• Thu. Mar 13th, 2025

24×7 Live News

Apdin News

ஓய்வு ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு தடை | CBI case against retired IG Pon Manickavel stayed

Byadmin

Mar 13, 2025


மதுரை: ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க உதவியது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடக்கோரி அதே பிரிவில் டி.எஸ்.பியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காதர்பாட்ஷா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகார் குறித்த முதல் கட்ட விசாரணை நடத்தி, புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில் முதல் கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு பொன்.மாணிக்கவேல் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து சிபிஐ விசாரணை அறிக்கை நகல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி. புகழேந்தி வியாழக்கிழமை விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “முதல் தகவல் அறிக்கை போதிய விவரங்கள் இன்றி மேலோட்டமாக பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் பேச்சைக் கேட்டு, இவ்வாறு வழக்குப் பதிவு செய்தால், வருங்காலங்களில் குற்றம்சாட்டப்படும் நபர்கள், எந்த விசாரணை அதிகாரி மீது வேண்டுமானாலும் புகார் கொடுத்து, இவ்வாறு வழக்குப் பதிவு செய்யலாமா? இது ஒட்டுமொத்த அமைப்பையே சீர்குலைக்காதா?.

இப்படியிருந்தால் அதிகாரிகள் எவ்வாறு நேர்மையாக, சுதந்திரமாக பணியாற்ற முன்வருவர்? பொன் மாணிக்கவேலின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி, சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? முறையாக பணியாற்றும் அலுவலர்களை பாதுகாக்க வேண்டும். முறையான விவரங்கள் இன்றி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வழக்கில் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது. பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அலுவலராக பொறுப்பேற்பதற்கு முன்பு சிலை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? பொறுப்பேற்ற பின்பு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்த விவரங்களை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



By admin