பட மூலாதாரம், Getty Images
இன்று மிகவும் ஜன நெருக்கடியுடன் காணப்படக் கூடிய இந்நகரம், கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியைப் பரப்பும் பணியை செய்து வந்திருக்கிறது.
அந்நாட்களில் தி மொகம்மத் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி என்ற பெயரிலும் தற்போது அலிகார் முஸ்லிம் யுனிவர்சிட்டி என்ற பெயரிலும் அழைக்கப்படும் பல்கலைக் கழகம் இந்நகரின் அடையாளங்களில் ஒன்று.
அலிகார் பல்கலைக் கழகத்திலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் பாதர்பாக் என்று அழைக்கப்படும் இந்நகரின் பழமையான ஒரு இடம் உள்ளது.
இப்பகுதிக்கு செல்வதற்கான சாலைகள் மிக குறுகலாக உள்ளன, ஏனெனில் பெரும்பாலான பழைய பங்களாக்கள் விற்கப்பட்டு பல அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விட்டன.
இவற்றின் நடுவே அப்படியே இருக்கும் ஒரு பங்களாவில் பேராசிரியர் இர்ஃபான் ஹபிப் வசித்து வருகிறார். பிரிட்டிஷ் காலத்தில் 1931-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களா, 12 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
அந்த மாளிகையில் போகன்வில்லா, ரோஸ் செடிகள் நிறைந்த தோட்டத்தில் என்னை சந்தித்த இர்ஃபான் ஹபிப்’அலிகாரின் உண்மையான பெயர் உங்களுக்கு தெரியுமா?’, என்று கேள்வி எழுப்பினார்.
தற்போது 94 வயதாகும் பேராசிரியர் ஹபிப், பல ஆண்டுகளாக அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழத்தின் வரலாற்றுத் துறையின் தலைவராக பணியாற்றினார். தற்போது கவுரவ விரிவுரையாளராக இருக்கும் அவர், அத்துறை பற்றி ஒவ்வொரு நாளும் அக்கறை கொள்பவராக இருக்கிறார்.
அலிகாரின் உண்மையான பெயர் என்ன?
அலிகார் பற்றி அவர் எழுப்பிய கேள்வியுடன் என்னுடைய கேள்வியையும் சேர்த்து நான் கேட்டேன்,’ஃபைசாபாத் தற்போது அயோத்தியாவாக மாறிவிட்டது, அலாகாபாத் பிரயாக்ராஜ் ஆக மாறிவிட்டது, டெல்லி ஔரங்க சீப் ரோடு தற்போது புத்தகத்தில் மட்டுமே உள்ளது. இதற்கான தேவை என்ன? அல்லது வரலாற்றில் வந்து போகக் கூடிய நாட்களில் இதுவும் ஒன்றா?
இர்ஃபான் ஹபிப் பதிலளித்தார்,”அலிகாரின் பழைய பெயர் கோல், ராம்கார் அல்ல. ஆனால் இந்த பெயரும் நீடிக்கவில்லை. ஏனெனில் கோல் என்பது கிருஷ்ணரால் கொல்லப்பட்ட ஒரு தேவதையின் பெயர்.”
“முகலாய காலத்தில், கோல் என்று தான் பெயர் இருந்தது. அலிகார் என்ற பெயர் மராத்தியர்களின் ஆதிக்கம் டெல்லியில் அதிகரித்த போது 1780-81ம் ஆண்டில் வந்தது. இந்த இடங்களில் சிந்தியாக்கள் கட்டிய கான்கிரீட் பாசறைகள் இருந்தன. அத்தோடு, பிரெஞ்சு கமாண்டர்களின் பாசறைகளும் இருந்தன. அவர்கள் இந்த பகுதிக்கும் கோட்டைக்கும், அலிகார் என்று பெயரிட்டனர்.” என்று கூறினார் பேராசிரியர் ஹபிப்,
“சிந்தியாக்களின் தளபதியாக இருந்த நஜாஃப் அலிகானின், பெயரால் அலிகார் என்ற பெயர் வந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்கு வலுவான வரலாற்று ஆதாரம் இல்லை” என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் நகரங்கள் மற்றும் சாலைகளின் பெயர்களை மாற்றும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஹபிப் இதில்,”மத ரீதியான நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது, இது தவறானது” என கூறுகிறார்.
நேருவுடனான பேராசிரியரின் உரையாடல்
குளிர்காலம் முடிவடையும் தருவாயில் இருந்த அந்த நாளில் பேராசிரியர் ஹபிப்பின் தோட்டத்தில் பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. இரண்டு மயில்கள் ஆல மரத்திலிருந்தவாறு எங்களை நோக்கி பார்த்தன.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த தோட்டமும், பல பிரபலமான நபர்களின் வருகையை பார்த்துள்ளது.
இர்ஃபான் ஹபிப்பின் தந்தை , மொகம்மத் ஹபிப் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் இடைக்கால வரலாறு குறித்த பேராசிரியராக இருந்தார். அத்தோடு காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்தார்.
பேராசிரியர் இர்பாஃனின் நினைவுத் திறன் அதிசயிக்க வைப்பதாக இருந்தது.
புன்னகையுடன் அவர் கூறினார்,”என்னுடைய இளம்பருவத்தில் ஜவகர்லால் நேருவின் கார் எங்களின் வாயில் கதவை அடைந்த போது, நானும் , என்னுடைய மூத்த சகோதரனும் இங்கே உள்ள புல்வெளியில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தோம். அவர் எங்கள் வீட்டினுள் வந்து, எங்கள் தந்தையிடம் ஒரு ஆம்லெட் தயாரித்து தருமாறு கேட்டார்.” என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பின் நடந்த மற்றொரு சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், “அப்போது நேரு இங்கே அமர்ந்திருந்தார். என்னுடைய தந்தை அவரிடம், கிரிப்ஸ் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருந்தால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என பேசினார்” என்றார்.
“இந்த பதிலால் நேரு ஜி மிகுந்த கோபமடைந்தார். ‘நீங்கள் ஒரு பேராசிரியர், அதனால் நீங்கள் எப்போதுமே முட்டாளாகத்தான் இருப்பீர்கள்’ என்றார். நாங்கள் மிகவும் இளையவர்களாக இருந்தோம். ஆனால் எங்கள் தந்தையை வேறு ஒருவர் முட்டாள் என குறிப்பிட்டது, எங்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது.” என பேராசிரியர் ஹபிப் கூறினார்.
1947-ல் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை நாட்களை நினைவு கூர்ந்த பேராசிரியர் ஹபிப்,”அப்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் மாணவர்களின் எண்ணிக்கை 3,000 லிருந்து 800 ஆக குறைந்து விட்டது. பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் சென்றுவிட்டனர். ஆனாலும் கல்வி தொடர்ந்தது” என குறிப்பிட்டார்.
“மேற்கு உத்தரபிரதேசத்தில், அதிலும் குறிப்பாக அலிகாரில் மத மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. சர்தார் பட்டேல் முன்னெச்சரிக்கையாக, பாதுகாப்புப் படைகளை இங்கே நிறுத்தியிருந்தார்” என்றார் அவர்.
அசோகரும் அக்பரும்
இர்ஃபான் ஹபிப்-ன் தந்தை அவரை பேரரசர் அசோகரின் கல்வெட்டுகளை படிக்குமாறு ஊக்கப்படுத்தினார். இதனால் அவர் பெர்சியன் , சமஸ்கிருதம் மற்றும் பிராமி மொழிகள் குறித்து நல்ல அறிமுகம் பெற்றிருந்தார்.
தற்காலத்தில் இந்தியாவில் மொழி குறித்து ஏராளமான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பது குறித்த கேள்வி பேராசிரியரிடம் முன்வைக்கப்பட்டது. சில மாநிலங்களில் உருது என்பது ‘முஸ்லிம்களின் மொழி என்றும் வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்களின் மொழி’ என்றும் சித்தரிக்கப்படுகிறது. மற்றொரு வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்து சமவெளி நாகரிகத்திலிருக்கும் எழுத்துகளைப் புரிந்துகொண்டு, அது தமிழின் பண்டைய எழுத்துகளுடன் பொருந்துகிறதா என்பதை நிரூபிப்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது பற்றியும் கேள்வி எழுப்பினேன்.
இதற்கு பதிலளித்த இர்ஃபன் ஹபிப், “ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளை விடவும் நமது நாடு சிறந்து விளங்கியது. நூற்றுக்கணக்கான மொழிகள் இங்கு பிறந்திருக்கின்றன. இந்த மொழிகளுடன் தங்களை பிணைத்துக் கொண்ட ஆட்சியாளர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், பிரிட்டீஷ் என அனைவரும் ஆட்சி நிர்வாகம் முதல் வர்த்தகம் வரை இந்த மொழிகளை பயன்படுத்தினர்.” என்றார்.
“இது எப்படி இன்று ஒருவருடைய உடைமையாக மாறும்? இது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் அந்த நேரத்தின் அரசியல் நோக்கங்களிலிருந்து அல்லாமல், அந்த காலத்திற்கான கண்ணாடியின் வழியே பார்க்கின்றனர்.” என்று ஹபிப் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,”எழுத்துக் கலை என்பது அசோகரால் நமக்கு வழங்கப்பட்டது. இது மிகப்பெரிய விஷயம்” என்றார்.
“நான் யுஜிசி பாடத்திட்டத்தை பார்தேன், அவர்கள் இதனை மறந்து விட்டனர். அசோகரின் பெயர் சிறிய அளவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எழுத்து எனும் கலை இந்தியாவுக்கு வந்தது குறித்து பாடத்திட்டம் முழுமையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
“அசோகரின் கோட்பாட்டில் சாதி இல்லை”
மௌரியப் பேரரசர் அசோகர் பேராசிரியர் ஹபிப்-க்கு விருப்பமானவர். எனவே அது குறித்து கேட்டேன்,”நீங்கள் அசோகரின் நேரம் குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். அவர் முதலில் வன்முறையாளராகவும், பின்னாளில் அமைதியின் தூதராகவும் மாறியிருக்கிறார். அசோகர் தொடங்கி அக்பர் மற்றும் தற்போது வரையிலும் , என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?”
பேராசிரியர் ஹபிப் பதிலளிக்கத் தொடங்கினார்,” அசோகரின் வார்த்தைகள் இன்று முக்கியமானவை. சகிப்பற்ற தன்மை கூடாது. மற்ற மதங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். மதம் என்ற அவரது கோட்பாட்டில் சாதி என்ற குறிப்பே இருக்கவில்லை. இதனை மக்கள் மறந்து விட்டனர்.”
“ஆனால் இதற்கு முரணானவையாக மனு ஸ்மிரிதி மற்றும் குப்தர்களின் ஆட்சிக்கால உதாரணங்கள் இருக்கின்றன. சாதி அடிப்படையில் தண்டனை வழங்குவது பற்றி மனு ஸ்மிரிதி பேசுகிறது. எனவே அசோகரின் காலத்தில் தான் மத சார்பின்மை தொடங்குகிறது.” என்றார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முகலாய வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்துள்ள இர்ஃபான் ஹபிப், அவர்களின் காலத்தில் இருந்த விவசாய அமைப்புகள், சாதிய முறைகள் மற்றும் அந்நாளைய வெளிநாட்டு பயணிகள் குறித்தும் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
உண்மை வரலாறு மறைக்கப்படுகிறதா?
பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் ஹபிப் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பின்நாட்களில் மார்க்சிஸ்ட் பிரிவில் இருந்தார். இவரை விமர்சிப்பவர்கள்,”இர்ஃபான் ஹபிப் மற்றும் பிற வரலாற்றாய்வாளர்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்களின் பார்வையிலிருந்து ஆராய்ச்சிகளை செய்துள்ளனர். இது முகலாயர்களையும் , முஸ்லிம் ஆட்சியாளர்களையும் தேவைக்கதிகமாக புகழக் கூடியதாக உள்ளது.” எனக் கூறுகின்றனர்.
அக்பரின் அவையில் தீன் இ இலாஹி என்றழைக்கப்படும் மத ஒருமைப்பாட்டுக் கோட்பாடு விவாதிக்கப்பட்டது. அனைத்து மதத்தினரையும் பாதுகாப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதனை தற்கால வரலாற்றாசிரியர்கள் கேள்விக்குள்ளாக்குவது ஏன்? என்பது குறித்தும் பேராசிரியர் ஹபிப்பிடம் கேள்வி எழுப்புவது அவசியமானதாக இருந்தது.
இதற்கு பதிலளித்த அவர்,”காங்கிரசில் பெரிய தலைவராக இருந்த சுரேந்திரநாத் பானர்ஜி சாஹிப் , பிரிட்டிஷ் ஆட்சியாளர் கர்சன் பிரபுவை சந்தித்தார். அப்போது பானர்ஜி தம்மிடம் சில விஷயங்களைக் கூறியதாக கர்சன் எழுதியிருக்கிறார்,”எங்கள் நாடு அசோகர், அக்பர் போன்ற ஆட்சியாளர்களைத் தந்திருக்கிறது. தற்போது பிரிட்டிஷ் அரசும் அது போன்று தலைவரை வழங்க வேண்டும்” என்று கூறினார். இது 1903 அல்லது 1904 கால கட்டத்தில் நடந்ததாக கர்சன் பதிவு செய்திருக்கிறார்.
பேராசிரியரின் பதிலைக் கேட்டு அடுத்த கேள்வியை முன்வைத்தேன்,”கல்வித் திட்டங்களை வடிவமைப்பவர்களின் கூற்றுப்படி, முகலாயர்களின் வரலாறானது அலங்காரமாக வழங்கப்பட்டுள்ளது. அக்பர் , இடைக்கால வரலாறு அல்லது முகலாயர்களின் வரலாறானது தாராளவாத மார்க்சிஸ்ட் கதையோட்டத்துடன் உள்ளது. இது பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர்களாலும் ஈர்க்கப்பட்டதோடு, மேற்கத்திய சித்தாந்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பார்வையின் காரணமாக உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.”
இதற்கு பதிலளித்த இர்ஃபான் ஹபிப்,” சுரேந்திரநாத் பானர்ஜியைவிடவும் தேசியவாதிகள் இருப்பார்களானால் அவர்களைப் பாராட்டலாம். ஆனால் பானர்ஜி பிரிட்டிஷாருடன் இருக்கவில்லை. திலகரும் பிரிட்டிஷாருடன் இருக்கவில்லை. இந்த நாடு, இதன் சகிப்புத் தன்மை மற்றும் சாதனைகள் அனைவருக்கும் முக்கியமானது. உலக அளவிலும் யாரேனும் இந்தியாவைப் பற்றி புகழ்ந்து எழுதினால். அசோகரும், அக்பரும் கண்டிப்பாக குறிப்பிடப்படுவார்கள்.” என்றார்.
“அக்பரிடம் அமைச்சராக இருந்த அபுல் ஃபஸல், மத விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார் என்றார். கலிஃபாக்களையும், மத ஆசிரியர்களையும் அவர் விமர்சித்திருக்கிறார். எந்த ஒரு நாடும் இதுபோன்ற விஷயங்கள் தங்கள் நாட்டில் நிகழ்ந்ததற்காக பெருமைப்பட வேண்டும். யாருமே மத சார்பின்மை பற்றி பேசாத போது, நமது நாட்டில் அது தொடங்கிவிட்டது.” என்றார் பேராசிரியர்.
அக்பரின் கொள்கைகளை பின்பற்ற ஔரங்கசீப்புக்கு சிவாஜி அறிவுரை
பட மூலாதாரம், ANI
கடந்த பத்தாண்டுகளில் பாடத்திட்டங்களில் முகலாயர்களைப் பற்றி கற்பிப்பதா? வேண்டாமா? என்ற வெறுப்புடன் கூடிய விவாதம் நடைபெறுகிறது.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலானது (NCERT) பள்ளி பாடப் புத்தகங்களில் முகலாயர்கள் தொடர்புடைய பெரும்பகுதியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவை 300 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி செய்துள்ளனர். இது வரலாற்றின் முக்கியப் பகுதி.
இந்திய வரலாற்றின் இந்த பெரும் பகுதியை குறைப்பது அல்லது நீக்குவது அரசியல் நோக்கங்களால் நிகழ்வதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் இதனை ஆதரிப்பவர்கள்,”பாடத் திட்டத்தை முறைப்படுத்தவும், மாணவர்கள் மீதான சுமையைக் குறைக்கவும் இது அவசியமான நடவடிக்கை” என்று கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு 2017 முதல் 2022 வரை, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் முகலாயர்களின் வரலாறு சில பள்ளிகளின் பாடத் திட்டத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையிலும் பாடத்திட்டமானது சத்ரபதி சிவாஜியைப் பற்றியதாகவே உள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களை தோற்கடித்த சிவாஜி மராத்தா சாம்ராஜ்யத்திற்கான அடிக்கல் நாட்டினார். மகாராஷ்டிரா உட்பட நாட்டின் பல பகுதிகளை அவர் ஆட்சி செய்தார்.
முகலாயர்களின் வரலாறு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் , பேராசிரியர் இர்ஃபான் ஹபிப் போன்ற மார்க்சிய சித்தாந்தமுடைய வரலாற்றாசிரியர்கள் தங்களுடைய பார்வையிலிருந்து வரலாற்றை எழுதியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு பதிலளித்த இர்ஃபான் ஹபிப், “தற்போது காலம் மாறிவிட்டது. ஔரங்கசீப்புக்கு சிவாஜி எழுதிய மிகப் பிரபலமான கடிதம் ஒன்று உள்ளது. அதில் அக்பரின் கொள்கைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என சிவாஜி அறிவுறுத்தியிருக்கிறார்.”
மேலும்,”சிவாஜியே அனைத்து மதங்களையும் பாதுகாப்பவராக இருந்தார். ஒருபுறம் ஔரங்கசீப் உடன் போர் நடந்து கொண்டிருந்தது. ஆனால் மறுபுறம் சிவாஜியின் சொந்த படையில் தளபதியாக இருந்தவரின் பெய இப்ராஹிம் அலி. அவரின் உளவுப்பிரிவின் தலைவரின் பெயர் ஹைதர் அலி”
வரலாற்றை மேலும் சுட்டிக்காட்டிய அவர்,”அக்பரின் அவையில் இருந்த மான்சிங் எனும் ராஜபுத்திரர் காபூலின் முதல் கவர்னராக நியமிக்கப்பட்டார். “
அக்பர் மற்றும் மான்சிங்கை குறிப்பிடாமல் மகாராணா பிரதாப்பின் வரலாற்றை எப்படி எழுத முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஔரங்கசீப்பின் ஆட்சிகாலதின் போது ஐரோப்பிய பிரயாணிகள் இந்தியாவுக்கு வந்தனர். இந்துக்கள் ஒடுக்கப்படுவதாக அவர்கள் கருதவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“மாறாக இது விசித்திரமான நாடு என அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் என அனைவரும் நன்றாக வாழ்ந்தனர்.”
தேசப் பற்று என்பதன் பொருள் என்ன?
பேராசிரியர் இர்ஃபான் ஹபிப் உடனான கலந்துரையாடலானது தற்போதைய அரசியல் மற்றும் கல்வி பற்றியதாக இருந்ததால், தேசியவாதம் மற்றும் தேசப் பற்றும் இதற்கிடையே விவாதிக்கப்பட்டது.
இந்தி திரைப்படங்கள் முதல் ரேடியோ ஒலிபரப்புகள் வரை, பள்ளி விவாதங்கள் முதல் இதழ்களின் செய்திகள் வரை இந்த பிரச்சனையே பேசப்படுகிறது.
ஒரு குழு கருதுவது என்னவென்றால், தேசியவாதம் மற்றும் தேசப்பற்று என இரண்டும் ஒன்றுடன் ஒன்று உள்நோக்குடன் பிணைக்கப்பட்டிருப்பதாக நினைக்கின்றனர்.
இர்ஃபான் ஹபிப் கூற்றின்படி,”தேசப் பற்று என்பது உங்கள் நாட்டை புகழ்ந்து கொண்டே இருப்பதல்ல. எனது நாடு சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம். ஆனால் நான் அதனுடன் இருப்பேன் என்பது தேசப் பற்று அல்ல. உண்மையான தேசப்பற்று என்பது எனது நாடு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதாகும்.”
இந்திய வரலாற்றைப் பொருத்தவரையிலும் ஆட்சியாளர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் ஏறத்தாழ அனைவருமே சகிப்புத்தன்மை கொண்டிருந்தனர். இதுதான் உலகின் மிகச்சிறந்த ஒன்று.” என்கிறார் ஹபிப்.
“உலகிலேயே அனைத்து மதங்களைப் பற்றியும் பேசும் முதல் புத்தகம் இந்தியாவில் தான் ஷாஜஹானின் ஆட்சியில் எழுதப்பட்டது. இதில் பார்சி, கிறிஸ்தவம், இந்து, ஜைனம் என அனைத்து மதங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.”
“இந்த விஷயங்களை நீங்கள் தவறவிட்டால், நம்முடைய சொந்த நாட்டின் பெருமைதான் குறையும். நம்முடைய சாதனைகளை நாமே மறப்போம்” என்று பேராசிரியர் ஹபிப் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு