பட மூலாதாரம், Getty Images
நவராத்திரி பண்டிகைகள் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
முன்னதாக, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1.16 லட்சத்தை எட்டியிருந்த நிலையில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.35 லட்சத்தை எட்டியிருந்தது. ஒரே நாளில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.3,500 அதிகரித்துள்ளது.
கடந்த நவராத்திரியில், 10 கிராமுக்கு ரூ.78,200 என்று வர்த்தகமான தங்கத்தின் விலை, இந்த வருடம் ரூ.1.16 லட்சத்தைத் தாண்டியது. அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏன் இவ்வளவு ஏற்றம்? இந்த ஏற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும்? எதிர்காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை இரண்டு லட்ச ரூபாயைக் கூட தாண்டுமா? இக்கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பங்குச் சந்தையுடனான ஒப்பீடு
பட மூலாதாரம், BSE
கடந்த ஒரு வருடத்தில், பங்குச் சந்தை லாபம் ஈட்டுவதற்குப் பதிலாக நஷ்டத்தையே அளித்துள்ளது, அதே நேரத்தில் தங்கத்தின் விலை 48 சதவிகிதமும், வெள்ளியின் விலை 45 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 23, 2024 அன்று, சென்செக்ஸ் 84900 புள்ளிகளுக்கு மேல் இருந்தது, இது தற்போது 81000 முதல் 81500 என்ற அளவில் உள்ளது. அதாவது, ஒரு வருடத்தில் சென்செக்ஸ் மூன்று சதவிகிதம் சரிந்துள்ளது. நிஃப்டியும் ஒரு சதவிகிதம் சரிந்துள்ளது.
தங்கம்- வெள்ளி விலையில் இந்த ஏற்றத்துக்கான காரணம் குறித்து ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த நிபுணர் சௌமில் காந்தி பிபிசி குஜராத்தியிடம் பேசினார்.
“தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றத்துக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம்: உலகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப்-களில் (ETF) மிக அதிகமாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்துக்கான தேவை அதிகரித்து வரும் அதே வேளையில் தொழில்துறையில் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது.”
“இரண்டாவது காரணம்: இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அமைப்பு மேலும் இரண்டு வட்டி விகிதக் குறைப்புகளைச் செய்யக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் கடந்த ஃபெட் ரிசர்வ் கூட்டத்தில் தென்பட்டன. எனவே, அமெரிக்க டாலர் குறியீடு மற்றும் அமெரிக்க கருவூல வருவாய் குறையக்கூடும், இது தங்கம் மற்றும் வெள்ளிக்கு பயனளிக்கும்.”
தொடர்ந்து மூன்றாவது காரணத்தைக் கூறிய சௌமில் காந்தி, “ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் விரைவில் முடிவடையும் என்ற பிம்பம் சில நாட்களுக்கு முன் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே, புவிசார் அரசியலின் நிச்சயமற்ற தன்மை காரணமாக, பாதுகாப்பான புகலிடமாக தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது” என்றார்.
யுக்ரேனின் ஒரு பகுதியை ரஷ்யா கைப்பற்றியதாகக் கூறியதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திங்களன்று, சர்வதேச சந்தையில் ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு சதவிகிதம் உயர்ந்தது.
“வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்க்கப்படுவதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. இந்த விலையில் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. இந்த விலை உள்ளபோதிலும், இன்னும் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் சிறு முதலீட்டாளர்கள் வாங்குகின்றனர்,” என்று ஆமதாபாத்தைச் சேர்ந்த தங்க வர்த்தகர் ஹேமந்த் சோக்ஸி பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.
இந்த ஏற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும்?
பட மூலாதாரம், Saumil Gandhi
தங்கம் மற்றும் வெள்ளியில் ஏற்படும் இந்த உயர்வு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சௌமில் காந்தி கூறுகையில், “தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, பெரிய அளவில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படவில்லை. எதிர்காலத்தில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.” என்றார்.
ஆனால், “தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தற்போது தங்கத்தை வாங்கி வருகின்றன. அவை தங்கத்தை விற்கத் தொடங்கும் போதுதான் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது” என்று ஹேமந்த் சோக்ஸி நம்புகிறார்.
அமெரிக்க ஃபெடரல் வங்கி அடுத்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டு முறை வட்டி விகிதங்களை 0.25 சதவிகிதம் குறைக்க வாய்ப்புள்ளது.
தங்கத்தின் தேவையைக் கண்காணிக்கும் மெட்டல்ஸ் ஃபோகஸின் கூற்றுப்படி, 2016ஆம் ஆண்டில், 53 சதவிகித தங்கம் நகைகளுக்காகவும், 28 சதவிகித தங்கம் முதலீட்டுக்காகவும், மீதமுள்ள தங்கம் மத்திய வங்கிகள் மற்றும் தொழில்துறை தேவைக்காகவும் வாங்கப்பட்டது.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது நகைகள் தயாரிப்பதற்காக 40 சதவிகித தங்கம் மட்டுமே வாங்கப்படுகிறது. 29 சதவிகித தங்கம் முதலீட்டுக்காக வாங்கப்படுகிறது, அதே நேரத்தில் 24 சதவிகித தங்கம் மத்திய வங்கிகளால் வாங்கப்படுகிறது. மீதமுள்ள ஏழு சதவிகித தங்கம் தொழில்துறை தேவைக்காக வாங்கப்படுகிறது.
தங்கத்தின் விலை இரண்டு லட்சத்தைத் தாண்டுமா?
பட மூலாதாரம், Getty Images
ஒரு அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவின் தங்க இடிஎஃப்-களில் 32.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலகளவில், 2025ஆம் ஆண்டில் இதுவரை 57.1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகை தங்க இடிஎஃப்-களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் தங்க இடிஎஃப்-களில் தற்போது 445 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது, இதில் பாதி அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள நிதிகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இடிஎஃப்-களில் இத்தகைய அதிக முதலீடு விலையை உயர்த்துகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை ஓரிரு ஆண்டுகளில் இரண்டு லட்சத்தைத் தாண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சௌமில் காந்தி, “அதை இப்போதே ஊகிக்க முடியாது. ஆனால் தங்கத்தின் விலை இப்போது இருப்பதை விட இன்னும் சற்று உயரலாம்” என்று கூறுகிறார்.
“வெள்ளிக்கான தொழில்துறை தேவை வலுவாக உள்ளது, மேலும் இடிஎஃப்-கள் மூலம் வாங்குவதும் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்ந்த அளவுக்கு வெள்ளியின் விலை உயரவில்லை. எனவே, வெள்ளியின் விலை உயர வாய்ப்புண்டு” என்று அவர் கூறினார்.
“இன்றும் கூட, தங்கம் தொடர்ந்து உயரும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதனால்தான் மக்கள் அதை (முதலீடு) விற்று லாபத்தை எடுக்க முன்வருவதில்லை” என்று ஹேமந்த் சோக்ஸி கூறினார்.
“நகைகளாக தங்கம் வாங்கியவர்கள் அதை விற்பனை செய்வதில்லை. ஆனால், வீடு வாங்க விரும்புபவர்கள் அல்லது வேறு ஏதேனும் பணத் தேவை இருப்பவர்கள் தங்கத்தை விற்கலாம்” என்று அவர் கூறுகிறார்.
விலை உயர்ந்தாலும் மக்கள் தங்கம் வாங்குகிறார்களா?
பட மூலாதாரம், Getty Images
“ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகு மக்கள் கையில் சேமிப்பு இருந்தால், அவர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என சௌமில் காந்தி கூறுகிறார்.
“தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ளது, இது தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஆனால் தங்கத்தின் விலை மிக அதிகமாக இருப்பதால், மக்கள் 22 காரட்டுக்கு பதிலாக 15 முதல் 18 காரட் நகைகளை வாங்க விரும்புவார்கள்.”
“ஏற்கெனவே தங்கம் வைத்திருப்பவர்கள் அதை மறுசுழற்சி செய்து புதிய நகைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் இந்த விலையிலும் வாங்குகிறார்கள், இது இடிஎஃப் தரவுகளிலிருந்து தெரிகிறது.” என்று அவர் கூறுகிறார்.
பண்டிகைக் காலத்தில் தங்கத்தின் கொள்முதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து பேசிய ஹேமந்த் சோக்ஸி, “வர்த்தகர்களிடையே தங்கத்தை வாங்கிக் குவிக்க வேண்டுமென்ற வெறி இல்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் குறைந்த காரட் நகைகளை வாங்குகின்றனர். முன்பு, தங்கத்தின் விலை எம்சிஎக்ஸ் (MCX) பில்லை விட ரூ.2000 குறைவாக இருந்தது, இப்போது அது ரூ.200 கூடுதல் பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.”
“மக்கள் தற்போது பழைய தங்கத்தை உருக்கி புதிய நகைகளை உருவாக்க ஆர்டர் செய்கிறார்கள். தற்போது, அவர்கள் 9 காரட் மற்றும் 14 காரட் நகைகளை வாங்குகிறார்கள், அது மலிவாக இருக்கும் என்பதால். 22 காரட் நகைகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது.” என்கிறார்.
சௌமில் காந்தி மற்றும் ஹேமந்த் சோக்ஸி இருவரும், தங்கத்தை இந்த விலையில் விற்காமல் வைத்திருக்க அல்லது விலை குறையும் போது வாங்க அறிவுறுத்துகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு