சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு கட்சியினரின் நிலைப்பாடு வெவ்வேறாக இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தபோது ஆதரவு தான் தெரிவித்து கொண்டிருந்தார்.
அவருடைய ‘நெஞ்சிக்கு நீதி’ புத்தகத்தில் கூட ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், மத்தியில் கூட்டணியில் இல்லாததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
தேமுதிகவை பொறுத்தவரை ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. 140 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அந்தவகையில் மசோதாவை நிறைவேற்றி இருப்பது நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதா என்பதை மத்திய அரசு தான் வெளிப்படையாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் ஆதரவோடு தான் அந்த மசோதா செல்லுபடி ஆகவேண்டும். இல்லையென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா வெற்றிபெறுமா இல்லையா என்பது கேள்விக்குறிதான்.
டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடும்ப அட்டைகள் மூலம் தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். முதல்கட்டமாக ரூ.5 ஆயிரமாவது விடுவிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் மத்திய அரசு மீது குறை சொல்லிவிட்டு தமிழக அரசு ஓட முடியாது. அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.