5
மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலகெங்கிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பணியிடங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான உரிமைகள், பாலின பாகுபாடு இல்லாத சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் கிடைத்திட சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டிய விழிப்புணர்வை சர்வதேச மகளிர் தினம் வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கான விதை 1908ல் போடப்பட்டது. நியூ யார்க் நகரில் 15 ஆயிரம் பெண்கள் பணி நேர குறைப்பு, தகுந்த ஊதியம், வாக்களிக்கும் உரிமை கோரி மாபெரும் பேரணி சென்றனர். ஒரு வருடம் கழித்து அமெரிக்க சோசியலிஸ்ட் கட்சி அந்த நாளை தேசிய மகளிர் தினமாக அறிவித்தது. நாளடைவில் உலகெங்கும் பரவி சர்வதேச மகளிர் தினமாக மாறியது. உலகம் முழுக்க வாழும் பெண்கள் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து கெளரவிப்பது அவசியமாகும். பெண்கள் எப்போதுமே சமூகத்தை வடிவமைப்பதிலும், வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வைப்பதிலும் கடுமையாக உழைத்துள்ளனர். சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த பெண்களின் சாதனைகளை பறைசாற்றி உலகிற்கு நேர்மறையான செய்தியை சொல்ல வேண்டிய நேரமிது.
சர்வதேச மகளிர் தினம் 2025
மகளிர் தினம் கருப்பொருள்
ஐ.நா அறிவிப்பின்படி 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருள் எல்லா பெண்களுக்கும் உரிமைகள், சமுத்துவம், அதிகாரம் அளிப்பதை விரைவில் செயல்படுத்துவதாகும். இந்த சர்வதேச மகளிர் தினம் முதல் உலகெங்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள விஷயங்களை துரிதமாக தகர்த்து எறிவதில் கூட்டு முயற்சி தேவை என்பதை உணர வேண்டும்.
சர்வதேச மகளிர் தின வரலாறு, முக்கியத்துவம்
1909ல் முதல் முறையாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட தேசிய மகளிர் தினத்தின் நோக்கம் உலகெங்கும் பரவி 1911ல் பல்வேறு நாடுகளில் முதல் முறையாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இது முக்கிய மைல்கல் ஆகும். 1917ல் ரஷ்யாவில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இறுதியாக 1975ல் ஐ.நா சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அங்கீகாரம் கொடுத்தது. 100 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டாலும் இன்னமும் பெண்கள் தங்களுடைய உரிமைக்காக போராட வேண்டியிருக்கிறது. சமூகம் நேர்மறையான பாதையில் பயணிக்க பெண்களின் உரிமைக்கு தடையாக உள்ள விஷயங்களை உடைக்க வேண்டியது அவசியம்.
மகளிர் தின கொண்டாட்டம்
பள்ளி, கல்லூரிகளில் மகளிர் தினம் குறித்து குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அலுவலகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மகளிர் தினத்தன்று பெண்களுக்கு விடுப்பும் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் மகளிர் தினத்திற்கு பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை பற்றியே. அரசு சார்பில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணியும் செல்கின்றனர்.