பட மூலாதாரம், UGC
தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
மறுபுறம், இன்று வெள்ளிக்கிழமையன்று ‘மனம் திறந்து பேசப்’ போவதாக அ.தி.மு.கவின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
அதிமுகவும் பாஜகவும் மீண்டும் அணி சேர்ந்த போது தமிழ்நாட்டில் 2026-இல் கூட்டணி அமைச்சரவை அமையும் என்று பேசி வந்த டிடிவி தினகரனின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? அதுகுறித்து அதிமுக என்ன சொல்கிறது? ஓபிஎஸ், டிடிவி முடிவால் அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கிக்கு சேதாரம் ஏற்படுமா?
அமமுக விலகலுக்கான காரணம் என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக புதன்கிழமையன்று இரவு காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
“நாங்கள் யாருடைய ஓரப் பார்வைக்காகவும் காத்திருக்கவில்லை. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவார்கள் என்றும், அதற்கு அம்மாவின் கட்சியை சேர்ந்தவர்கள் சரியான முயற்சியை செய்வார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் துரோகத்தை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு, ஊர் ஊராக திரிவதை பார்த்தால், அதற்கான வழியும் இல்லை, அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பும் இல்லை என்பது புரிகிறது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்டதே ஒரு சிலரின் துரோகத்தை எதிர்த்துதான். அவர்கள் திருந்துவார்கள் என நம்பி இருந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்பது புரிந்தது. அதனால் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்” என்று தெரிவித்தார். கூட்டணி தொடர்பான அடுத்த கட்ட நகர்வு குறித்து டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஓபிஎஸ், டிடிவி அடுத்தடுத்து விலகல்
பட மூலாதாரம், Getty Images
ஏற்கனவே இந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தைத் திறந்துவைப்பது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோதி தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது அவரை சந்திக்க கோரிக்கை விடுத்தும் கூட ஓ. பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதற்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஓபிஎஸ்சை சந்திக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகவே ஓ. பன்னீர்செல்வத்தின் விலகல் அறிவிப்பு ஜூலை மாத இறுதியில் வெளியானது.
அந்தத் தருணத்தில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், தே.ஜ.கூவைவிட்டு வெளியேறியது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் டி.டி.வி. தினகரனும் அந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, கூட்டணி விலகலுக்கு டிடிவி தினகரன் முன்வைத்த காரணங்களைத் தவிர வேறு சிலவும் கண்கூடாக தெரியும். அதாவது, தூத்துக்குடி விழாவிற்கு பிரதமர் வந்தபோது ஓ. பன்னீர்செல்வம் மட்டுமல்லாமல், டிடிவி தினகரனும்கூட அழைக்கப்படவில்லை.
அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோருக்கு மட்டும் அந்த வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் டிடிவி தினகரனை இந்த முடிவை எடுக்க வைத்துவிட்டது.
இது குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி. லக்ஷ்மணன், “சில நாட்களுக்கு முன்பாக ஜான் பாண்டியன் திண்டுக்கல்லில் ஒரு மாநாட்டை நடத்தினார். அதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் எல்லோரையும் அழைத்தவர் டிடிவி தினகரனை மட்டும் அழைக்கவில்லை.”
“இதற்கடுத்ததாக ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜி.கே. மூப்பனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவிற்கு ஜி.கே. வாசன் எல்லோரையும் அழைத்தார். கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாத தே.மு.தி.கவின் சுதீஷைக் கூட அழைத்தார். அவரும் வந்திருந்தார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக தொடர்ந்து சொல்லிவரும் டி.டி.வி. தினகரனை அழைக்கவில்லை. இதற்கு மேல் அவரால் அந்தக் கூட்டணியில் எப்படி இருக்க முடியும்?” என்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
“டி.டி.வி. தினகரன் தே.ஜ.கூவில் இருப்பதாக தொடர்ந்து பேசிவந்தார். நயினார் நாகேந்திரன் ஒரு முறையும் கே. அண்ணாமலை ஒரு முறையும் அவர் தே.ஜ.கூவில் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால், அமித் ஷா ஒரு முறையும் அப்படிச் சொல்லவில்லை. மதுரையில் நடந்த கூட்டத்திலும் சரி, நெல்லையில் நடந்த கூட்டத்திலும் சரி, டிடிவி தினகரனின் பெயரையே அவர் கூறவில்லை. இந்த நிலையில், இழப்பதற்கு இனிமேல் என்ன இருக்கிறது என இந்த முடிவை எடுத்துவிட்டார் தினகரன்” என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.
டி.டி.வி. தரப்பு கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. டி.டி.வி. தினகரன் அந்தக் கூட்டணியில் இடம்பெறவில்லை. அவருடைய கட்சியும் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன.
2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தே.ஜ.கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறிவிட, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றனர். அதற்குப் பிறகு, அந்தக் கூட்டணியிலேயே தாங்கள் நீடிப்பதாக டி.டி.வி. தினகரனும் ஓ. பன்னீர்செல்வமும் தொடர்ந்து கூறிவந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க. அந்தக் கூட்டணியில் இணைந்தது. அதன் பின்னரே ஓபிஎஸ், டிடிவியின் விலகல் அறிவிப்பு அடுத்தடுத்து வந்துள்ளது.
பாஜக தங்களை புறக்கணித்ததால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறுவது சரியல்ல என்கிறார்கள் டி.டி.வி. தரப்பைச் சேர்ந்தவர்கள்.
டி.டி.வி. தினகரன் தரப்பைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பார்த்திபன், “அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தபோது, அ.தி.மு.கவைச் சேர்ந்த எல்லோரும் ஓரணியில் திரள்வார்கள் என நினைத்தோம். ஆனால், அப்படி நடக்கவில்லை. பா.ஜ.கவின் வாக்கு வங்கி என்பது அவர்களுடையது மட்டுமல்ல. அதில் அ.ம.மு.க., ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் வாக்குகளும் இருக்கின்றன. இருந்தபோதும், கூட்டணியில் அ.தி.மு.க. இருந்தால் போதும் பா.ஜ.க. கூட்டணி ஜெயித்துவிடும் என நம்புகிறார்கள்.”
“இதெல்லாம் தவிர, தற்போது எடப்பாடி கே. பழனிச்சாமி ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார். அந்தச் சுற்றுப்பயணத்தில் அவருடைய பேச்சு, நடை, உடை, பாவனை எல்லாமே மற்றவர்களை ஏளனப்படுத்துவதைப் போல இருக்கிறது. இந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறியதற்கு அதுதான் முக்கியக் காரணம்” என்கிறார்.
அ.தி.மு.க. தரப்பு விமர்சனம்
ஆனால், அ.தி.மு.க. தரப்பு டி.டி.வி. தினகரனைக் கடுமையாக விமர்சிக்கிறது. இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் முன்னாள் அமைச்சர் எஸ். செம்மலை.
“கூட்டணியில் இருந்து டிடிவி வெளியேறியிருப்பது எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது மனதை வெளிப்படுத்துகிறது” என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், “தொண்டர்களால் கட்சிக்கு ஒரு தலைமை தேர்வுசெய்யப்பட்ட பிறகு, அந்த தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். இணைய வேண்டும் என்று விரும்புவர்கள் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று சொல்வதும், இரட்டை இலையை மீட்டெடுக்க சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று சொல்வதும் வேண்டாத வேலை.” என்று கூறினார்.
டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என்பதற்கு கூறும் காரணம் ஏற்கும்படியாக இல்லை என்று கூறும் எஸ். செம்மலை, “எடப்பாடி பழனிச்சாமியை அ.ம.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறார். ஒருவர், தனிக் கட்சி ஆரம்பித்துவிட்ட பிறகு, தேவையில்லாம்ல ஏன் எங்களைச் சீண்ட வேண்டும்? இவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்தியால் ஏற்பட்டதுதான் இந்த முடிவு. யாரும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை.” என்கிறார்.
டெல்டா பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம், TVK
ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனின் விலகல் முக்குலத்தோர் அதிகமுள்ள தென் மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பார்வையும் இருக்கிறது.
“அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு மிக நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட 85 தொகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம். இதெல்லாம் தெரிந்தும் எடப்பாடி கே. பழனிசாமியும் பா.ஜ.கவும் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.
ஆனால், அதிமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்கிறார் எஸ். செம்மலை. “தென்மாவட்டங்களில் அவர்கள் இருவரையும் நம்பி அதிமுக இல்லை. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் அ.தி.மு.கவா, தி.மு.கவா அல்லது எடப்பாடியாரா, ஸ்டாலினா என்ற கேள்விகளே பிரதானமாக இருக்கும். மற்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல. இன்றைக்கு ஆளும் தி.மு.க. ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும்” என்றார்.
டி.டி.வி. தினகரனுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
பட மூலாதாரம், Facebook
“தற்போது டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரிடமிருந்து இவ்வளவு நாட்களாக வி.கே. சசிகலா விலகியே இருந்தார். ஆனால், இப்போது மூன்று பேரும் பேச ஆரம்பித்துள்ளனர். அவர்கள் ஒன்று விஜய்யுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கலாம். அல்லது தாங்கள் வலுவாக உள்ள 85 தொகுதிகளில் போட்டியிடலாம்” என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.
பா.ஜ.கவைப் பொறுத்தவரை இப்போதைக்கு இதுகுறித்து பெரிதாகப் பேச விரும்பவில்லை. பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் இது குறித்துக் கேட்டபோது, “தி.மு.கவுக்கு எதிராக இருக்கும் சக்திகள் அனைவரும் ஒன்றாக இணைவர்கள். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இதைத் தவிர இந்தத் தருணத்தில் வேறு ஏதும் சொல்ல முடியாது” என்று மட்டும் தெரிவித்தார்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று தான் மனம் திறந்து பேசப் போவதாக அ.தி.மு.க மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் கூறியிருப்பதும் தமிழக அரசியல் அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு