுகிறது. இதன்மூலம், மாயன் நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டியைவிட மிகவும் துல்லியமானது என்பதை அறிய முடிகிறது.
“மாயன் மக்கள் தங்களது கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி நேரத்தைத் துல்லியமாக அளவிடுவதற்கு மிகவும் விரிவான வழிமுறைகளை உருவாக்கினர். அவர்கள் ஆண்டின் நீளம், வெள்ளிக் கோளின் இயக்கம் மற்றும் சந்திரனின் நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டனர். அத்துடன், கிரகணங்களைக் கணிக்க உதவும் அட்டவணைகளை உருவாக்கவும் அது அவர்களுக்கு உதவியது,” என்று லியோன் போர்ட்டில்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவர்களின் கணித அறிவு, அவர்கள் ‘நீண்ட கணக்கீடு’ அல்லது ‘ஆரம்பத் தொடர்’ என்று அழைக்கப்பட்ட நாட்காட்டி அமைப்பில் எந்தவொரு தேதியையும் பதிவு செய்வதற்கும், மிக முக்கியமாக, அவர்களின் நாட்காட்டியின்படி வெளிப்படுத்தப்பட்ட தேதிகளை வெவ்வேறு வானியல் சுழற்சிகளுடன் சரிசெய்து தொடர்புபடுத்துவதற்கான தொடர்புடைய திருத்த சூத்திரங்களை உருவாக்குவதையும் சாத்தியமாக்கியது.”
சுழற்சிகளின் தொடக்கப் புள்ளிகளைக் குறிக்கவும், வானியல் கணிப்புகளுக்கும், அவர்கள் பயன்படுத்திய வெள்ளிக் கோளின் சுழற்சியை, மாயன்கள் 584 நாட்கள் என்று கணக்கிட்டனர். இதில் ஒவ்வொரு 481 ஆண்டுகளுக்கும், 0.08 நாட்கள் பிழை இருந்தது. அவர்களால் 33 ஆண்டுகள் காலப் பகுதியில் 69 கிரகணங்களைக் கணிக்க முடிந்தது.
பட மூலாதாரம், Getty Images
‘பண்டைய மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட ஞானம்’
பேராசிரியர் ஜூலியோ டேவிட் மென்சூ விளக்குவது போல, மாயன்களுடைய ஸோல்கின் நாட்காட்டியின் (கிச்சே மாயன் மொழியில் சோல்கிஜ்) பயன்பாடு, அது தோன்றிய பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இன்றும் பல மாயன் சமூகங்களின் வாழ்க்கையில் நீடித்து வருகிறது.
குவாதமாலாவில் இதன் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது. அதோடு இது அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் ஓர் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்கிறது.
“எங்கள் அன்றாட வாழ்வில், மாயன் நாட்காட்டி எங்களுக்கு ஒரு திசைகாட்டியைப் போன்றது. என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குச் சொல்லும் ஒரு வழிகாட்டி. இன்று (நவம்பர் 21, 2025) 2 கின், ஒளி, ஞானம், புத்திசாலித்தனத்தைக் கேட்டு நான் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றப் போகிறேன்,” என்று கூறுகிறார் அவர்.
“சில குறிப்பிட்ட நாட்களுக்காகக் காத்திருக்கிறோம். அந்த நாளின் ஆற்றல் அல்லது சக்தி, அதாவது நஹுவல், சிக்கல்களைத் தீர்க்கவும், முன்னேறவும் எங்களுக்கு உதவும்.”
குவாதமாலாவின் அரசுகளால் மாயன் கலாசாரம் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு இருந்தாலும், நாட்டின் பழங்குடி மக்களை அங்கீகரித்த 1990களின் அமைதி ஒப்பந்தங்களுக்குப் பிறகு, இந்த நாட்காட்டி பழங்குடி சமூகங்கள் மத்தியில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

“கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 20-21 இரவு எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் மூன்று சடங்குகளை நடத்தினோம். எங்களில் பலர் நெருப்பின் முன்பாக அழுதோம். அந்தச் சுழற்சியின் இந்த 400 ஆண்டுகளில் (கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்ததை உள்ளடக்கிய 12வது பாக்டூன்) எங்கள் மூதாதையர்கள் துன்பப்பட்டனர் என்றும் 13வது பாக்டூன் எங்களுக்கு நம்பிக்கையைத் தருவதாகவும் நாங்கள் கூறினோம்,” என்று மென்சூ விவரிக்கிறார்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய மாயன்கள் செய்ததைப் போலவே, குவாதமாலா நகருக்கு அருகிலுள்ள இக்சிம்சே தொல்பொருள் தளத்தில், காக்கிச்செல் மக்களின் வரலாறு குறியீடுகளால் செதுக்கப்பட்ட ஒரு கல் தூண் மூலம் இந்தச் சுழற்சி மாற்றம் கொண்டாடப்பட்டது.
மென்சூவை பொறுத்தவரை, “மாயன் நாட்காட்டி என்பது தங்கள் இருப்பின் மகத்துவத்தைத் தீர்மானிக்க முயன்ற பண்டைய மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட ஞானம்.”
“அது, காலத்திலும் வெளியிலும் நம்மை நிலைநிறுத்திக் கொள்வது பற்றிய தத்துவார்த்த கண்ணோட்டம், அதாவது சூரியன், நட்சத்திரங்கள், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades), வெள்ளிக் கோள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பூமி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது, இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ள எனக்கு உதவுகிறது.”
“ஒன்று, நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக இல்லை, பூமி என்பது முழுமையான பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு பகுதி. இரண்டாவது, பூமி அதன் வெளியில் இருந்த தருணத்தின் ஒரு புள்ளியில் நான் பிறந்தேன். மேலும், அந்த நாள் தாவரங்களை நடுவதற்கும், காரியங்களைச் செய்வதற்குமான ஒரு சுபநாளாக இருந்தது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு