• Sun. Apr 6th, 2025

24×7 Live News

Apdin News

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் ரூ.12,000 கோடி மிச்சம்…” – நிர்மலா சீதாராமன் விவரிப்பு | One nation one election system will save Rs. 12,000 crores – Nirmala Sitharaman

Byadmin

Apr 5, 2025


காட்டாங்கொளத்தூர்: “வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கடி தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் இடையூறாக உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்களவைத் தேர்தலை நடத்த 25 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இது ஒரே தேர்தலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தினால் 12 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும்,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று (ஏப்.5) ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். எஸ். ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பாரிவேந்தர், பாஜக சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தி, தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் நிர்மலா சீதாராமன் பேசியது: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து 10 ஆண்டுகளாக பல மேடைகளில் விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் அரசு அரசியல் ரீதியாக சில விஷயங்கள் கண்மூடித்தனமாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் நலனுக்காக எடுக்கப்படும் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 1960 வரை ஒரே நாடு ஒரே தேர்தலாக நடத்தப்பட்டது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் மட்டும் ஒன்றாக நடத்தப்படும் என கூறுகிறோமே, தவிர உள்ளாட்சி தேர்தல்களை நடத்த வேண்டும் என கூறவில்லை.

இந்த முடிவு பிரதமர் மட்டும் நான்கு அதிகாரிகளைச் சேர்ந்து எடுத்த முடிவு இல்லை. 2029-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகுதான் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். 82 ஏ, 83(7) சட்ட திருத்தங்கள் வர உள்ளன. இதன் வாயிலாக தேர்தல் ஆணையத்தில் அதிகாரம் கிடைக்கும். இதனை தனி உயர்மட்ட குழு முடிவு செய்கின்றது. அனைத்து மாநில அரசுகளின் ஆட்சி காலங்களையும் ஒருங்கிணைந்து 2034-க்கு முன் நடைமுறைக்கு வர சாத்தியம் இல்லை.

இந்த திட்டம் சிலர் சொல்வதைபோல உடனே நடைபெறக்கூடிய விஷயம் இல்லை. 1961 முதல் 1970 வரை 10 ஆண்டுகளில் 5 மாநிலங்களில் மூன்று முறை தேர்தல் நடத்தப்பட்டு பிஹார், கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் 15 மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகின்றது.

2019-ல் அனைத்து கட்சி கூட்டத்தில் அதில் 19 கட்சிகள் 16 கட்சிகள் ஒத்துக்கொண்டன. சி.பி.எம்., உள்ளிட்ட 3 கட்சிகள் மட்டுமே ஒப்புக்கொள்ள வில்லை. அதனையடுத்து உயர்மட்டக் குழு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்லால்கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த உயர்மட்ட குழுவும் 47 கட்சிகளை அழைத்து 32 கட்சிகள் ஒரே தேர்தலுக்கு ஒப்புக்கொண்டன. 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 15 கட்சிகள் தங்கள் கருத்துக்களை அளிக்கவில்லை.

வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கடி தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் இடையூறாக உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 10லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்களவை தேர்தலை நடத்த 25லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர். 2024 மக்களவை தேர்தலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இது ஒரே தேர்தலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தினால் 12 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும். இதனை மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த சட்டம் நிறைவேற்றபட்டால் 4.5 லட்சம் கோடி மதிப்பிலான 1.5 ஜிடிபி, கூடுதலாக உயரும். நாம் பொருளாதாரத்தில் பலமாக இருந்தால் சாதி, மதம், இன வேறுபாடின்றி உயரும். மேலும் கடந்த காலம்போல கேரளா, கர்நாடகா பகுதிகளில் போல ஓட்டுபதிவு சதவீதம் உயரும். சரத் பவார், பெரியவர் கருணாநிதி தனது சுயசரிதையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ ஆதரித்து உள்ளார்.

ஆனால், தற்போது நமது முதல்வர் ஸ்டாலின் தனது தந்தை சென்ற பாதையில் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்‌. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நாட்டின் நலன் கருதி கொண்டு வரப்படுகிறது. இதன் முக்கியத்துவம் குறித்து தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்து கூறுங்கள்” என்று அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழிசை பேசும்போது: “மாணவச் செல்வங்கள் மத்தியில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தை எடுத்துச் செல்லும் வகையில் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. எட்டுமுறை மத்திய பட்ஜெட்டை அறிவித்த ஒரே தமிழச்சி மற்றும் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை கொண்டவர் நிர்மலா சீதாராமன். குடும்பக் கட்டுப்பாடு போல தேர்தல் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அடிக்கடி தேர்தல் வரும் போது தேவையற்ற செலவுகள் ஏற்படுகின்றது” என்று அவர் பேசினார்.



By admin