தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு புதிய நிர்வாக சபை உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒலிம்பிக் இல்லத்தில் இம் மாதம் 25ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் சனிக்கிழமை (11) பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடையவுள்ளது. தேசிய ஒலிம்பிக் குழுவின் ஒலிம்பிக் இல்லத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதேவேளை, வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனைகள் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுநிலை) கே. ரீ. சித்ரசிறி தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர, சட்டத்தரணி பியசேன ரணசிங்க ஆகியோர் தேர்தல் குழுவில் இடம்பெறுகின்றனர்.
இக் குழுவினரிடமே வேட்பு மனுக்கள் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. தேசிய ஒலிம்பிக் குழுவின் நிர்வாக சபை வரலாற்றில் இம்முறை இரண்டு பேருக்கும் மேற்பட்டவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறியக் கிடைக்கிறது.
தேசிய ஒலிம்பிக் குழுவில் 32 விளையாட்டு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜிம்னாஸ்டிக்ஸ், மேசைப்பந்தாட்டம், குத்துச்சண்டை மற்றும் சைக்கிளோட்டம் ஆகிய சங்கங்களில் நிலவும் சிக்கல்கள் காரணமாக 28 சங்கங்களுக்கே வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும்.
இந்த சங்கங்களினால் மாத்திரமே தலைவர், 4 உப தலைவர்கள், செயலாளர்நாயகம் மற்றும் பொருளாளர், பிரதிப் பொருளாளர், பிரதிச் செயலாளர் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்களைப் பரிந்துரைக்க முடியும்.
தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தல்களை 2026 ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் நடத்துமாறு இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவருக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு எழுத்து மூலம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு அமைய அண்மையில் நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுவின் விசேட பொதுக்கூட்டத்தில் தேர்தல் குழு நியமிக்கப்பட்டது.
The post ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை முடிவடைகின்றது appeared first on Vanakkam London.