கோவை: கரூர் சம்பவம் உள்ளிட்ட திமுக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் 2026-ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தையை இழந்து வாடும் பெண் குழந்தைகளுக்கு, திருமதி சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தை கல்வி நிதி வழங்கும் நிழக்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கரூரில் செப்.27-ம் தேதி நடந்த அரசியல் கட்சி நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். சட்டப்பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் வழக்கம் போல் அரசின் மீது தவறு இல்லை. காவல் துறை மீது தவறு இல்லை என பேசியுள்ளார்.
வழக்கு சிபிஐ-யிடம் மாற்றப்பட்ட பின் முதல்வர் 606 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். ஏடிஜிபி டேவிட் சன் செப்.28-ம் தேதி 500 பேர் பணியாற்றியதாக தெரிவித்தார். இன்று காவல் துறை செய்திக் குறிப்பில் சம்பவ இடத்தில் 350 பேர், வேறு இடங்களில் 150 பேர் பணியில் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிபிஐ-க்கு ஒத்துழைப்பு வழங்கி உண்மை குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு உதவ வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் அதிகாலை 1.45 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு உடற்கூராய்வு நிறைவு செய்து 39-வது உடலை ஒப்படைத்துவிட்டோம் என தமிழக அரசு கூறியுள்ளது. அவசர கதியில் உடற்கூராய்வு செய்யப்பட்டதா என்பது குறித்த விவரம் சிபிஐ விசாரணைக்கு பின் தெரியவரும்.
சாலையில் நடந்த மோதல் சம்பவத்திற்கு அண்ணாமலை தான் காரணம் என திருமாவளவன் கூறியுள்ளார். அவர் முதலில் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். காவல் துறையில் பணியாற்றி பல ரவுடிகளை கையாண்ட பின் அரசியலுக்கு நான் வந்துள்ளேன். எனவே மிரட்டல், உருட்டல் எல்லாம் என்னிடம் எடுபடாது.
கரூர் நிகழ்விற்கு பின் யார் உள்ளனர் என்பது முக்கியம். சிபிஐ விசாரணைக்கு பின் அது வெளியே வரும். காவல் துறைக்கு எப்போது வேண்டுமானாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரம் உள்ள நிலையில் அவற்றை எல்லாம் ஏன் பயன்படுத்தவில்லை? நாங்களும் தவறு செய்துள்ளோம் என தமிழக அரசு ஒத்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், அவர்கள் மீது மட்டும்தான் தவறு என்று சொல்வதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். 41 பேர் உயிரிழந்த பின் ஓர் அரசு அதிகாரி மீது கூட ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?
சபாநாயகர் செயல்பாடுகள் திமுக தொண்டரை விட சிறப்பாக உள்ளது. பாஜக-வை சேர்ந்த 4 எம்எல்ஏ-க்களை சபாநாயகர் அவமதித்துள்ளார். அதிமுக-வினர் கருப்பு பட்டை அணிந்து வந்ததையும் சபாநாயகர் விமர்சித்துள்ளார்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.