- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
-
(கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த செய்தி புதுப்பிக்கப்படுள்ளது)
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை முன்னர் ஏற்றுக்கொண்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது.
குழுவின் பரிந்துரைகளின் படி இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இதன்கீழ் அரசியலமைப்பின் 83 மற்றும் 172-வது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு மோதி அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.
இந்த விவகாரத்தில் பெரும்பாலான கூட்டணி கட்சிகளோடு கூடவே வேறு சில கட்சிகளின் ஆதரவும் மோதி அரசுக்கு உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது மட்டுமல்லாமல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பல பிராந்திய கட்சிகளும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல் செய்யும் பொருட்டு அதற்கான மசோதாவை நிறைவேற்றுவதில் இருக்கும் பிரச்னையுடன் கூடவே பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் அரசுக்கு உள்ளன என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
அரசியலமைப்பில் திருத்தம் செய்வது எளிதானதா?
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை 1983-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. ஆனால், அப்போது மத்தியில் இருந்த இந்திரா காந்தி அரசு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதன்பிறகு இந்தியாவின் சட்ட ஆணையம், 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. அப்போது மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்தது.
2014-ஆம் ஆண்டு பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த விஷயத்தை சேர்த்திருந்தது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதியும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மற்றும் மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகளும் அரசியல் ஆய்வாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கடந்த முறை ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஆனால், இந்த ஆண்டு இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெறுகிறது. எதிர்கட்சிகள் இதனை ஒரு உதாரணமாக குறிப்பிடப்பட்டு வருகின்றனர்.
மூத்த வழக்கறிஞரும் அரசியல் சாசன நிபுணருமான சஞ்சய் ஹெக்டே,”இதை அமல்படுத்த அரசு, பல அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்ய வேண்டும். அதன் கூட்டணி கட்சிகள் இதை ஆதரிக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்கும் ஒன்றாக இருப்பதால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் உச்ச நீதிமன்ற பரிசீலனைக்காக செல்லும்” என்று குறிப்பிட்டார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு வகையான, அதிபர் முறை ஜனநாயகம் போல ஆகிவிடும். அதாவது ’உங்களுக்கு நரேந்திர மோதியை பிடிக்குமா, பிடிக்காதா அல்லது ராகுல் காந்தியை பிடிக்குமா, பிடிக்காதா’ என்பதுபோல தேர்தல் ஆகிவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
“ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்தும் பொருட்டு அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது,” என்று மக்களவையின் முன்னாள் செயலரும் அரசியலமைப்பு நிபுணருமான பிடிடி ஆச்சாரி கூறினார்.
“மாநில சட்டப்பேரவை தேர்தல், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலங்கள் பட்டியலில் வருகிறது. மாநில சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த உரிமையை மாநிலத்திடமிருந்து பறித்துவிடும். இது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது. எனவே இது ஒருபோதும் நடக்க முடியாது,” என்றார் அவர்.
உதாரணமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பதவிக்காலம் முடிவடையாத மாநிலங்களின் சட்டப்பேரவைகளை கலைக்க வேண்டியிருக்கும்.
இது அமலானால் சட்டப்பேரவையை கலைக்கும் உரிமை மாநில அரசிடம் இருக்காது, அதன் கட்டுப்பாடு மத்திய அரசிடம் சென்றுவிடும்.
”ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இன்று பேசப்படும் விஷயம் அல்ல. அதற்கான முயற்சிகள் 1983 -ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டன. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அதை நிராகரித்துவிட்டார்,” என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரதீப் சிங், பிபிசி செய்தியாளர் சந்தீப் ராயிடம் தெரிவித்தார்.
“தேர்தலில் கறுப்புப் பணம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அது கணிசமாகக் குறையும். இரண்டாவது, தேர்தல் செலவுகளின் சுமை குறையும், நேர விரயம் மற்றும் சுமை குறையும். கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான செலவின் அழுத்தமும் குறையும்,” என்று அவர் கூறினார்.
“கட்சிகளுக்கு மிகப்பெரிய சுமையாக இருப்பது தேர்தல் நிதி. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தனித்தனியாக பிரசாரம் செய்ய வேண்டியதில்லை என்பதால் சிறு கட்சிகள் பலன் பெறலாம்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மாநிலங்களுடன் மோதல் தொடர்பான அச்சம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணை மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகிறது.
இதில் மத்திய பட்டியலில் உள்ள விஷயங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உண்டு. மாநிலப் பட்டியல், மாநில அரசின் கீழ் வரும் அதிகாரங்களை குறிப்பிடுகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இரண்டுக்குமே அதிகாரம் உள்ள விஷயங்கள் பொதுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.
“கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில் நீங்கள் எந்தத் திருத்தத்தையும் செய்யலாம், ஆனால் அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளது,” என்று பிடிடி ஆச்சாரி கூறுகிறார்.
“ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு 47 அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை அனுப்பியிருந்தன. இது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்று அதில் 15 கட்சிகள் தெரிவித்துள்ளன,” என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறினார்.
இந்த விவகாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இன்னொரு நெருக்கடி உள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத்தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதாவது கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிக்கையாளரும், நாடாளுமன்ற விவகாரங்களை கூர்ந்து கவனிப்பவருமான அரவிந்த் சிங், ”தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் பல பணிகள் நின்றுவிடுவது உண்மைதான். இதற்கு தீர்வு காண தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றக் குழு கூறியிருந்தது,” என்று குறிப்பிட்டார்.
“தற்போதைய அரசு 100 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி பேசுகிறது. இது தவிர எந்த மாநிலத்தில் ஆட்சி கவிழ்கிறதோ அந்த மாநிலத்தில் மீண்டும் எஞ்சிய காலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.”
”அதாவது இது ஒரே நாடு ஒரே வரி என்று அழைக்கப்படும் ஜிஎஸ்டி போல இருக்கும். ஆனாலும் நாம் சுங்க வரி, வருமான வரி என பல வகையான வரிகளை செலுத்துகிறோம்,” என்று அர்விந்த் சிங் சுட்டிக்காட்டினார்.
அரசின் வாதம்
இந்தியா சுதந்திரம் அடைந்து அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு முதல் முறையாக, 1951-52-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 22 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இந்த செயல்முறை சுமார் 6 மாதங்கள் நீடித்தது.
இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் 489 மக்களவைத் தொகுதிகளுக்கு சுமார் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது.
இந்தியாவில் 1957, 1962 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் மற்றும் பல மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.
இருப்பினும், 1955-ஆம் ஆண்டு ஆந்திரா ராஷ்டிரத்திலும் (பின்னர் ஆந்திர பிரதேசமாக மாறியது) 1960-65-ஆம் ஆண்டு கேரளாவிலும், 1961 இல் ஒடிஷாவிலும் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.
1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு சில மாநிலங்களின் சட்டப் பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டன. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது தவிர 1972-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மக்களவைத் தேர்தலும் முன்கூட்டியே நடத்தப்பட்டது.
1983-ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை அப்போதைய இந்திரா காந்தி அரசிடம் வழங்கியது. ஆனால் அதற்கு பிறகு இதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் என்று கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் எந்த ஒரு புதிய திட்டத்தையும் அரசால் செயல்படுத்த முடியாது. நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள போது, புதிய திட்டங்கள், புதிய வேலைகள் அல்லது புதிய கொள்கைகளை அறிவிக்க முடியாது.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது தேர்தலுக்கான செலவைக் குறைக்கும் என்றும் வாதிடப்படுகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் அடிக்கடி தேர்தல் பணிகள் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவில் தேர்தல் செலவு
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்குப் பின்னால் தேர்தல் செலவு குறையும் என்ற வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது.
”உலகிலேயே குறைவான செலவில் இந்தியாவில்தான் தேர்தல்கள் நடைபெறுகிறன. இந்தியாவின் தேர்தல்களில் ஒரு வாக்காளருக்கு சுமார் ஒரு அமெரிக்க டாலர் (இன்றைய நிலவரப்படி சுமார் 84 ரூபாய்) செலவிடப்படுகிறது,” என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு, வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்கள், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளுக்கான செலவுகள் அடங்கும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சுமார் 1.75 டாலர் செலவிடப்பட்டது.
தேர்தல் செலவுகள் பற்றிய தரவுகள் கிடைக்கப்பெறும் நாடுகளில் பார்த்தால் கென்யாவில் இந்தச் செலவு ஒரு வாக்காளருக்கு 25 டாலராக உள்ளது. இது உலகிலேயே மிகவும் அதிக செலவு செய்யப்படும் பொதுத் தேர்தல்களில் அடங்கும் என்று ஓ.பி. ராவத் குறிப்பிட்டார்.
“இந்தியாவில் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 4,000 கோடி ரூபாய் செலவாகிறது. இது அவ்வளவு அதிகம் அல்ல,” என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறினார்.
”இது தவிர அரசியல் கட்சிகள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். இதனால் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பணம் ஏழைகளை சென்றடைகிறது. இது ஒரு நல்ல விஷயம்தான்”, என்றார் அவர்.
மாறிவரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப இந்தியாவில் தேர்தல்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஆனாலும் கூட தேர்தல் நேரத்தில் பேனர்கள், போஸ்டர்கள், விளம்பரப் பொருட்களை தயாரித்து ஒட்டுவது முதல் ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுபவர்கள் வரை அனைவருக்கும் வேலை கிடைக்கிறது.
இந்த வகையில் சாமானிய மக்களுக்கும் அவர்களின் பொருளாதாரத்திற்கும் தேர்தல்கள் பல வழிகளில் நல்லது செய்கிறது என்றும் கருதப்படுகிறது.
மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்று எஸ்ஒய் குரேஷி கூறினார்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை சுமார் 17 ஆயிரம் ரூபாய் மற்றும் VVPAT இன் விலையும் ஏறக்குறைய இதே போலதான் இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்காக சுமார் 15 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.