• Fri. May 23rd, 2025

24×7 Live News

Apdin News

ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Southwest monsoon to begin in Kerala in a couple of days

Byadmin

May 23, 2025


கேரளாவில் வரும் 27-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவா – தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மே 22-ம் தேதி (நேற்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும். அதன் பிறகு இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதனால் கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. பின்னர் படிப்படியாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பரவக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி உருவாகக்கூடும்.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 26-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நாட்களில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பாலமோரில் ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin